Published : 15 Sep 2018 06:24 PM
Last Updated : 15 Sep 2018 06:24 PM

48வது பந்தில் முதல் பவுண்டரி, முதல் ஓவரில் மலிங்கா 2 விக்கெட், தமிம் காயம்: ஆசியக் கோப்பைப் போட்டி ‘பரபர’தொடக்கம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் பிரிவு பி-யின் இலங்கை-வங்கதேசத்துக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து மோசமான தொடக்கம் கண்டது.

மலிங்கா சில காலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளைப்பந்தில் முதல் ஓவரைத் தொடங்கினார். தமிம் இக்பால், லிட்டன் தாஸ் இறங்கினர்.

இதில் 5வது பந்தில் லிட்டன் தாஸ், அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் ஆகி மெண்டிஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். அடுத்த பந்தே ஷாகிப் அல் ஹசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஃப் ஸ்டம்பில் ஃபுல் லெந்தாக வந்த பந்து உள்ளே ஸ்விங் ஆனது லேட் ஸ்விங், மிட் ஆனில் ஆடப்பார்த்தார் ஷாகிப், பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து ஆஃப் ஸ்டம்பைத் தரைத்தட்டச் செய்தது. இவரும் டக் அவுட்.

மலிங்கா கலக்கிவிட்டார் வங்கதேசத்தை. 2வது ஓவரை சுரங்க லக்மல் வீச 2 ரன்களில் இருந்த தமிம் இக்பால் லெக் ஸ்டம்பில் விழுந்து எழும்பிய எகிறு பந்தில் இடது மணிக்கட்டில் அடிபட்டு தொடர்ந்து ஆட முடியாமல் பெவிலியன் திரும்பினார்.

அடுத்த ஓவரில் மலிங்காவின் ஹாட்ரிக் வாய்ப்பை முஷ்பிகுர் தடுத்தார், முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மலிங்கா, தன் 2வது ஓவரை மெய்டனாக்க, வங்கதேசம் திணறித் திணறி கடைசியில் 8வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் பவுண்டரியுடன் தன் முதல் பவுண்டரி கணக்கைத் தொடங்கியது.

தற்போது மொகமது மிதுன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்களுடனும் முஷ்பிகுர் 23 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், இருவருக்கும் கேட்ச்கள் நழுவ விடப்பட்டன. 15 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 67/2. மலிங்கா 4-1-8-2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x