Published : 19 Sep 2018 09:29 AM
Last Updated : 19 Sep 2018 09:29 AM

புவனேஷ் குமார், சாஹல், குல்தீப் இருக்கும் போது ‘அனுபவமற்ற பந்துவீச்சு’ என்ற ரோஹித் சர்மா

ஹாங்காங்குக்கு எதிராக ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஏகப்பட்ட லிட்டர்கள் தண்ணி குடித்தது. மிரட்டிய ஹாங்காங் 29 ரன்கள் என்ற குறைந்த இடைவெளியில் தோல்வி தழுவியது.

இந்திய அணி ஷிகர் தவண் சதம் ராயுடு அரைசதத்துக்குப் பிறகு ஈரச்சுவர் போல் உதிர்ந்து விழுந்தது. 285 ரன்கள் போதும் என்பது இந்திய அணியின் நினைப்பு, அந்த நினைப்புக்கு ஆப்பு வைத்தனர் ஹாங்காங் தொடக்க வீரர்கள் நிசாகட் மற்றும் கேப்டன் அன்ஷுமன் ராத். 174 நோ-லாஸ். விரட்டலில் முதல் முறையாக 200 ரன்களைக் கடந்த்து என்று இந்திய ‘வார்ம்-அப்’ மேட்ச், ஹாங்காங்குக்கு நம்பிக்கையளிக்கும் ஆட்டமாக மாறியது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது அனுபவமற்ற பந்து வீச்சு என்று உளறிக் கொட்டினார். ஹாங்காங் அணியையே இந்தப் பந்து வீச்சைக் கொண்டு எளிதில் வீழ்த்த முடியாததற்குக் காரணம் உத்வேகமற்ற ரோஹித் சர்மாவின் மந்தமான கேப்ட்சன்சிதான், அணித்தேர்வுதான், ஷர்துல் தாக்குரை ஏன் அணியில் தேர்வு செய்ய வேண்டும்? புவனேஷ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் கணிசமான போட்டிகளை வெற்றி பெற்றுத் தந்துள்ள நிலையில் அனுபவமற்ற பேச்சாகத்தான் இருந்தது ரோஹித் சர்மாவின் ‘அனுபவமற்ற பவுலர்கள்’ கருத்தும்.

கடைசியில் அனுபவமற்ற கலீல் அகமெட் தான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்,  அபாய வீரர் நிசாகட் விக்கெட்டை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்தினார்.

ஹாங்காங்கை வீழ்த்தவே டெனிஸ் லில்லி, தாம்சன், ஆம்புரோஸ், வாசிம் அக்ரம் வேண்டும் என்று கேட்பார் போலிருக்கிறது, ‘கேப்டன்’ ரோஹித் சர்மா

ரோஹித் கூறியது:

போட்டியை வெல்வது முக்கியம், அதை நிகழ்த்தி விட்டோம். நிச்சயம் எளிதல்ல என்பதை அறிந்திருந்தோம். நம்மிடம் அனுபவமற்ற பந்து வீச்சு வரிசை, ஆனால் அது ஒரு சாக்கல்ல. இன்னும் கொஞ்சம் அடித்து ஆடியிருக்க வேண்டும், அதுதான் நாம் செய்த தவறு.

இது கற்றுக் கொள்ளும் இடம். ஆனால் ஆட்டத்தின் எந்த நிலையிலும் எங்கள் மீது சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் ஹாங்காங் அணியைப் பாராட்டுகிறேன். தொடக்க வீரர்கள் கிரேட் பார்ட்னர்ஷிப். நம் பந்து வீச்சாளர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள நல்ல வாய்ப்பு.

பாசிட்டிவ் அம்சங்கள் என்றால் ஷிகர் தவண் சதம், இங்கிலாந்தில் போராடி விட்டு இங்கு வந்து ஆடி சதம் எடுத்துள்ளார். அம்பாத்தி ராயுடுவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நன்றாக ஆடினார், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் ஆகியோரும் இந்த ஸ்கோரை எட்ட உதவினர்.

கலீல் அகமட் ஒரு உத்வேகமான பவுலர். அவர் சரியாகத் தொடங்கவில்லை, ஆனால் பிறகு நன்றாக வீசினார். 2-3 ஓவர்கள் தடுமாறினால் பிரச்சினையல்ல, ஆனால் பிறகு லைன் மற்றும் லெந்த்தை கண்டுபிடித்துக் கொள்வது அவசியம், அதனை கலீல் செய்தார்.

அடுத்தடுத்து போட்டிகள்தான், ஆனால் அதற்காகத்தான் இந்தப் போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளித்தோம்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x