Published : 19 Sep 2018 08:13 AM
Last Updated : 19 Sep 2018 08:13 AM

‘கிரேட் எஸ்கேப்’: மிரட்டிய தொடக்க வீரர்கள்; தோல்வி பயம் காட்டிய ஹாங்காங்கை போராடி வீழ்த்தியது இந்தியா

ஆசியக் கோப்பை குரூப் ஏ போட்டியில் அன்று பாகிஸ்தானுடன் ஆடிய ஹாங்காங் இல்லை நாங்கள் என்ற விதமாக இந்திய அணிக்கு சாதனை தொடக்கக் கூட்டணியுடன் தோல்வி பயம் காட்டியது ஹாங்காங் அணி, ஆனால் கடைசியில் 26 ரன்களில் தோல்வி தழுவ, இந்திய அணி போராடி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 240/2 என்ற நிலையிலிருந்து அனுபவ வீரர், மூத்த வீரர், ‘கிரேட் பினிஷர்’ தோனியின் டக் உடன் 285 ரன்களையே எடுத்தது.

ஏதோ இது ஒரு நல்ல ‘வார்ம் அப்’ மேட்சாக இருக்கும் என்ற மனநிலையில் இறங்கிய இந்திய அணிக்கு ‘மரணபயம்’ காட்டியது ஹாங்காங். ஏனெனில் ஹாங்காங் வென்றிருந்தால் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி இதுவாகவே இருந்திருக்கும். கோலி கூறியது ரோஹித் சர்மாவுக்கு நினைவில் இல்லை போலும், முதல் போட்டியே உயர்மட்ட போட்டிதான், அதில் வார்ம்-அப் மனநிலையில் களமிறங்கக் கூடாது என்று கூறியது இந்திய அணியைப் பொறுத்தவரை 100% உண்மையானது நேற்று.

இந்திய அணி வீரர்களெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் ஐபிஎல் சூரப்புலிகளாக மட்டுமே தேங்கும் நாள் நம் கண்களுக்குத் தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

தொடர்ந்து ஆடிய ஹாங்காங் அணியின் நிஸாகட் கான் (92), கேப்டன் அன்ஷுமன் ராத் (73) 34 ஓவர்களில் 174 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்க்க ரோஹித் சர்மா அண்ட் கோ வயிற்றில் மோட்டார் ஓடத் தொடங்கியது.

செத்தப் பிட்சில் இந்திய நடுவரிசையில் அம்பாத்தி ராயுடு தவிர பெரிய அளவில் ஒருவரும் ஆடாமல் 285 ரன்களுக்கு மட்டுப்பட்டது இந்தியா.

இலக்கை விரட்டக் களமிறங்கிய ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்கள் மிக அருமையாக, மிக அருமையாக இன்னிங்ஸை இலக்கு நோக்கி பில்ட் அப் செய்தனர், ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஒன்றுமேயில்லை. 4 ஓவர் பவுலரைக் கொண்டு வந்து 10 ஓவர் வீசச்சொன்னால் அவர் 4 ஓவர்களையே ஒழுங்காக வீசவில்லை.

கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி இதுவாகவே அமைந்திருக்கும். ஆனால் அறிமுக இடது கை வீரர் கலீல் அகமட், சாஹல் ஆகியோரது தொடர்ச்சியான முயற்சியினாலும் ஹாங்காங்கின் அனுபவமின்மையினாலும் 259 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்று முடிந்தது.

அசோசியேட் அணியா தேவையில்லை என்ற ஐசிசியின் பணக்கார வாரியங்களின் முகச்சுளிப்புக்கு ஹாங்காங் நேற்று பதிலடி கொடுத்தது. நிச்சயம் பாகிஸ்தானுக்கு ஹாங்காங் நல்லது செய்துள்ளது. இந்திய அணி இந்த வெற்றியினால் பெருமையடைய ஒன்றுமில்லை, மாறாக பாகிஸ்தான் அணி இந்த இந்திய அணி இந்தப் பிட்ச்களில் இவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்து திட்டமிடத் தொடங்கியிருக்கும்.

நிசாகட் மற்றும் ராத் அருமையாக, பதற்றமில்லாமல் தொடங்கினர். கலீல் அகமடின் 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தனர். புவனேஷ்வர் குமாரையும் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தனர். ஷர்துல் தாக்குர் 10 பந்துகள் வீசி தன் ஓவரை முடித்தார், அதில் ஃப்ரீ ஹிட்டெல்லாம் வர 17 ரன்களைக் கொடுத்தார். இதனையடுத்து முழு தன்னம்பிக்கையுடன் ஆடிய ஹாங்காங் 12 ஒவர்களில் 77 ரன்கள் என்று பிரமாதமாகச் சென்று கொண்டிருந்தது.

