Published : 23 Sep 2018 09:47 AM
Last Updated : 23 Sep 2018 09:47 AM

இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறுவது யார்?: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை; மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் ரோஹித் சர்மா குழுவினர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. லீக் சுற்றில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பலம் குறைந்த ஹாங்காங் அணிக்கு எதிராக கடைசி வரை போராடியே 26 ரன்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து ‘சூப்பர் 4’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நேற்று முன்தினம் வங்கதேசத்துடன் மோதியது. இதில் 174 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 82 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 104 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசினார்.

மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் 40, அம்பதி ராயுடு 13, தோனி 33 ரன்கள் சேர்த்தனர். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக செயல்பட்டு 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்நிலையில் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இன்று துபாயில் மீண்டும் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறும்.

இதனால் ரோஹித் சர்மா குழுவினர் கவனமாக செயல்படக்கூடும். முதல் ஆட்டத்தை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி குறைந்த அளவிலான இலக்கையே துரத்தி வெற்றி கண்டிருந்தது. அதிலும் இந்த இரு ஆட்டத்திலும் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கையே தேர்வு செய்தது.

எதிரணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டி, அதன் பின்னர் பேட்டிங்கில் தொய்வில்லாமல் விளையாடி விரைவாக இலக்கை எட்டுவதை இந்திய அணி சிறப்பாக செய்திருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுமார் 13 ஓவர்களையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக சுமார் 21 ஓவர்களையும் மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியிருந்தது இந்திய அணி. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது. பொதுவாக ரன்கள் குவிக்க சிரமமாக இருந்து வரும் துபாய் ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே பேட் செய்து வருகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடும் சோதனைக்கு உள்ளான ஷிகர் தவண் இந்தத் தொடரில் ரன்வேட்டை நிகழ்த்தி வருகிறார். ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவண், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டங்களில் முறையே 46 மற்றும் 40 ரன்கள் எடுத்து சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

அதேவேளையில் ரோஹித் சர்மா ஹாங்காங் அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அரை சதங்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அதிலும் ரோஹித் சர்மா விரைவாக ரன்கள் சேர்த்த விதம், எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கவும் தவறவில்லை.

இதுபோன்று நடுகள வரிசையில் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இதில் அம்பதி ராயுடு, ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்திருந்தார். பார்மில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். மூத்த வீரரான தோனி, வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கி 37 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்கள் சேர்த்தார். களத்தில் அவர், சிறிது நேரம் செலவிட்டுள்ளது அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த உதவுக்கூடும்.

லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டுவதற்கு காரணமாக இருந்த கேதார் ஜாதவ், மீண்டும் மேஜிக் செய்யக்கூடும் என கருதப்படுகிறது. அவருடன் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா மற்றும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பாகிஸ்தான் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்கக்கூடும். மேலும் தொடக்க ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் வேகக்கூட்டணி பாகிஸ்தான் வீரர்களுக்கு தொல்லை கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எளிதாக வென்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடி வென்றது. 258 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனுபவ வீரரான ஷோயிப் மாலிக் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி வெற்றி தேடிக்கொடுத்தார்.

அஃப்தாப் ஆலம் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தை வீணடித்த ஷோயிப் மாலிக் 2-வது பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்ஸருக்கும் விளாச 49.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியது. வெற்றிக்கான இன்னிங்ஸை விளையாடிய ஷோயிப் மாலிக் 43 பந்துகளில், 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக இமாம் உல் ஹக் 80, பாபர் அசாம் 66 ரன்கள் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்து கொத்திருந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.

பேட்டிங்கில் இவர்கள் 3 பேரும் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம். தொடக்க வீரர்களில் ஒருவரான பஹர் ஸமான் இந்தத் தொடரில் ரன்கள் சேர்க்க கடுமையாக திணறி வருகிறார். ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் சேர்த்த அவர், அடுத்த இரு ஆட்டங்களிலும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஆட்டமிழந்தார். இதனால் அவர், நெருக்கடியுடன் களமிறங்குகிறார்.

இதேபோல் பந்து வீச்சில் முகமது அமிரின் சமீபத்திய பார்மும் அணியை கவலையடையச் செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் முகமது அமிர், கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், அதன் பின்னர் நடைபெற்ற 9 ஆட்டங்களில் மொத்தமாக 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் அலி, உஸ்மான் கான் ஆகியோரும் ஆசிய கோப்பை தொடரில், லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த முகமது அமிர், இன்றைய ஆட்டத்தில் இழந்த பார்மை மீட்க முயற்சிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x