Published : 26 Sep 2018 09:33 AM
Last Updated : 26 Sep 2018 09:33 AM

விதிப்படியா நடந்தது? 2 தவறான தீர்ப்பு: தோனி கேப்டன்சியில் ஆப்கானுடன் பரபரப்பு ‘டை’

இந்திய-ஆப்கான் போட்டியின் வெற்றி தோல்விகள் எந்த அணியையும் பாதிக்காது என்ற வெற்று போட்டியாகப் போன நிலையில் சுவாரசியம் கூட்ட இந்திய அணி நிர்வாகம் தோனியிடம் கேப்டன்சியை அளித்து ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’  ‘டிஆர்பி’-வர்த்தக சுவாரசியத்தை, ஒரு கட்டமைக்கப்பட்ட சுவாரசியத்தை, உருவாக்கியது.

ஆட்டம் தொடங்கும் முன் டாஸில் தோனியிடம் அவருக்கு கேப்டன்சி வழங்கப்பட்டது குறித்து கேட்ட போது தனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டென்றும்  விதிப்படிதான் நடக்கிறது என்றும் தெரிவித்தார். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று விதியின் மீது நம்பிக்கை உள்ளவர் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனானது எப்படி என்ற கேள்வியை ஒருவரும் அவரிடம் எழுப்பவில்லை. மாறாக அவரது வெற்றியின் ரகசியமே அவரது இந்த விதிமீதான நம்பிக்கைதான் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டுப் பத்திரம்வேறு வழங்கிவிட்டார்!!

டாஸ் வென்ற ஆப்கான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது. 110/0 என்ற நிலையிலிருந்து ரஷீத் கான், மொகமது நபி, அப்தாப் ஆலம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்து வரிசையாகச் சரிந்து ‘விதிப்படி’ ட்ரா ஆனது.

தோனிக்கும், தினேஷ் கார்த்திக்கிற்கும் நடுவர் நாட் அவுட்டை அவுட் கொடுத்ததை தோனி ‘விதிப்படி’ என்று ஏற்றுக் கொள்வாரா?

நாம் குறிப்பிட்டது போலவே இந்தியாவின் நடுவரிசை வீரர்கள் மீண்டும் சொதப்ப கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ரஷீத் கான் கடைசி ஓவரை வீசினார்.ஜடேஜா ஸ்ட்ரைக். முதல் பந்தை டீப் மிட்விக்கெட்டில் அடித்தார் ரன் ஓடவில்லை, காரணம் எதிர்முனையில் கலீல் அகமட்.

அடுத்த பந்தை ஸ்லாக் ஸ்வீப்பை மிகச்சரியாக ஆடி பவுண்டரி விளாசினார் ஜடேஜா. ஆனால் 3வது பந்தில் ஸ்கொயர் லெக்கில் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்தார், கலீல் ஸ்ட்ரைக்கு வந்தார், இந்த சிங்கிள் சமயோசிதமானது அல்ல. அடுத்த பந்து கலீல் என்ன வீசினார் என்றே கலீல் அகமதுவுக்குத் தெரியவில்லை, மட்டையின் உள்விளிம்பில் பட்டு செல்ல 1 ரன்னை எடுத்தார். ஸ்கோர் சமன் ஆனது. ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரஷீத் கான் வீசிய உள்ளே வந்த பந்தை புல் ஆட நினைத்து கொடியேற்றினார், மிட்விக்கெட்டில் ஸத்ரான் கேட்ச் எடுக்க ஆப்கான் வீரர்கள் ஆட்டம் டை ஆனதில் கொண்டாட்டத்தைப் போட, இந்திய அணியினர் ஏமாற்றமடைந்தனர்.

 

நடுவரின் இரண்டு அபத்த தீர்ப்புகள்:

கே.எல்.ராகுல், அம்பாத்தி ராயுடு 110 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் ரிவியூவை ராகுல் விரயம் செய்த நிலையில் 17 பந்துகளில் தடுமாறி 8 ரன்கள் எடுத்த தோனி ஜாவேத் அகமதி பந்தை பிளிக் ஆடப் பார்த்து கால்காப்பில் வாங்கினார். நடுவர் கிரிகரி பிராத்வெய்ட் கையை உயர்த்தினார், லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்து அது. அதே போல் தினேஷ் கார்த்திக் 66 பந்துகளில் 44 ரன்களுடன் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் நேரத்தில் மொகமது நபி பந்தில் காலில் வாங்கினார், பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி, லெக் ஸ்டம்பில்தான் தாக்கமும், ஆனால் இதுவும் லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தாகும். நாட் அவுட்டை அவுட் என்றார் கிரிகரி பிராத்வெய்ட். இந்த இரண்டு தீர்ப்புகள் இந்திய அணிக்கு ஆப்பு வைத்தது என்றால் மிகையாகாது.

மணீஷ் பாண்டே 15 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அடித்து நொறுக்க வேண்டிய பந்தை எட்ஜ் செய்து ஷசாத்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கால்கள் சுத்தமாக நகரவேயில்லை.

 

கேதார் ஜாதவ் 2 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது ரன்னர் முனையில் முஜீப் உர் ரஹ்மான் கையில் பட்டு பந்து ஸ்டம்பில் பட எதிர்முனை பேட்ஸ்மெனைப் பார்த்து அவர் நின்று கொண்டு இடது கையால் கிரீசிற்குள் மட்டையை வைக்க முயன்றார். ரன் அவுட்.

