Published : 27 Sep 2018 07:58 PM
Last Updated : 27 Sep 2018 07:58 PM

நான் தூங்கி 6 நாட்களாகின்றன என்றால் நம்பவா போகிறார்கள்?: பாக். கேப்டன் சர்பராஸ் வேதனை

ஆசியக் கோப்பை பலிவாங்கியதில் இலங்கை கேப்டன் மேத்யூஸ் முன்னிலை வகிக்க, அடுத்ததாக வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஆப்கன் அணிக்கு இனிய நினைவுகளை அளிக்க மாறாக பாகிஸ்தானுக்கு மறக்க வேண்டிய துர்சொப்பனமாகியுள்ளது. தோல்வி, வெற்றி பிரச்சனையல்ல, ஆனால் விளையாடிய விதம் சுத்த மோசமாக இருந்தது, போர்க்குணத்துக்குப் பெயர் பெற்ற பாகிஸ்தான் அது எதுவுமற்று சரணடைந்தது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாக சர்பராஸ் அகமடின் கேப்டன்சி கோளாறுகள் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருவதால் அவர் தலை (மை)யின் மேல் கத்தித் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவரது பேட்டிங் பார்ம் குறித்தும் கடும் கேள்விகள் எழுந்தன, காரணம் சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக அரைசதம் கண்ட பிறகு அவரது சராசரி 17.2. அன்று தீப்பொறி பறக்கும் செய்தியாளர்கள் கேள்விகளுக்கிடையே சர்பராஸ் சிக்கிய போது அவர் கூறியதாவது:

“இதோ பாருங்கள், கேப்டன்சி அழுத்தம் என்பது சாதாரணமல்ல. பாகிஸ்தான் கேப்டன்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அழுத்தம் உண்டு. இதில் பேட்டிங்கிலும் ஆடாமல் அணியும் தோல்வி தழுவும்போது அழுத்தம் அதிகரிக்கவே செய்யும்.

உள்ளபடியே கூற வேண்டுமெனில் கடந்த 6 இரவுகளாக நான் உறங்கவில்லை என்றால் யாராவது நம்பவா போகிறார்கள்? ஆனால் இதுதான் வாழ்க்கையின் ஓர் அங்கம். இது தொடரவே செய்யும். ஆனால் இதற்காக உடனே பதற்றப் பொத்தானை எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

விராட் கோலி, ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக 3 வடிவங்களிலும் அதிகப்போட்டிகளில் ஆடுபவராக இருக்கிறார் சர்பராஸ் இதனால் பணிச்சுமை அதிகமா என்று கேட்ட போது, “எனக்கு ஓய்வு அளிப்பது பற்றி நான் முடிவெடுக்க முடியாது, அணித்தேர்வுக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். அது என் வேலையல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே. நான் விளையாடுவேன், விளையாடிக் கொண்டேயிருப்பேன்” என்றார் சர்பராஸ் அகமட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x