Last Updated : 22 Sep, 2018 02:25 PM

 

Published : 22 Sep 2018 02:25 PM
Last Updated : 22 Sep 2018 02:25 PM

‘நான் யாருக்கும் எதையும் நிருபிக்க வேண்டியதில்லை’- பொரிந்து தள்ளிய ரவிந்திர ஜடேஜா

நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கவேண்டியது இல்லை, எனது திறமை எனக்குத் தெரியும் என்று இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா பொரிந்து தள்ளியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் தற்போது ஆசியக் கோப்பைக்கு அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய 480 நாட்கள் ஒருநாள் அணியில் ரவிந்திர ஜடேஜா இல்லை.

ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைத்த வாய்ப்பையும் ஜடேஜா சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில், 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா அசத்தினார். வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

ஆட்ட நாயகன் விருதையும் பெற்ற ரவிந்திர ஜடேஜா போட்டி முடிந்தபின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது, இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி உங்களின் திறமையை நிரூபித்ததால் ஆசியக் கோப்பையில் வாய்ப்புக் கிடைத்ததா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து ஜடேஜா கூறியதாவது:

நான் அணி திரும்பிய இந்த நாளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன், ஏனென்றால், 480 நாட்களுக்குப் பின் மீண்டும் நான் திரும்பியிருக்கிறேன். இதற்குமுன் இருந்த இடைவெளி இந்த அளவுக்கு நீண்டதாக இருந்தது இல்லை.

என்னைப் பொருத்தவரை நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. என்னுடைய திறமை என்ன என்று எனக்குத் தெரியும் அதை மேம்படுத்தி வருகிறேன். நான் என்ன செய்து வருகிறேன் என்பதை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டியது இல்லை. எனக்கு நானே சவால் விட்டுக்கொள்வதுதான் அவசியம்.

உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அதற்கு முன்னதாக நாம் பல போட்டிகளில்விளையாட இருக்கிறோம். என்னுடைய நோக்கம் எல்லாம் எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது எல்லாம் சிறப்பாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதுதான். இப்போது என்னுடைய நோக்கமெல்லாம் இந்த ஆசியக் கோப்பை போட்டுத்தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.

வெளிநாடுகளில் இதற்கு முன் நடந்த டெஸ்ட் தொடர்களில் எனக்கு போதுமான அளவு வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கவில்லை. அப்போது தீர்மானித்தேன், எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது எல்லாம் சிறப்பாக விளையாடு எனக் கூறி எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டேன். என்னுடைய விளையாட்டையும் என்னால் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

மந்தமான ஆடுகளத்தில் நாம் கடினமாக முயற்சி எடுத்து பந்துவீச வேண்டும். ஆனால், இயல்பான ஆடுகளத்தில் பந்து தரையில் பட்டவுடன் பேட்ஸ்மேனை நோக்கி வேகமாகச் செல்லும், பேட்ஸ்மேனுக்கு செல்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளாது. ஆனால், மந்தமான ஆடுகளத்தில் பந்துவீசுவது நம்முடைய திறமையின்அடிப்படையில் இருக்கிறது. துபாய் ஆடுகளம் மந்தமான ஆடுகளமாகும்.

நான் விஜய் ஹசாரே கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென அழைப்பு வந்து, துபாய் செல் என்றார்கள். இந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்றுகூட எனக்குத்தெரியாது.

இங்கிலாந்தில் நான் சிறப்பாக விளையாடினேன், ஆனால், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஆசியக் கோப்பையில் அக்சர் படேல் காயம் அடைந்ததால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் போட்டியோ அல்லது இந்தியாவுடன் எந்த அணி மோதினாலும் இந்தியாவுக்காக விளையாடுவது பெருமைதான். ஆனால், இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்துவிடும்

இவ்வாறு ரவிந்திர ஜடேஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x