Published : 21 Sep 2018 02:00 PM
Last Updated : 21 Sep 2018 02:00 PM

பிறந்தநாள் ஸ்பெஷல்: வங்கதேசத்தை அடக்கிய’ ராஷித் கான்

ராஷித் கானின் அசத்தலான பேட்டிங், மாயஜான சுழற்பந்துவீச்சால் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

சர்வதேச அளவில் அதிகம் களமாடாத அணி, கத்துக்குட்டி என்று நினைத்து ஒவ்வொரு விக்கெட்டுக்கும் எதிரணியினரை வெறுப்பேற்றும் வகையில் பாவனைகள் செய்த வங்கதேச அணிக்குச் சரியான பாடத்தை ஆப்கானிஸ்தான் அணியினர் புகட்டினர்.

ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமே அந்த அணியின் நட்சத்திர வீரர் ராஷித் கான் என்றால் மிகையாகாது. தனது 20-வது பிறந்தநாளான நேற்று பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு 2 விக்கெட்டுகளையும், அதிரடியாக பேட் செய்து அரைசதம் அடித்து ஆர்ப்பரிக்க வைத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

தன்னை இத்தனை நாட்களாக டி20 போட்டிக்கு மட்டுமே உகந்த வீரராக வெளிக்காட்டி வந்த ராஷித்கான் தன்னால் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஷ்தான் அணிக்குத் தனது பிறந்தநாள் பரிசாக ராஷித்கான் இதைக்காட்டிலும் சிறந்ததை அவரால் கொடுக்க முடியாது. லீக் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி முக்கியமில்லாததாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி கொண்டாடக்கூடியதாகும்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. 256 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 42.1 ஓவர்களில் 119 ரன்களில் சுருண்டு, 136ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் 2-வது ஓவரிலே இன்ஷானுல்லா(8) விக்கெட்டை இழந்தது, இந்த விக்கெட் இழந்தபோது வங்கதேச வீரர்கள் மீண்டும் எதிரணியினரை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டனர்.

அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியில் களமிறங்கிய வீரர்களும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 160 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் தடுமாறியது. இதனால், ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 200 ரன்களுக்குள் முடிந்துவிடும் என வங்கதேச வீரர்கள் எண்ணி இருப்பார்கள்.

ஆனால், 8-வது விக்கெட்டுக்கு ராஷித்கான், குல்புதின் நயிப் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவுண்டரிகளாக பறக்கவிட்ட ராஷித் கான் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இவருக்குத் துணையாக ஆடிய நயிப் 42 ரன்கள் சேர்த்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். சர்வதேச அளவில் ஆப்கானிஸ்தான் அணி 8-வது விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்தது.

வங்கதேசம் தரப்பில் சஹிப் அல்ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஹைதர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

256 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடனும், நம்பிக்கையுடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அளித்தனர். 100 ரன்களைச் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அதிலும் சர்வதேச அளவில் தனது லெக்ஸ்பின்னில் பேட்ஸ்மேன்களை திணறவைத்துவரும் ராஷித் கான் வங்கதேச வீரர்களுக்கு நிற்கவைத்து படம் காட்டினார். தனது கூக்ளி மூலம் பேட்ஸ்மேன்களின் பேட்டில் பந்தை தொடவே விடவில்லை. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்கள். 14 ஓவர்களுக்கு வங்கதேச அணியினரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

ஆப்கானிஸ்தான் அணியைத் தவறாக எடைபோட்டுவிட்டோமே என்ற பதற்றத்தில் வங்கதேச வீரர்கள் பேட்டிங் செய்ததைக் காண முடிந்தது. அனுபவமற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போன்று ராஷித் கான் பந்துவீச்சையும் மற்ற வீரர்களின் பந்துவீச்சையும் எதிர்கொண்டு விக்கெட்டுகளை இழந்தனர்.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக சகிப் அல் ஹசன் 32 ரன்களும், மகமதுல்லா 26 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினார்கள். 42.1 ஓவர்களில் 119 ரன்களில் வங்கதேசம் அணி சுருண்டு, 136 ரன்களில் தோல்வி அடைந்தது

வங்கதேச வீரர்களுக்குக் கிலி ஏற்படுத்திய ராஷித் கான் 9 ஓவர்கள் வீசிய 3 மெய்டன்கள் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஜிபுர் ரஹ்மான், நயிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x