Published : 27 Sep 2018 08:26 AM
Last Updated : 27 Sep 2018 08:26 AM

ஆசியக்கோப்பை: பிரமாத பவுலிங், பீல்டிங்கில் பாகிஸ்தானை வெளியேற்றி ஃபைனலில் வங்கதேசம்

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று பாகிஸ்தான் வீட்டை நோக்கி நடையைக் கட்டியது.

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த வங்கதேச அணி 12/3 என்ற நிலையிலிருந்து மொகமது மிதுன் (60), முஷ்பிகுர் ரஹிம் (99) ஆகியோரது அற்புதமான 144 ரன் கூட்டணியில் முனைப்புடன் அணியை நிலைப்படுத்த 48.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது வெற்றிக்கான ரன் இல்லைதான், ஆனாலும் வெற்றிபெற முடியாததை வெற்றிக்கான இலக்காக மாற்றுவதில்தான் ஓர் அணியின் திறமையும் முனைப்பும் உள்ளது, அந்த வகையில் வங்கதேசம் அபாரமான பீல்டிங், காற்றுப்புகா இறுக்கமான பவுலிங் ஆகியவை மூலம் பாகிஸ்தானை 202/9 என்று வெளியேற்றி இறுதியில் இந்திய அணியைச் சந்திக்கிறது.

இந்தத் தொடர் முழுதுமே பீல்டிங் படுமோசமாக அமைந்தது பாகிஸ்தானுக்கு, ஸ்பூனில் சாப்பிட்டாலும் கையில் சாப்பிட்டாலும் உணவு வாய்க்குச் செல்லும் முன் நழுவ விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது.

வங்கதேச அணி அதன் முக்கிய வீரர்களான தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை காயத்துக்கு இழந்துள்ள நிலையில் இந்த வெற்றி மிக முக்கியமானது.

ஆப்கான் அணிக்கு மிகப்பிரமாதமான தொடராக ஆசியக் கோப்பை அமைய, பாகிஸ்தானுக்கோ மறக்க வேண்டிய துர்சொப்பனமானது ஆசியக் கோப்பை.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் தொலைக்காட்சி கணக்கீடுகளுக்கு போதுமான ‘மைலேஜ்’ தரவில்லை, அது எதிர்பார்த்த அளவில் வாணவேடிக்கையாகாமல், புஸ்வாணம் ஆகியது. ஆகவே கிரிக்கெட் பைத்திய நாடுகளான இந்தியா-வங்கதேசம் மோதினால்தான் ஏதாவது ‘மைலேஜ்’ பார்க்க முடியும் என்று தெரிகிறது.

புதிது புதிதாக ‘வைரி’களை உருவாக்கிக் கொண்டே போக வேண்டாமா? அந்தவகையில் இந்தியா-வங்கதேச இறுதிப் போட்டி.

ஜுனைத், முஷ்பிகுர் ரஹிம், மிதுன் அபாரம்:

மொகமது ஆமிரின் பந்து வீச்சில் திடீரென ஒரு தாக்கம் குறைய அவருக்குப் பதில் இன்னொரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜுனைத் கானை அணியில் சேர்த்தனர். அவர் தன்னைச் சேர்த்ததற்கு நன்றிக்கடனாக அபாரமாக வீசி 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சவுமியா சர்க்காருக்கு சில பந்துகளை முன்னால் வந்து ஆடுமாறு வீசிவிட்டு திடீரென தோள்பட்டை உயரத்துக்கு ஒருஎகிறு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார், இதனால் புல் ஷாட் ஆடத் திணறிய சவுமியா கொடியேற்றினார் ஆன் திசையில் கேட்ச் ஆனது. பிறகு லிட்டன் தாஸுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் விளையாட முடியாத ஒரு பந்தை வீசி பவுல்டு செய்தார்.

மொமினுல் ஹக் 5 ரன்களில் இருந்த போது ஷாஹீன் ஷா அப்ரீடி அதிவேகமாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர ஒன்றும் செய்ய முடியவில்லை ஆஃப் ஸ்டம்ப் பறந்து சென்று விழுந்தது. 12/3.

