Published : 12 Sep 2018 10:24 AM
Last Updated : 12 Sep 2018 10:24 AM

இங்கிலாந்து அபாரமாக ஆடிவிடவில்லை; பல தருணங்களில் நாம்தான் சாதகங்களை அவர்களுக்குத் தாரை வார்த்தோம்: விராட் கோலி பேட்டி

இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற வாய்ப்பிருந்த நிலையிலெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்திய அணி வாய்ப்பை இங்கிலாந்துக்கு தாரை வார்த்துக் கொடுத்தது என்று அனைவரும் நினைப்பதையே விராட் கோலியும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான நேற்று ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரது இரட்டைச் சதக் கூட்டணி இங்கிலாந்துக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியது, இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கையை அளித்தது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

எட்ஜ்பாஸ்டனில் 194 ரன்கள் இலக்கை எதிர்த்து 31 ரன்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, சவுத்தாம்டனில் 60 ரன்களில் வெற்றியைப் பறிகொடுத்தது, ஓவலில் போராடி வெற்றி வெளிச்சம் கண்களில் தெரியும் போது கைவிட்டது ஆகியவை இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக அமைந்தது.

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி அனுகூலமான நிலையை பயன்படுத்தி நெருக்கி கில்லர் இன்ஸ்டிங்க்டுடன் ஆடாமல் இங்கிலாந்துக்குத் தாரை வார்த்தது, இங்கிலாந்தின் கீழ் வரிசை பேட்டிங், வோக்ஸ், ஸ்டோக்ஸ், சாம் கரன், பிராட், பட்லர் என்று முக்கியக் கட்டங்களில் போட்டியை இந்திய அணி கைவிட்டது.

இது பற்றி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “இரு அணிகளுக்குமே வெற்றி என்பது தொடரில் சாத்தியமாகவே இருந்த சூழல்கள் அதிகம்.

இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும், இதைவிடவும் நாம் அங்கீகரிக்க வேண்டியது போட்டியில் எங்களுக்குச் சாதகமான நிலைமைகள் இருந்த போது அதை எப்படி மேலும் ஸ்திரப்படுத்துவது என்பது முக்கியம். அதாவது சரிவு நிலையிலிருந்து எதிரணியினர் மீண்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தொடரில் பார்த்தால் அடிக்கடி நாங்கள்தான் எங்கள் கைவசம் இருந்த போட்டியை இங்கிலாந்துக்குச் சாதகமாக தாரை வார்த்தோமே தவிர அவர்கள் ஏதோ பிரில்லியண்டாக விளையாடி சூழ்நிலையைத் தங்கள் பக்கம் வென்றனர் என்று கூற முடியாது. சாம் கரன் இந்தத் தொடரில் தனிச்சிறப்பாக ஆடினார் என்பதை நான் அறிவேன். அவரைத் தவிர அந்த இடத்தில் அந்தச் சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்டிங்கில் அபாரமாகத் திகழ்ந்தது என்று நான் கூற மாட்டேன். எங்களால் அவர்கள் மீது அழுத்தத்தை நீண்ட நேரத்துக்குத் தக்க வைக்க முடியவில்லை.

நான் ஏற்கெனவே கூறியது போல் தொடரை நன்றாகத் தொடங்க வேண்டும் முதல் டெஸ்ட் போட்டியை ஏதோ பயிற்சிப் போட்டிபோல் தொடங்குவது கூடாது. முதல் டெஸ்ட் மிக மிக முக்கியம். நாம் நம் சரியான மனநிலையில் இருக்கிறோம் என்பதையும் அனைத்தையும் சரியாகச் செய்து முதலில் வெற்றி பெறுவோம் என்பதையும் உறுதி செய்வது அவசியம்” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x