Published : 16 Sep 2018 07:17 PM
Last Updated : 16 Sep 2018 07:17 PM

மோசமாக பேட் செய்தால் நீக்கப்படுவார்கள்; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு செல்லும்: பிசிசிஐ அதிரடி

இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்த தவறி மோசமாக பேட் செய்தால் இளம் வீரர்கள் அழைக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம்(பிசிசிஐ) தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது, ஒருநாள் தொடரை 2-1 என்று பறிகொடுத்தது. டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ராகுல் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்திய அணி வீரர்கள் திறமை குறித்து வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழுக் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ஆங்கில நாளேடு ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இங்கிலாந்து பயணம் குறித்த விரிவான அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. வீரர்கள் திறமை குறித்தும், செயல்பாடு குறித்தும் நமக்குக தெரியும்.

இந்த தொடரில் சில சாதகமான விஷயங்களும், பாதகங்களும் நடந்திருக்கின்றன. இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். 5 போட்டிகளில் 60 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார்கள். பீல்டிங்கிலும், சிறப்பாகவே வீரர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு நிலவுகிறது.

அது மட்டுமல்லாமல், தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் இங்கிலாந்து அணியின் டெய்லண்டர்களை ஆட்டமிழக்கச் செய்ய அதிகமான நேரம் எடுத்துக்கொண்டார்கள். அதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்.

பேட்ஸ்மேன்களைப் பொருத்தவரை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றார்போலேவ பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்கிறோம். தொடக்க ஆட்டக்காரர்கள், நடுவரிசை, ஒன்டவுன் என்று பார்த்து தேர்வு செய்கிறோம். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களோடு ஒப்பிடும் போது நமது அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள். இங்கிலாந்து ஆடுகளம், சூழல் மிகவும்கடினமாக இருந்ததால், இரு அணியின் பேட்ஸ்மேன்களும் சிரமப்பட்டனர். 5-வது மற்றும் 6-வது வீரராக ரஹானே, புஜாரா சிறப்பாக பேட் செய்தனர், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால், நன்றாக விளையாடினார்கள்.

அனைத்து வீரர்களுக்கும் திறமையை நிரூபிக்க போதுமான அளவு வாய்ப்பு தரப்படும் அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால், அணியில் இருந்து நீக்கப்பட்டு, உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் இளம் வீரர்கள் அழைக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படும். இங்கிலாந்து தொடர் மிகவும் முக்கியமானது என்பதால், வீரர்கள் உடல்நிலை, பேட்டிங் நிலைத்தன்மை, அனுபவம், பந்துவீச்சை எதிர்கொள்ளும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்து வரும் ஆஸ்திரேலியத் தொடர் மிகவும் முக்கியமானது. பந்துவீச்சில் இந்திய அணி பலம் பொருந்தியதாக மாறிவிட்டது. ஆனால், பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது இருக்கிறது. உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக 24 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளதால், பேட்டிங்கை வலுப்படுத்துவது அவசியம்.

இவ்வாறு எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x