இதற்கிடையே இன்னிங்சில் 10வது ஓவரில் பாக். இடது கை ஸ்பின்னர் மொகமது நவாஸ், மொகமது மிதுனுக்கு வீசிய ஒரு பந்தை மிதுன் கால்காப்பில் வாங்க பெரிய சப்த முறையீடு எழுந்தது. நடுவர் தெளிவாக நாட் அவுட் என்றார். பார்க்கும் போதே வெளியில் சென்ற பந்து என்று சாதாரணக் கண்களுக்கே தெரிந்தது.

இது பவுலர் உட்பட பாகிஸ்தானின் 11 வீரர்களுக்கும் தெரியவில்லையா என்ன என்பது புரியவில்லை, அனைவரும் கூடி ரிவியூ செய்தனர். ஆனால் பந்து கால்காப்பில் படும்போது கால் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருந்தது. விதிப்படியே நாட் அவுட், அங்கேயே ரிவியூ முடிந்தது.

ஆனால் மொகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம் 144 ரன்கள் கூட்டணி அமைத்தனர், அனைத்தையும் விட மூளையை உபயோகப்படுத்தி ஆடினர். 116 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் இன்னொரு சதத்துக்கான அனைத்து தகுதிகளையும் உடைய இன்னிங்ஸாக அமைய, சத வாய்ப்பு பறிபோனது. ஷாஹின் ஷா அஃப்ரீடியின் பந்தில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து 99 ரன்களில் வெளியேறிய முதல் வங்கதேச வீரர் என்ற எதிர்மறை சாதனைக்கு உரியவரானார்.

தொடக்கத்தில் அற்புதமாக வீசிய ஜுனைத் கான் இறுதி ஓவர்களையும் கட்டுக்கோப்புடன் வீசி 9-1-19-4 என்று அபாரமான பவுலிங்கை நிகழ்த்தினார். ஜுனைத் கான், அப்ரீடியை தலா 4 ஓவர்களில் சர்பராஸ் கட் செய்ய ஹசன் அலிக்கு சரியான தொடராக அமையவில்லை அவர் முதல் ஓவரிலேயே 7 ரன்களைக் கொடுத்ததோடு 60 ரன்களை மொத்தமாக விட்டுக் கொடுத்தார். ஷதாப் கானின் பந்து வீச்சும் (1/52) மிடில் ஓவர்களில் கைகொடுக்கவில்லை. முஷ்பிகுர், மொகமது மிதுன் நன்றாக ஆடினர். சர்பராஸ் அகமடின் கேள்விக்குரிய கேப்டன்சியும் ஒரு காரணம். தேவையான போது ஸ்லிப் இல்லை, பந்து எட்ஜ் ஆகிச் சென்றது, தேவையற்ற தருணத்தில் ஸ்லிப் வைக்கப்பட்டது. மேலும் வெகு சீக்கிரத்திலேயே சர்பராஸ் ரன்தடுப்பு களவியூகத்துக்கு மாறி விட்டார்.

34வது ஓவரில் ஹசன் அலி 60 ரன்கள் எடுத்த மிதுனை வீழ்த்தினார். இம்ருல் கயேஸ் சோபிக்கவில்லை 9 ரன்களில் ஷதாப் கானிடம் வெளியேறினார். முஷ்பிகுர், மஹ்முதுல்லா இணைந்து 30 ரன்கள் கூட்டணி அமைத்தனர், மஹ்முதுல்லா 25 ரன்களில் ஜுனைத்கானிடம் பவுல்டு ஆனார். முஷ்பிகுர் ரஹிம் 6வது விக்கெட்டாக வெளியேற வங்கதேசம் 250 ரன்களை எட்ட முடியாமல் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மெஹதி ஹசன், மஷ்ரபே முறையே 12, 13 ரன்கள் பங்களிப்புச் செய்தனர்.

முஸ்தபிசுர் முன்னிலை வகிக்க, வங்கதேச அபார பவுலிங், பீல்டிங்

240 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஃபகார் ஜமான் மீண்டும் அதிர்ச்சியளித்தார். முதல் ஓவரிலேயே தங்களது சிறந்த ஸ்பின்னர் மெஹதி ஹசனை மோர்டசா கொண்டு வர 5வது பந்தை சற்றே மேலேறி வந்து ஃபகார் ஜமான் மிட் ஆனில் அடிக்க, வலுவான ஷாட்தான் ஆனால் அங்கே ரூபல் ஹுசைன் மிக அருமையான, அசாதாரணமான கேட்சை எடுக்க ஃபகார் ஜமான் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

