Last Updated : 20 Sep, 2018 07:41 AM

 

Published : 20 Sep 2018 07:41 AM
Last Updated : 20 Sep 2018 07:41 AM

இமாலய வெற்றி: இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங் பிரமாதம்; காற்றுப்போன பலூனானது பாகிஸ்தான்

 

ஹாங்காங் அணியுடன் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை பார்த்து கவலை பட்டிருந்தால், விமர்சித்திருந்தால், அனைத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.

துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு, டாப் கிளாஸ் பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஆசியக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஜாதவ் ஆகியோரின் பந்துவீச்சு, ரோஹித் சர்மா, தவணின் “கிளாஸிக் பேட்டிங்” ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

குறிப்பாக முதல் 10 ஓவர்களை புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் சராசரியாக 135 கி.மீ வேகத்திலும், துல்லியமாகவும், லைன் அண்ட் லென்திலும் வீசி பாகிஸ்தானை திணறடித்தனர். அதிலும் கடந்த 18 மாதங்களில் பந்துவீச்சில் மிகக்குறைவான சிக்கனவிகிதம் வைத்துள்ள இந்திய வீரர் எனும் பெருமையை பும்ரா தக்கவைத்து வருகிறார்.

இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் 7 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் அதில் 35 பந்துகள் டாட் பால்கள்கள். மீதமுள்ள 7 பந்துகளில் மட்டுமே 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கேதார் ஜாதவும் ஏறக்குறைய 9 ஓவர்கள் வீசிய அதில் 34 பந்துகள் டாட்பால்கள்,மீதமுள்ள 20 பந்துகளில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

அதேபோல பும்ரா 7.1ஓவர்கள் வீசிய அதில் 31 பந்துகள் டாட்பந்துகள், 2 மெய்டன்கள். மொத்தம் 11 பந்துகளில்தான் 23 ரன்களைக் கொடுத்துள்ளார்.

இந்த அளவுக்கு சிறப்பாக விளைாடிய இந்திய வீரர்கள் ‘அசோசியேட்’ ஹாங்காங் அணிக்கு எதிராக மட்டும் மிகமோசமாக பந்துவீசி 34 ஓவர்கள் வரை விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியது ஏனோ காரணம் தெரியவில்லை. ஒருவேளை பந்துவீச்சு நேற்றுமுன்தினம் மோசமாக இருந்ததா அல்லது நேற்று விளையாடிய பாகிஸ்தான் அணி பலவீனமாக இருந்ததா… அல்லது ‘உஷ்! கண்டுக்காதீங்க’ மேட்சா என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய 15 மாதங்களுக்கு பின் களத்தில் பங்காளிகளான இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் என்பதால், மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் திறமை குறித்தும், பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் குறித்து பலூன்களில் அடைத்த காற்றுபோன்று ஊதி பெரிதாக்கப்பட்டது.

சற்றும் குறைவில்லாமல் இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரசிகர்கள் வழக்கமான உற்சாகத்தில் இருந்தால்கூட ஒரு செயற்கைத்தனமான பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் மூளைக்குள் திணித்து ஆட்டம் கவனிக்க வைக்கப்பட்டது.

ஆனால், விளைவு பாகிஸ்தான் அணியின் ஆட்டம் “காற்றுப் போன டயர்” போன்று நைந்து போனது, ஊதிப் பெரிதாக்கப்பட்ட “பலூன் புஸ்ஸானது”.

தங்கள் முன் வைத்த அனைத்து கேள்விகளுக்கும் தங்களின் பந்துவீச்சு, பேட்டிங் மூலம் இந்திய வீரர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டியில் மிகமோசமான தோல்வியை அளித்த பாகிஸ்தானுக்கு தகுந்த பரிசை இந்திய வீரர்கள் முதல் போட்டியிலேயே அளித்திருக்கிறார்கள்.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவதை அதிரடியான, தாக்குதல் ஆட்டத்தைக் கையாளவில்லை, நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். பாகிஸ்தான் 39 சதவீதம் தாக்குதல் ஆட்டத்தை கையாண்ட நிலையில், இந்திய அணி 36 சதவீதமே கையாண்டது. ஆனால், பாகிஸ்தான் சேர்த்ததோ ஓவருக்கு 6.25 ரன்கள், இந்திய அணியோ ஓவருக்கு 12.27 ரன்களாகும்.

துபாய் ஆடுகளம் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று நினைத்திருக்கமாட்டார்கள். வேகப்பந்துவீசினாலும், சுழற்பந்து வீசினாலும், முழங்காலுக்கு மேல் எழவில்லை. இந்தப் போட்டிக்காக பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் ஏனோ பாகிஸ்தானுக்கு ஒத்துழைக்கவில்லை.

டாஸ்வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 126 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானுடன் 9 ஒருநாள் போட்டிகளில்(ஆசியக் கோப்பை,சாம்பியன்ஸ் கோப்பை, உலகக்கோப்பை) விளையாடியுள்ள இந்திய அணி இத்துடன் சேர்த்து 7-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த 2014-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக 102 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான். அதன்பின் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பின் முதலில் பேட் செய்து இ்ந்த அளவு குறைவான ஸ்கோர் செய்வது இது முதல் முறையாகும்.

தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் மிகுந்த கட்டுக்கோப்புடன், “டைட்டாக” பந்துவீசினார்கள். புவனேஷ்குமாரைப் பொறுத்தவரை ஹாங்காங் அணிக்கு எதிராக பந்துவீசிய போது, 10ஓவர்கள்வரை வீசியும் விக்கெட் வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டார். ஆனால், இந்த ஆட்டத்தில் 3-வது ஓவரில் இமாம் உல் ஹக்கையும், 5-வது ஓவரில் பக்கர் ஜமானையும் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.

உலகளவில் தற்போது சிறந்த ஓபனிங் பாட்னர்ஷிப் வீரர்களாக பக்கர் ஜமானும், இமாம் உல் ஹக்கும் கருதப்படுகிறார்கள். அவர்கள் இருவரின் விக்கெட்டையும் மிக அனாசயமாக கழற்றிவிட்டார் புவனேஷ்குமார். கடந்த சாம்பியனஸ் டிராபி போட்டியில் ஜமான் சதம் அடித்ததால், இந்த முறை எதிர்பார்ப்பு அதிகரி்த்து இருந்தது, ஆனால், ஜமானை எளிதாக துரத்தினார் புவனேஷ்.

பும்ரா தொடர்ந்து இரு மெய்டன்கள் எடுத்து அசத்தினார். பவர்ப்ளே முதல் 10ஓவரில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 25 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

3-வது விக்கெட்டுக்கு சோயிப் மாலிக், பாபர் ஆசம் இருவரும் இணைந்தனர். இதில் பாபர் ஆசம் மிகவும் ஆபத்து நிறைந்த பேட்ஸ்மேனாக கருதப்படக்கூடியவர். இரு பேட்ஸ்மேன்களையும் பிரிக்க இந்திய வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். ஜாதவ் வீசிய 22 ஓவரில் பாபர் ஆசம் 47 ரன்கள் சேர்த்திருந்த போது போல்டாகி ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 82-ரன்கள்சேர்த்துப் பிரிந்தனர்.

 

அடுத்து வந்த சர்பராஸ் அகமது 6 ரன்களில் ஜாதவ் பந்துவீச்சில் வெளியேற்றினார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே களமிறங்கினார். பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு மணிஷ்பாண்டே பிடித்த கேட்ச் மிக அற்புதமானது.

நிதானமாக ஆடிவந்த சோயிப் மாலிக்கை 43 ரன்களில் ரன்அவுட் ஆக்கினார் ராயுடு. இதன் பின் பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. 100 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி அடுத்த 62 ரன்களில் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் சீராக இழந்தது.

25 ஓவர்களுக்கு மேல் குல்தீப், யஜுவேந்திர சாஹல், ஜாதவ் ஆகியோர் நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசி பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பாகிஸ்தானின் நடுவரிசை வீரர்களும், கடைசி வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

8-வது விக்கெட்டுக்கு அமிர், அஷ்ரப் 37 ரன்கள் சேர்த்த போதிலும் இருவரும் நிலைக்கவில்லை. அஷ்ரப் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

43.1ஓவர்களில் 162 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் களமிறங்கினார்கள். இருவரும் அதிரடியான ஆட்டத்தைக் கையாளாமல், நிதானமாகவே பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர்.

இருவரும் வெவ்வேறு இலக்குகளை ரன் சேர்க்க வைத்து விளையாடியதால் பீல்டிங் மாற்றியமைக்க பாகிஸ்தான் அணியின் மிகுந்த சிரமப்பட்டனர். உதாரணமாக ரோகித் சர்மா 81 சதவீதம் ஆப்-சைடிலும், 40 சதவீதம் லெக்திசையிலும் ஷாட்களை அடித்தார், தவண் 45 சதவீதம் ஆப் சைடிலும் 120 சதவீதம் லெக்திசையிலும் ஷாட்களை அடித்தார். இதனால், பீல்டிங்கை மாற்றியமைப்பதில் பெரும்குழப்பம் ஏற்பட்டது.

6-வது ஓவர் வரை கட்டுக்கோப்பாகவே பாகிஸ்தான் பந்துவீச்சு இருந்தது. ஆனால், முகம்மது ஆமிர் வீசிய 7-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசி ரோகித் சர்மா அசத்தினார். உஸ்மான்கானின் 8-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை ரோகித் சர்மா பறக்கவிட்டார். ரோஹித் சர்மாவுக்கு செட்டில் ஆன பிறகு ஷார்ட் பிட்ச் வீசினால் என்ன ஆகுமோ அது நடந்தது. ஹூக் ஆடும்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கை பெரிதும் நினைவூட்டுகிறார் ரோஹித் சர்மா.

பவர்ப்ளே 10 ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தது. தவண் தனது பங்கிற்கு பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

ஹசன் அலி வீசிய 13-வது ஓவரில் ரோகித் சர்மா ஒருபவுண்டரி, சிக்ஸர் விளாசி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

சதாப்கான் வீசிய 14 ஓவரில் கூக்ளியில் கீளின் போல்டாகி ரோகித் சர்மா 52 ரன்களில் வெளியேறினார். இதில் 3சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ராயுடு களமிறங்கினார். தவாண் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தால் ஸ்கோர் வேகமெடுத்தது.

தவண் 46 ரன்கள் சேர்த்திருந்தபோது, அஷ்ரப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ராயுடுவுடன் சேர்ந்தார். வந்த வேகத்தில் பக்கர் ஜமான் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து தூள்பறத்தினார். அதன்பின் இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கையாண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பாகிஸ்தான் தரப்பில் அஷ்ரப், சதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x