Last Updated : 27 Sep, 2018 07:20 PM

 

Published : 27 Sep 2018 07:20 PM
Last Updated : 27 Sep 2018 07:20 PM

பாகிஸ்தானை விட அபாயகரமான வங்கதேசத்துடன் பைனலில் நாளை இந்தியா மோதல்: வரலாறு யார் பக்கம்; இதுவரை வங்கத்துடன் நடந்த போட்டிகள் ஒரு பார்வை

 

ஆசியக் கோப்பையை இந்திய அணி 7-வது முறையாக வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியஅணி வங்கதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானைக் காட்டிலும் அபாயகரமான அணியான வங்கதேசம் எதிர்பாராத நேரத்தில் வலுவான அணிகளுக்கே அதிர்ச்சித் தோல்வி அளிக்கும் வல்லமை படைத்தது. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு வங்கதேசம் முன்னேறியதே சிறந்த சான்றாகும்.

ஆனால், வரலாற்றை சற்றுப்புரட்டிப் பார்த்தால், இதுவரை பலமுறை பல்வேறு இறுதிப்போட்டிகளில் வங்கதேசத்தை இந்திய அணி சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 10 முறை மோதியுள்ள அதில் 9 முறை இந்திய அணி வென்றுள்ளது, வங்கதேசம் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது.

ஆசியக் கோப்பையில் இதுவரை 6 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது, இந்தப் போட்டியில் வென்றால் 7-வது முறையாக வென்ற அணி என்ற பெருமையைப் பெறும்.

அதேசமயம், வங்கதேசம் 3-வது முறையாக பைனலுக்கு முன்னேறுகிறது. இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் தமிம் இக்பால், சஹிப் அல் ஹசன் இருவர் காயத்தால் விலகியுள்ளபோதிலும் வங்கதேசம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இவர்கள் இல்லாததும் ஒருவிதத்தில் அந்த அணிக்கு பலவீனம் என்பதையும் மறந்துவிட முடியாது.

இந்தியஅணியைப் பொருத்தவரை விராட் கோலி இல்லாமல் ரோஹித் சர்மா தலையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றத் தீவிரமாக இருக்கிறது. இங்கிலாந்தில் டெஸ்ட், ஒருநாள் தொடரையும் இழந்து வந்த இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை கிடைத்தால், காயங்களுக்கு இதமான மருந்திட்டதாக அமையும். அடுத்துவரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கூடுதல் உற்சாகத்துடன் எதிர்கொள்ளும்.

ஹாங்காங் அணிக்கு எதிராக முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி வெற்றிகளுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளனர்.

இருவரும் தலா ஒருசதம் அடித்து, நல்ல ஃபார்மில் உள்ளனர். ரோஹித் சர்மா 269 ரன்கள் எடுக்க தவண் 327 ரன்களில் முதலிடத்தில் உள்ளார். ஆனால், நடுவரிசை பேட்டிங்தான் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தொடக்கம் சிறப்பாக இருந்த நிலையில் நடுவரிசை சிறப்பாக விளையாடவில்லை. தோனி, ராயுடு,மணிஷ் பாண்டே, ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்து இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

அதிலும் வலுவான வீரர் தோனி இருக்கிறார் என்ற ஆறுதல் மட்டுமே பட்டுக்கொள்ள வேண்டியதுதான் ஆனால் இதுவரை ரன்சேர்க்கவில்லை. ஆதலால், பைனலிலும் நடுவரிசை வீரர்கள் சொதப்பிவிடாமல் விளையாட வேண்டியது அவசியம்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், பும்ரா, யஜூவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாகவே பணியைச் செய்கின்றனர்.

வங்கதேச அணியைப் பொருத்தவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான், ருபெல் ஹூசைன், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் பந்துவீச்சில இன்னும் மோர்தசா,, மகமத்துல்லா ஆகியோர் இருக்கிறார்கள், மிதுன் அன்று பாகிஸ்தானுக்கு எதிராக 12/3 என்ற நிலையில் முஷ்பிகுருடன் இணைந்து இருவரும் 144 ரன்கள் கூட்டணி அமைத்தனர் மிதுன் 60 ரன்களுக்கு மிகச்சிறப்பாக ஆடினார்.

2015-லிருந்து கோபம்

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக நோபால் கொடுக்கப்பட்டதில் இருந்தே அந்த அணியினர் ஆறாத ரணத்துடனே இருக்கிறார்கள். அதை ஒவ்வொரு முறையும் உலக அரங்கில் இந்திய அணி முக்கிய ஆட்டங்களில் தோற்கும் போது கிண்டல் செய்துதங்கள் மகிழ்ச்சியைத் தீர்த்துக்கொண்டனர்.

குறிப்பாக, 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்தை ஒரு ரன்னில் இந்திய அணி வீழ்த்தியது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்திய அணி தோற்றபோது, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் மகிழ்ச்சி தெரிவித்து சமூக ஊடகங்களில் கொண்டாடினார்.

இலங்கையில் நடந்த நிடாஹாஸ் கோப்பையிலும் இந்திய அணியை பழிதீர்க்கக் காத்திருந்தனர் வங்கதேச அணியினர். ஆனால், கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்தியாவுக்கு எதிராக நாகின்டான்ஸ் ஆட முடியாமல் போனது.

ஒரு நாள், டி20, டெஸ்ட் ஆகிய அனைத்து விதமான போட்டிகளிலும் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை வங்கதேசத்தால் வீழ்த்த முடியவில்லை.

2016-ஆசியக்கோப்பை

2016-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்தகாரணத்தால் போட்டி 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 15 ஓவர்களில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. 121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. தவண் 60ரன்களும், கோலி 41 நாட்அவுட், தோனி 20 ரன்களுடன் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த போட்டியிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கணக்கில் கோப்பையை வெல்ல முடியாமல் வங்கதேசம் புழுங்கியது.

நிடாஹாஸ் கோப்பை டி20

இலங்கையில் நடந்த நிடாஹ்ஸ் கோப்பை டி20 போட்டியில் தொடக்கம் முதலே வங்கதேச அணி எதிரணிகளை கிண்டல் செய்வதும், ஜெயித்து விட்டால் பாம்பு நடனம் ஆடுவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். இதனால், ஒரு போட்டியில் இலங்கை அணியினருக்கும், வங்கதேச அணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கும் பின்பும் வங்கதேச வீரர்கள் மாறவில்லை.

இந்தியாவையும் வென்று பாம்பு நடனம் ஆட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்தனர், ஆனால், இறுதிப்போட்டியில் நடந்ததே வேறு. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

ஆக இதற்கு முன் நடந்த ஆசியக் கோப்பை, நிடாஹாஸ் பைனலில் இந்திய அணியே வென்றுள்ளது சாதகமான அம்சம். ஆசியக் கோப்பையிலும் இந்தியஅணி 9 முறையும், வங்கதேசம் ஒருமுறையும் மட்டுமே வென்றுள்ளது. வரலாற்றை மாற்ற வங்கதேசம் கடுமையாக முயற்சிக்கும், அதன் ஜம்பம் பலிக்குமாஎன்பது நாளைத் தெரியும்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குப் போட்டி தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x