Published : 21 Sep 2018 03:48 PM
Last Updated : 21 Sep 2018 03:48 PM

‘தோனி என்னை பந்துவீசச் சொன்னவுடன் என் வாழ்க்கையே மாறிவிட்டது’: கேதார் ஜாதவ் நெகிழ்ச்சி

 தோனி என்னை பந்துவீசச் சொன்னவுடன் எனது வாழ்க்கையே மாறிவிட்டது, என்னை பந்துவீச்சாளராக மாற்றியதே தோனிதான் எனத் இந்திய வீரர் கேதார் ஜாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். பகுதிநேர பந்துவீச்சாளரான ஜாதவ், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டிங்கை நிலைகுலையச் செய்தார். தன்னை ஒரு பந்துவீச்சாளராக வெளி உலகிற்கு அடையாளம் காட்டியதே மகேந்திரசிங் தோனிதான் என்று பெருமையாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்குச் சென்ற இந்திய அணியில் நான் இடம் பெற்றிருந்தேன். பகுதிநேர பந்துவீச்சாளராக இருந்தாலும் நான் அதிகமாகப் பந்து வீசியதில்லை. ஆனால், நியூசிலாந்து போட்டியின் போது என்னிடம் வந்த தோனி, என் கையில் பந்தைக் கொடுத்து பந்து வீசுங்கள் என்று தெரிவித்தார். அந்தத் தருணம் என் வாழ்க்கையையே முழுமையாக மாற்றிவிட்டது.

வலைவயிற்சியில் நான் பந்து வீசுவதில்லை. போட்டிக்கு முன்பாக நடக்கும் பயிற்சியின்போது சில ஓவர்கள் மட்டுமே வீசும் பழக்கம் கொண்டவன். வலைபயிற்சியில் அதிகமாகப் பந்து வீசினால், நிச்சயம் பேட்டிங் திறமை பாதிக்கப்படும் என்பதால் ஒரு அளவுக்கு மீறிச் செல்லமாட்டேன்.

நாம் என்ன நினைக்கிறோமோ, அதே சரியாகச் செய்ய முயற்சித்தால் போதுமானது என்று நினைக்கிறேன். அதாவது பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் சரியான லைன்லெத்தில் பந்துவீச வேண்டும். நாம் சரியாகப் பந்துவீசவில்லை என்றால், அது பீல்டர்களுக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தும்.

நான் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்குப்பின், என்னுடைய உடற்தகுதி மேம்பட்டு இருக்கிறது. கடந்த 4 மாதங்களாகப் பயிற்சி, உடற்தகுதி குறித்து அதிகமாகக் கற்றுக்கொண்டேன். என்னை வித்தியாசமான கிரிக்கெட் வீரராக மாற்ற இது துணை புரிந்தது எனத் தெரிவித்தார்.

ஏணியாக மாறிய தோனி

இந்திய அணியில் பல்வேறு வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு தோனி முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. பல்வேறு தருணங்களில் அந்தப் பலனை அனுபவித்த வீரர்கள் அதை வெளிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டுவரை நடுவரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மாவை தொடக்க வீரர் அந்தஸ்துக்கு மாற்றியவர் தோனி. மொஹாலியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக முதன்முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 83 ரன்கள் சேர்த்து தோனியின் நம்பிக்கையைக் காப்பாற்றினார்.

அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பின் கே.எல்.ராகுல் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஒரு ரன், டக் என வெறுங்கையுடன் திரும்பினார். ஆனால், அவரைத் தொடக்க வீரராகக் களமிறக்கி தோனி எடுத்த முடிவால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ராகுல் சதம் அடித்தார்.

2016-ம் ஆண்டு ஜனவரியில் ஒருநாள் போட்டியில் பும்ரா டி20 போட்டிக்கு மட்டுமே தேர்வாகி இருந்த நிலையில் அவரை ஒரு நாள் போட்டியிலும் அறிமுகப்படுத்திய பெருமை தோனியையே சாரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x