Last Updated : 11 Sep, 2018 04:43 PM

 

Published : 11 Sep 2018 04:43 PM
Last Updated : 11 Sep 2018 04:43 PM

பாக்.டெஸ்ட் தொடர்: வலுவில்லாத ஆஸி. அணியில் 5 புதிய வீரர்கள்; மீண்டும் பழைய வீரர் சிடில்

 

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் இல்லாத 5 புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்து காணப்படுகிறது.

குறிப்பாக டேவிட் வார்னர், ஸ்மித் இருவரும் அணியில் இருந்தாலே அசுரபலம் இருக்கும் சூழலில் இருவரும் இல்லாமல் இங்கிலாந்து சென்று ஒரு நாள் தொடரில் கடுமையாக உதைவாங்கி வந்தது ஆஸ்திரேலியா.

இனி அடுத்ததாக துபாய், அபுதாயில் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இதற்கான அணியில் அனுபவம் இல்லாத 5 புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல்ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. புதிய வீரர்களாக குயின்ஸ்லாந்து வீரர் மைக்கேல் நீசர், பிரன்டன் டோகெட், மார்நஸ் லாபுஸ்சாக்னே, தெற்கு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், விக்டோரியா வீரர் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய அணித் தேர்வாளர் டிரவர் ஹான்ஸ் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் பல்வேறு குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனுபவ வீரர்கள், அறிமுக வீரர்கள் ஆகியோர் கலந்த கலவையில் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன் "எனத் தெரிவித்தார்.

அபுதாபி, துபாயில் பாகிஸ்தான் அணி அடிக்கடி விளையாடிய அனுபவம் இருப்பதால், அந்த மைதானம் அந்த அணிக்கு மிகுந்த பழக்கப்பட்டதாகும். தற்போது பாகிஸ்தான் அணியில் வலுவான வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் இருப்பதால், வலுவற்ற ஆஸ்திரேலிய அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.

ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில், தொடக்க வீரர்களாக மாட் ரென்ஷா, பின்ஞ் களமிறங்குவார்கள். காயத்தில் இருந்து குணமாகி ஷான் மார்ஷ் அணிக்கு திரும்பியுள்ளார். நடுவரிசையில் உஸ்மான் கவாஜா, மிட்செல்மார்ஷ், டிராவிஸ் ஹெட், லாபஸ்சாக்னே ஆகிய வீரர்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க், நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு பீட்டர் சிடில் திரும்பியுள்ளார். மேலும் புதுமுக வீரர்கள் நீஸர், பிரன்டன் டாகெட் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் நாதன் லயன், ஆஸ்டன் அகர் ஆகியோரும் விக்கெட் கீப்பராக கேப்டன் டிம் பைனேவும் உள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 7-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 16-ம் தேதியும் நடக்கிறது.

அணி வீரர்கள் விவரம்:

டிம் பைனே(கேப்டன்), ஆஸ்டன் அகர், பிரன்டன் டாகெட், ஆரோன் பின்ஞ், டிராவிஸ் ஹெட், ஜான் ஹாலட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சாக்னே, நாதன் லயான், மிட்ஷெல் மார்ஷ், ஷான் மார்ஷ், மைக்கேல் நீசர், மாத்யூ ரென்ஷா, பீட்டர் சிடில், மிட்ஷெல் ஸ்டார்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x