Published : 19 Sep 2018 04:06 PM
Last Updated : 19 Sep 2018 04:06 PM

இந்திய அணியின் கொம்புகள் எங்கள் பிடியில் இருந்தது.. முடித்திருக்க வேண்டும்: ஹாங்காங் கேப்டன் அன்ஷுமன் ராத் பெருமிதம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தோல்வி பயம் காட்டிய ஹாங்காங் கேப்டன் அன்ஷுமன் ராத் உலகிற்கு தங்களை நிரூபித்து விட்ட திருப்தியுடன் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து செல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை 240/2 என்ற இடத்திலிருந்து 285 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதோடு, பேட்டிங்கில் 174 ரன்கள் முதல் விக்கெட் கூட்டணி அமைத்து கடைசியில் நெருங்கி 256 ரன்கள் வரை வந்து ஆல் அவுட் ஆகாமல் தோல்வி தழுவி முதுகெலும்பு உள்ள அணி என்று காட்டியது.

இது குறித்து ஹாங்காங் கேப்டன் ராத் போட்டி முடிந்து கூறியதாவது:

இந்தப் போட்டி கசப்பும் இனிபும் கலந்த அனுபவமாகும். எங்களால் முடியும் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளோம்.

இந்தியாவின் கொம்புகளை எங்கள் பிடியில் வைத்திருந்தோம், உண்மையில் இலக்கை எட்டி முடித்திருக்க வேண்டும். எங்களை நாங்களே கொஞ்சம் கடினப்படுத்திக் கொண்டிருந்தால் உறுதியுடன் விடாப்பிடியாக ஆடியிருந்தால் நிச்சயம் வென்றிருப்போம்.

உயர்மட்ட கிரிக்கெட்டுக்கான எங்களது அனுபவம் பெற்றோம். ஆப்கானிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள், 2011-15 காலக்கட்டத்திலிருந்து வெளியே வந்து எங்களை மாதிரிதான் சிறப்பாக ஆடுகின்றனர். சில பெரிய அணிகளை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்குகின்றனர், ஆனாலும் சில வேளைகளில் 140-150 என்று நல்ல பிட்ச்களில் மடிகின்றனர், நாங்கள் அன்று பாகிஸ்தானுக்கு எதிராக மடிந்தது போல்.

ஆனால் அவர்களுக்கு இருக்கும் சரியான ஆதரவினால் ஆப்கன் அணி மேன்மேலும் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. கடுமையாகப் பயிற்சி செய்கின்றனர். இன்று நாங்களும் எங்களை உயர்மட்ட கிரிக்கெட்டுக்குத் தயார் என்று காண்பித்துள்ளோம். உலகக்கோப்பை தகுதிச் சுற்றுகளில் ஸ்காட்லாந்தைப் பாருங்கள் நூலிழையில் தகுதி பெறுவதை நழுவ விட்டனர். எங்களுக்கு இத்தகைய அங்கீகாரம் தேவைப்படுகிறது.

இந்திய அணியை 285 ரன்களுக்கு மட்டுப்படுத்திய பிறகே இந்தப் பிட்ச் நல்ல பேட்டிங் பிட்ச் என்பதால் விரட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இழப்பதற்கு ஒன்றுமில்லை இலக்கு நோக்கிச் செல்வோம் என்று ஆடினோம்.

நானும், நிஸாகட்டும் கிரீசில் இருந்தபோது இந்திய அணியினர் கவலையடைந்தனர். இந்திய அணி 330-340 அடித்திருந்தால் சிக்கல்தான். ஆனால் நூலிழையில் வெற்றியைத் தவற விட்டோம்.

ஐசிசி எங்களுக்காக என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை, இந்த ஆட்டம் நிச்சயம் உதவும், அவர்கள் கவனத்தை ஈர்த்திருக்கும். அசோசியேட் அணிகள் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றன என்பதை ஐசிசி உணருமாறு இன்று ஆடினோம்.

இவ்வாறு கூறினார் அன்ஷுமன் ராத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x