ஆனால் இத்தகைய மந்தமான பிட்ச் நீளமான பவுண்டரி உள்ள மைதானத்தில் ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வது கடினம், ஆனால் எதிர்பார்த்தது போல் நிசாகட், ராத் இருவரும் சாஹல், குல்தீப்பிடம் விக்கெட்டைக் கொடுக்கவில்லை ஆனால் ரன் விகிதம் கட்டுப்பட்டது, 18 ஓவர்களில் 67 ரன்களே ஒரு கட்டத்தில் வந்தது.

ஷர்துல் மீண்டும் பந்து வீச வந்த போது வா.. வா.. என்று 13 ரன்கள் விளாசினர். கேதார் ஜாதவ் வீச வந்த போது மிட்விக்கெட் மீது ஒரு மிகப்பெரிய சிக்சரை அன்ஷுடம் ராத் விளாசினார்.

97 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்கோர் 174/0 அப்போது குல்தீப் யாதவ் மீண்டும் வீச வந்த போது சாதாரண பந்தை கவரில் ரோஹித் சர்மாவிடம் நேராகக் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாபர் ஹயாத் இறங்கி அதே ஓவரில் 3 பந்துகளில் பீட் ஆகி 2 பந்துகளில் ரன் இல்லாமல் போக மெய்டன் விக்கெட் ஆனது.

இதனால் எதிர்முனையில் நிசாகட்டுக்கு பிரஷர் எகிற கலீல் அகமட் பிரஷரைக் கூட்டினார் தனது கூடுதல் பவுன்ஸ் மற்றும் லெந்த் மூலம் 12 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்திருந்த நிசாகட் கடைசியில் ரவுண்ட் த விக்கெட்டில் கலீல் வீசிய பந்து உள்ளே வர நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ரிவியூ விரயமானது. 175/2 முதல் 4-5 ஓவர்களுக்கு ரன் வறட்சி ஏற்பட்டது. பிறகு பாபர் ஹயாத், கலீல் அகமடை ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியும் பிறகு குல்தீப் யாதவ்வை குதித்து வந்து நேராக ஒரு சிக்சரையும் விளாசினார். 40வது ஓவரில் கார்ட்டர் (3) விக்கெட்டை கலீல் அகமட் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேற இதே ஓவர் கடைசி பந்தில் பாபர் ஹயாத், கலீல் அகமடின் ஷார்ட் எகிறு பந்தை பின்னால் சென்று ஒரே அறை அறைந்தா லாங் ஆஃபில் சிக்ஸ். பிரமிக்கத்தக்க ஷாட். ஹாங்காங் 40 ஒவர்கள் முடிவில் 198/3 என்று இருந்தது.

ஆனால் 41வது ஓவரை சாஹல் வீச அபாயகரமான ஹயாத் 18 ரன்களில் லெக் ஸ்பின்னில் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பிறகு கே.டி.ஷா ஒரு சிக்சருடன் 13 பந்துகளில் 17 ரன்களையும் இசான் கான் 11 பந்துகளில் 12 ரன்களையும் எடுக்க 44 ஒவர்களில் 227/4 என்ற நிலையில் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் 45வது ஓவரில் சாஹல் ஹாங்காங் நம்பிக்கைக்கு ஆணியடித்தார். ஷா, பாயிண்டில் தவணிடம் கேட்ச் ஆக அதே ஓவரில் அய்ஜாஜ் கான் கூக்ளியில் எல்.பி.ஆகி டக் அவுட் ஆகி வெளியேற ஹாங்காங் 230/6 என்று ஆனது.

விக்கெட் கீப்பர் மெக்கனியை, குல்தீப் யாதவ் பந்தில் தோனி ஸ்டம்ப்டு செய்தார். தன்வீர் அப்சல் இறங்கி குல்தீப் யாதவ்வை அவர் தலைக்கு மேல் ஒரு சிக்ஸ் விளாசினார். 246/7 என்ற நிலையில் 18 பந்துகளில் 40 ரன்கள், வேறு அணியாக இருந்தால் சாத்தியமே. ஆனால் 258/8 என்று முடிந்தது ஹாங்காங்.

இந்தியத் தரப்பில் அறிமுக போட்டியிலேயே கலீல் அகமட் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சாஹல் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். புவனேஷ் குமார் 9 ஓவர்களில் 50 ரன்களைக் கொடுத்து ஏமாற்றம் அளிக்க, ஷர்துல் தாக்குர் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து வீணானார். ஆட்ட நாயகனாக சதமெடுத்த ஷிகர் தவண் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x