அப்தாப் ஆலம் கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் 6 ரன்களையே விட்டுக் கொடுத்தது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இந்த ஓவரில் நல்ல யார்க்கர்களை வீசினார் ஆப்கான் பீல்டிங்கும் கைகொடுத்தது. இதனால் குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் இருவரும் ரன் அவுட் ஆகினர். அபாயகரமான 3வது ரன்னிற்காக ஓடி ரன் அவுட். சித்தார்த் கவுல், ஷாகிதியின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

விரட்டலில் முதல் 8 ஓவர்களில் ரஷீத் கான் களத்தில் இல்லை, அவர் தசைப்பிடிப்பு காரணமாக இல்லை, பிறகு இந்திய ஸ்கோர் கிட்டத்தட்ட 100 ரன்களை நெருங்கும் வரையிலும் ரஷீத் கான் கொண்டு வரப்படவில்லை. பிறகு ராகுலை வீழ்த்தினார். கடைசி பந்தில் ஜடேஜாவை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

முன்னதாக ராகுலும், ராயுடுவும் பிரமாதமாக ஆடினர். அம்பாத்தி ராயுடு 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 49 பந்தில் 57 ரன்கள் எடுத்து நபியிடம் வெளியேறினார். ராகுல் 66 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ரஷீத் கானிடம் ரிவர்ஸ் ஸ்வீப்பில் தேவையில்லாமல் எல்.பி.ஆகி, தேவையில்லாமல் ரிவியூவையும் விரயம் செய்து வெளியேறினார்.

ஷசாத்தின் அசாத்திய சதம்; நபியின் அதிரடி

முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அருமையாக ஆடியது, தொடக்க வீரர் ஷஸாத் இதுவரையிலும் அதிக டாட்பால்களை விட்டுக் கொண்டிருந்தவர். நேற்று வெளுத்துக் கட்டினார், அவருக்கு தீபக் சாஹரின் லெந்த் நிரம்பப் பிடித்திருந்தது. அவர் 6வது விக்கெட்டாக அவுட் ஆகும் போது ஸ்கோர் 180. இவரது தனிப்பட்ட ஸ்கோர் 124. இதில் 11 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும். 88 பந்துகளில் சதம் அடித்தார். இவர் சதம் அடிக்கும் போது ஆப்கான் ஸ்கோர் 4  விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள்தான். ஒருமுறை ஷாகித் அப்ரீடி இந்தியாவுக்கு எதிராக ஜாகீர் கான், பாலாஜி, கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் அடங்கியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 45 பந்துகளி சதம் எடுத்தார் அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 131 ஆக இருந்தது. இதுநடந்தது 2005ல்.

 

புவனேஷ்வர், பும்ரா ஆகியோரில் ஒருவரையாவது வைத்துக் கொண்டிருக்கலாம், சாஹலும் இல்லை, இதனால் புகுந்து விளையாடினார் ஷஸாத். முதல் போட்டியை ஆடும் தீபக் சாஹரை ஸ்ரீகாந்த் வர்ணனையில் புகழ்ந்தார், ஆனால் அவரை கடுமையாக அடித்து நொறுக்கினார் ஷஸாத். அந்த லெந்தில் வீசக்கூடாது, 4 ஒவர் பவுலரையெல்லாம் 50 ஒவருக்குக் கொண்டு வந்தால் அப்படித்தான் ஆகும். ஜடேஜாவையும் வெளுத்தார் ஷஸாத், லாலிபாப் 'பவுலர்' (sic) கேதார் ஜாதவ்வையும் பொளந்து கட்டினார். குல்தீப் யாதவ்வை மட்டும் தடவினார்.

வேகப்பந்து வீச்சை ஷஸாத் புரட்டி எடுக்க தோனி வழக்கம் போல் தன் ஸ்பின் உத்திக்கு மாறினார், அது கை கொடுத்தது ஜடேஜா வீச ஜாவேத் அகமதி ஸ்டம்ப்டு ஆனார். பிறகு ரஹ்மத் ஷா பவுல்டு ஆனார்.

குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் பார்மில் இருக்கும் ஆப்கான் கேப்டன் அஷ்கர் ஆப்கான், ஷாகிதி இருவரையும் டக்கில் காலி செய்தார். 37 பந்துகளில் ஷஸாத் அரைசதம் கண்டார், ஷஸாத்துக்கு ராயுடு ஒரு கேட்ச் விட்டதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது 50 ரன்கள் 51 பந்துகளில்தான் வந்தது, ஒரு அவுட் தீர்ப்பை ரிவியூ மூலம் கடந்தார் ஷஸாத், கடைசியில் 116 பந்துகளில் 11 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 124 ரன்கள் எடுத்து ஜாதவ்விடம் அவுட் ஆனதில் நிச்சயம் ஏமாற்றமடைந்திருப்பார். ஸத்ரான் (20), ரஷீத் கான் (12) ஆகியோர் ஸ்டாண்ட் கொடுக்க மொகமது நபி 56 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 64 ரன்களுக்கு 48வது ஓவரில்ட் ஆட்டமிழக்க ஆப்கான் அணி மீண்டும் 250 கடந்து 252 ரன்கள் எடுத்தது. சாஹர் 4 ஓவர்கள் 37  ரன் 1 விக்கெட். ஜடேஜா 3 விக்கெட், குல்தீப் 2 விக்கெட். ஜாதவ் 7-27-1.

ஆட்ட நாயகனாக மிகச்சரியாக மொகமது ஷஸாத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x