Published : 21 Sep 2018 05:08 PM
Last Updated : 21 Sep 2018 05:08 PM

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று: டாஸ் வென்றது இந்தியா

துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4- சுற்றில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

அபுதாபியில் நடக்கும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. இதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

துபாயில் 6 நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. 2-வது சுற்றான சூப்பர்-4 இன்று தொடங்கின. துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் களம்காண்கிறது.

பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக தீபக் சாஹர், ரவிந்திர ஜடேஜா, சித்தார்த் கவுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணியில் மோமினுல் ஹக், அபு ஹைதர் ஆகியோருக்கு பதிலாக முஸ்பிகுர் ரஹிம், முஸ்தபிஜுர்  ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் ரவிந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக கிங்ஸ்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஜடேஜா இல்லாமல் 27 ஒருநாள் போட்டிகளை இந்திய அணி விளையாடிவிட்டது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் 9 போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் முயற்சியில் தோல்வி அடைந்து வந்தார். ஆனால், ரோஹித் சர்மா டாஸில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆடுகளம் எப்படி:

துபாய் ஆடுகளம் வழக்கமாக பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைப்பு இல்லாத வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. புற்கள் நிறைந்து, தட்டையாக இருப்பதால், பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும். இங்கு ரன்கள் சேர்ப்பது கடினமாகும். பேட்ஸ்மேன்கள் நீண்ட போராட்டத்துக்கு பின்புதான் அடித்து ஆட முடியும்

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவண், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, யஜுவேந்திர சாஹல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x