Last Updated : 29 Sep, 2018 04:07 PM

 

Published : 29 Sep 2018 04:07 PM
Last Updated : 29 Sep 2018 04:07 PM

மே.இ.தீவுகள் தொடர்: விராட் கோலி இடம் பெறுவாரா?-பும்ரா, புவனேஷ்வருக்கு ஓய்வு

 

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக அடுத்த மாதம் தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அடுத்துவரும் ஆஸ்திரேலியத் தொடருக்குத் தயாராகும் வகையில், வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய தலைமைத் தேர்வாளர் எம்எஸ்கே. பிரசாத் தலைமையில் புதன்கிழமை தேர்வாளர் குழுக்கூட்டம் கூடுவதாக இருந்தது.

ஆனால், அஸ்வின், விராட் கோலி, இசாந்த் சர்மா ஆகியோருக்கான யோயோ டெஸ்ட் மற்றும் உடற்தகுதி தேர்வு இருந்ததால், அந்த ஆய்வுகள் முடிந்தபின் அறிக்கை கிடைத்தபின் வீரர்கள் தேர்வு வைத்துக்கொள்ளத் தேர்வாளர் தலைவர் பிரசாத் முடிவு செய்தார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணமடைந்தது தொடர்பாக இறுதி அறிக்கை அணியின் மருத்துவர் குழுவிடம் இருந்து கிடைக்காததால், அவர் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், விராட் கோலிக்கு கை மணிக்கட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்த அறிக்கையை இன்னும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் மருத்துவர் குழு தேர்வுக்குழுவினரிடம் அளிக்கவில்லை. அந்த காயம் சாதாரண காயமாக இருந்தால், விராட் கோலியை மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்கு தேர்வு செய்வதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஒருவேளை காயம் தீவிரமாக இருக்குமெனக் கருதினால், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமான அணி அறிவிக்கப்படும் அதில்விராட் கோலி இடம் பெறுவார் என்பதை உறுதியாகக் கூற முடியாது. வீரர்கள் அறிவிப்பு இன்று மாலையோ அல்லது நாளையோ இருக்கும் எனத் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அதற்காகத் தயாராகும் வகையில் புவனேஷ்வர் குமார், பும்ராவுக்கு மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஓய்வு அளிக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இங்கிலாந்துத் தொடரில் இருந்து ஆசியக் கோப்பை வரை பும்ரா 133 ஓவர்கள் வீசியுள்ளார். ஆசியக் கோப்பையில் கடும் வெயிலுக்கு மத்தியில் தனது முழுமையான 10 ஓவரை வீசியுள்ளார். ஆதலால், ஆஸ்திரேலியத் தொடருக்குச் செல்லும் வகையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும், புனேஷ்குமாருக்கும் ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆறுதல் அளிக்கும் வகையில், சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது உடற்தகுதியை நிரூபித்துவிட்டார் என்பதால், அணித்தேர்வுக்கு தயாராகியுள்ளார்.

 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொதப்பலாக விளையாடிய ஷிகர் தவண், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான தொடரில் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. இவருக்கு பதிலாக இளம்வீரரும், டெண்டுல்கரின் ஆசி பெற்றவரும், மும்பையைச் சேர்ந்தவருமான பிரித்வி ஷா சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

மேலும் கர்நாடக வீரர் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, கருண் நாயர் ஆகியோரும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் அனைவரும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இவர்களின் செயல்பாட்டைப் பொருத்து அணித் தேர்வு நாளை அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x