அடுத்த ஓவரிலேயே இன்னொரு அதிர்ச்சிக் காத்திருந்தது, பார்மில் உள்ள பாபர் ஆஸம் 1 ரன்னில் முஸ்தபிசுர் பந்து ஒன்று ‘சுர்’ என்று வர எல்.பி.ஆகி வெளியேறினார். நல்ல வேளையாக ரிவியூ செய்து காலிசெய்யவில்லை. சர்பராஸ் இறங்கி 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து முஸ்தபிசுர் பந்தை சரியாக ஆடாமல் எட்ஜ் செய்ய விக்கெட் கீப்பர் டைவ் அடித்து அருமையான கேட்சை எடுத்தார். 18/3 என்று மோசமான தொடக்கம் கண்டது.

இமாம் உல் ஹக், ஷோயப் மாலிக் இணைந்து சுமார் 17 ஓவர்களில் 67 ரன்கள் என்ற மந்தமான கூட்டணி அமைத்தனர். ஷோயப் மாலிக் 51 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்த போது ரூபல் ஹுசைன் பந்தை மிட்விக்கெட் மேல் லேசாகத் தூக்கி விட நினைத்தார், ஆனால் அங்கு மஷ்ரபே மோர்டசா பிரமிக்க வைக்கும் ஒரு கேட்சை எடுத்தார், இதுதான் திருப்பு முனையாக அமைந்தது. இதுதான் அந்த கவனம் என்பது, எதிரணியினர் நிலைப்பெறும் போது கூட உருவாகும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுதன் சிறந்த அணிகளின் திறமையாகும். வங்கதேசம் நேற்று அப்படித்தான் ஆடியது.

ஷதாப் கான் 24 பந்துகள் கிரீசில் நின்று 4 ரன்கள் எடுத்து வெறுப்படைந்த, வெறுப்பேற்றிய இன்னிங்சில் சவுமியா சர்க்காரிடம் நடையைக் கட்டினார். பாகிஸ்தான் 25 ஓவர்கள் முடிந்த பிறகு 94/5.

பிறகு இமாம் உல் ஹக், அபாய ஆசிப் அலி இணைந்து 71 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இமாம் உல் ஹக் 105 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்தாலும் முஷ்பிகுர் ரஹிம் ஆடியது போல் புத்திசாலித்தனமாக ஆடவில்லை, அனாயசமான சவுகரியத்துடனும் ஆடவில்லை, ஆசிப் அலி, மெஹதி ஹசன் மிராஜின் டாட்பால்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் மேலேறி வந்தார் பந்து அவரை ஏமாற்றி கீப்பரிடம் செல்ல லிட்டன் தாஸ் ஸ்டம்பிங் செய்தார். இமாம் உல் ஹக்கும் ரன் விகிதம் கட்டுக்குள் இருக்கும் போதே மஹ்முதுல்லா பந்தை மேலேறி வந்து தூக்க நினைத்து ஸ்டம்ப்டு ஆனார். ஆசிப் அலிக்கு ஒரு முக்கிய கேட்சை விட்டு மோர்டசாவின் முறைப்புக்கு ஆளான கீப்பர் லிட்டன் தாஸ் 2 ஸ்டம்பிங்குகள் மூலம் ஈடுகட்டினார்.

ஹசன் அலி, மொகமது நவாஸ் ஆகியோரை முஸ்தபிசுர் கழற்றி 10-2-43-4 என்று உலகின் சிறந்த பினிஷிங் பவுலர் தான் தானோ என்று நினைக்கும்படி செய்தார், மெஹதி ஹசன் 10 ஓவர்1 மெயன் 28 ரன் 2 விக்கெட். ரூபல் ஹுசைன் மஹ்முதுல்லா, சவுமியா சர்க்கார் என்று அனைவருமே மிகவும் டைட்டாக வைத்திருந்தனர், அருமையான பீல்டிங், கேட்சிங் என்று வங்கதேச அணி இறுதிக்குள் நுழையும் தீவிரத்துடன் ஆட, படுமோசமான ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானுக்கு மறக்க வேண்டிய பயங்கரசொப்பனமாக மாறிவிட்டது. ஆட்ட நாயகன் முஷ்பிகுர் ரஹிம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x