Last Updated : 29 Sep, 2018 02:10 PM

 

Published : 29 Sep 2018 02:10 PM
Last Updated : 29 Sep 2018 02:10 PM

‘தலைமை ஏற்கத் தயார்; வீரர்களுக்கு உத்தரவாதம் தேவை’ - விராட் கோலியை மறைமுகமாகச் சாடிய ரோஹித் சர்மா

 

இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக பதவி ஏற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். தலைமைப்பண்பில் மிகவும் முக்கியமானது, வீரர்களுக்கு அளிக்கும் உத்தரவாதம் அதை நான் செய்தேன் என நம்புகிறேன் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விராட் கோலிக்கு அடுத்ததாகத் தான் கேப்டன் பதவியே ஏற்கத் தயாராக இருப்பதாக ரோஹித் சர்மா மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இதுவரை 2 கோப்பைகளை வென்றுள்ளது இலங்கையில் நடந்த நிடாஹாஸ் கோப்பையையும், தற்போது ஆசியக் கோப்பையையும் வென்றுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கோப்பையை ரோஹித் சர்மா பெற்றுக்கொடுத்து தலைமைப்பின் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

ஆசியக் கோப்பையை 7-வது முறையாக வென்றபின் ஊடகங்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக வரத் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

உண்மையாக நான் தயாராக இருக்கிறேன். இதில் என்ன தயக்கம் இருக்கிறது. என் தலைமையில் கோப்பையை வென்றுவிட்டோமே. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் கேப்டன் பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

அணிக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் போது சில சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதிலும் பொறுப்பு கேப்டனாக ஒரு தொடருக்கு வருபவருக்கு பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில்தான் அந்தப் பொறுப்பு கொடுக்கப்படும். எனக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்படும் போது, மூத்த வீரர்கள் அணியில் இல்லை. அவர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவார்கள் என்றாலும், இதைப் புரிந்து கொண்டு இருக்கும் வீரர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது சிறப்பாக பயன்படுத்தி, மேலே எழும்பி வந்திருக்கிறோம். நானும், அணியின் பயிற்சியாளரும் வீரர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளித்தோம், ஒவ்வொரு வீரருக்கும் உறுதியளித்து, எவ்வித நெருக்கடியில்லாமல் விளையாட உத்தரவாதம் அளித்தோம்.

ஒவ்வொரு அணியிலும் இருக்கும் நிலையற்ற சூழலை புரிந்து கொண்டு அணியை வழிநடத்திச் செல்வது அவசியம். இந்தத் தொடரில் அதை அனைத்தையும் புரிந்து கொண்டு நான் அணியை வழிநடத்தி இருக்கிறேன்.

கேப்டனாக தலைமை ஏற்க இருப்பவர் சகவீரர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பவராக இருக்க வேண்டும், பதற்றத்தையும், நாளை விளையாடுவோமா என்ற அச்சமான சூழலையும் உண்டாக்கக் கூடாது.

நாங்கள் துபாய் வந்த உடனே நான் தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு இருவருக்கும் நீங்கள் இந்த தொடர் முழுவதும் விளையாடுவீர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் விளையாடுங்கள் என்று உறுதியளித்துவிட்டேன். நான் அளித்த உறுதிமொழியை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டனர். இப்படித்தான் வீரர்களை நாம் உருவாக்க வேண்டும். இரு போட்டிகள் சிறப்பாக செயல்படவில்லை, அடுத்த போட்டியில் விளையாடுவோமா என்ற நிலையற்ற தன்மையுடன் வீரர்களை விடக்கூடாது.

நான் அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை அளித்தேன், விளையாட வாய்ப்பும் கொடுத்தேன். வீரர்களின் திறமையை அறிந்து, புரிந்து கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒரு போட்டியில் ஒரு வீரரின் திறமையை தீர்மானித்துவிட முடியாது.

 

என்னைப் பொருத்தவரை இன்னும் இந்திய அணியில் 4-வது வீரர், 6-வது வீரருக்குச் சரியான வீரர்கள் அமையவில்லை. உலகக்கோப்பைக்கு இன்னும் சில போட்டிகள் இருக்கையில் சரியான வீரர்கள் அமைந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இப்போது அதைப்பற்றிப் பேச சரியான நேரம் இல்லை. உலகக் கோப்பை வரட்டும் தெளிவான நிலைப்பாடு எடுப்போம். அடுத்து வரும் போட்டிகள் நாம் கவலைப்படும் இடத்துக்கான வீரர்களைக் கண்டுபிடிக்க சரியான வாய்ப்பாக அமையும்.

இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணி ஆசியக் கோப்பையை வென்றதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தக் காலநிலை மிகவும் வெப்பமானது, இதைத் தாங்கிக்கொண்டு வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து வந்துவிட்டு, திடீரென அதிகமான வெயிலில் நின்று விளையாடுவது எளிதானது அல்ல. குறிப்பாக நமக்குக் கிடைத்திருக்கும் காலநிலையை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தப் போட்டிக்காக நாங்கள் தயாராகி இருந்த விதம் சரியாக இருந்தது. பல வீரர்கள் முன்கூட்டியே இங்கு வந்துவிட்டார்கள், சிலர் இங்கிலாந்தில் இருந்தபடியே நேரடியாக துபாய் வந்துவிட்டோம். வீரர்களின் உடற்தகுதி முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வீரர்கள் அதிகமான உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அனைத்துப் போட்டிகளிலும் இவர்களின் பங்களிப்பு அருமை.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x