Published : 19 Sep 2018 09:15 PM
Last Updated : 19 Sep 2018 09:15 PM

ஹாங்காங் தொடக்க வீரர்கள் சேர்ந்து எடுத்த ரன்களைக் கூட எடுக்காத பாகிஸ்தான்: இந்திய வெற்றி இலக்கு 163 ரன்கள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் ஊதிப்பெருக்கப்பட்ட இந்திய-பாகிஸ்தான் போட்டியின் ஒரு பாதி முடிந்துள்ள நிலையில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து மோசமாக ஆடி 162 ரன்களுக்குச் சுருண்டது.

நேற்று ஹாங்காங் அணி தொடக்க வீரர்கள் 174 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து கூட்டணி அமைத்தனர். பிறகு 259 ரன்கள் எடுத்து பயம் காட்டினர்.

ஆனால் இன்று வானாளவ ஊதிப்பெருக்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி முதல் பாதிவரையில் காத்திறக்கப்பட்ட பலூன் ஆகி முடிந்துள்ளது.

43.1 ஓவர்களில் 162 ரன்களுக்குப் பாகிஸ்தான் சுருண்டது. புவனேஷ்வர் குமார் 7 ஓவர் 15 ரன்களுக்கு 3 விக்கெட் சரி. கேதார் ஜாதவ் 9 ஓவர் 1 மெய்டன் 23 ரன்கள் 3 விக்கெட் எந்தத் தருணத்திலும் ஏற்க முடியாதது. எந்த அணியினாலும் ஜீரணிக்க முடியாதது, பகுதி நேர வீச்சாளர், முக்கியப் பவுலர்களை முனை மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு பவுலர் அவ்வளவே. அவரிடம் 3 விக்கெட்டுகளைக் கொடுக்கும் அணி தாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கலாகாது.

3வது விக்கெட்டுக்காக பாபர் ஆஸம், ஷோயப் மாலிக் இணைந்து 17 ஓவர்களில் 82 ரன்களைச் சேர்த்ததைத் தவிர பாகிஸ்தான் பேட்டிங்கில் ஒன்றுமேயில்லை.

தொடக்கத்தில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தளர்வான பந்துகளையே கொடுக்காமல் வெறுப்பேற்றியதால் பகார் ஜமான், இமாம் உல் ஹக் இருவருமே வெறுப்படைந்து மோசமான ஷாட் தேர்வுக்கு புவனேஷ்வரிடம் பலியானார்கள்.

ஒரு சாதாரண பந்து வீச்சில் இப்படி மடியும் அணி பாகிஸ்தானாக மட்டுமே இருக்க முடியும். அந்த அணியின் கணிக்க முடியாத தன்மை இன்னமும் நீடிக்கிறது.

அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க நடுவில் விக்கெட் மேல் விக்கெட் சரிந்து கொண்டிருந்தது. பாண்டியா காயமடைய ஜாதவ்வுக்கு அடித்தது லக்கி பிரைஸ். இவரைத்தான் அடிக்க வேண்டும் என்று பொறியில் சிக்கினர். சாதாரணமான பந்து வீச்சை ஆடுவது எப்பவும் கடினம்.

கடைசியில் ஃபாஹிம் அஷ்ரப் ஏதாவது காட்டுவார் என்று பார்த்தால் 44 பந்துகளில் தடவு தடவென்று தடவி 3 லைஃப்களுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொகமது ஆமீர் 18 நாட் அவுட். இமாம் உல் ஹக், பகார் ஜமான், சர்பராஸ் அகமட், ஆசிப் அலி, ஷதாப் கான், ஹசன் அலி, உஸ்மான் கான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்கும் போது ஒரு அணி எப்படி நல்ல ஆரோக்கியமான ஸ்கோரை எட்ட முடியும்? இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 163 ரன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x