Published : 11 Sep 2018 08:53 AM
Last Updated : 11 Sep 2018 08:53 AM

கோலி கோல்டன் டக், புஜாராவும் 0-வில் அவுட்; மெக்ராவை சமன் செய்த ஆண்டர்சன்: தோல்வியைத் தவிர்க்க இந்தியா போராட்டம்

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று அலிஸ்டர் குக் தனது பிரியாவிடை சதத்தை அடித்தார், இது தனது கனவு சதம் என்று கூறியுள்ளார். ரூட்டும் 2 கேட்ச்கள் விடப்பட்ட பிறகு சதம் எடுக்க ஸ்டோக்ஸ் ஒரு சிறு அதிரடி இன்னிங்ஸை ஆட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 423 என்று டிக்ளேர் செய்தது.

464 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய இந்திய அணி பொறுப்பற்ற முறையில் பேட் செய்து ஷிகர் தவண் (1), புஜாரா (0), கோலி (0) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 2/3 என்று படுமோசமானது. அதன் பிறகு கே.எல்.ராகுல் ஆட்டப்பாணியை மாற்றி அடித்து ஆடினார். இதுதான் சரியான அணுகுமுறை, அவர் 51 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் களத்தில் நிற்க இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டுகளை சமன் செய்துள்ளார்.

இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய போது அதுவரை நமக்கு ஸ்விங் ஆகாத பந்துகள் அவர்களுக்கு ஸ்விங் ஆகத் தொடங்கிவிட்டன. ஷிகர் தவணின் மிக மோசமான டெஸ்ட் தொடர் 1 ரன்னில் முடிவுக்கு வந்தது. பந்தை வந்த பிறகு ஆடும் ஷிகர் தவணின் முடிவில் இன்ஸ்விங்கருக்குக் குறித்த நேரத்தில் மட்டை இறங்குவதில்லை. இப்படித்தான் நேர் நேர் தேமா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

இதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் சிந்தனையின்றி ஸ்டம்புக்கு நேராக முன்காலை அரைகுறையுமாக கொண்டு வந்தார் மட்டை வரவில்லை. எல்பி ஆனார். நல்ல வேளை ரிவ்யூ செய்யலாமா என்று யோசித்து யோசனையைக் கைவிட்டார். ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மெக்ராவைச் சமன் செய்தார்.

 

இதற்குச் சரியாக 2 பந்துகள் சென்று ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 2வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி அது நேராகச் சென்றது ஸ்விங் இல்லை, பொதுவாக இந்தப் பந்துகளை ஒன்று கோலி ராஜகவர் டிரைவ் அடிப்பார், அல்லது ஆடாமல் விட்டு விடுவார். ஆனால் இங்கிலாந்தின் குக், ரூட் பேட் செய்து களத்தில் இந்தியாவை வறுத்து எடுத்ததினால் ஏமாற்றமோ, கோபமோ அடைந்த கோலி அந்த நினைவிலேயே கால்களை அரையும்குறையுமாக நகர்த்தி மட்டையை பந்தின் மீது தொங்கவிட்டார், எட்ஜ் ஆகி பேர்ஸ்டோ கையில் தஞ்சமடைய இங்கிலாந்துக்கு வெற்றி உற்சாகம் கொப்பளிக்கத் தொடங்கியது. அதன் பிறகு ராகுல் தாக்குதலே சிறந்த தற்காப்பு என்று சில ஷாட்களை தூக்கி அடித்து 8 பவுண்டரிகளுடன் இந்தத் தொடரின் தனது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரான 46 ரன்களை 51 பந்துகளில் விளாசினார். ரஹானே தன் விக்கெட்டைப் பத்திரமாகக் காத்துக் கொண்டார். இந்தியா 58/3 என்று ஆட்ட முடிவில் உள்ளது.

நல்ல பிரகாசமாகத் தொடங்கிய தொடர் 4-1 என்ற தோல்வியில் முடிய வேண்டுமா?

எட்ஜ்பாஸ்டனில் 31 ரன்களில் தோல்வி, லார்ட்ஸில் இன்னிங்ஸ் தோல்வி, சவுத்தாம்டனில் 60 ரன்களில் தோல்வி, இடையில் டிரெண்ட் பிரிட்ஜில் ஒரு துல்லியமான, திட்டமிட்ட வெற்றி, கூட்டிக் கழித்துப் பார்த்தால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியும் இந்த டெஸ்ட் போட்டியும்தான் இங்கிலாந்து ஆதிக்கம் இருந்தது.

இந்நிலையில் பிரகாசமாகத் தொடங்கி ஏகப்பட்ட உறுதிமொழிகளின் சுவடுகளைக் காட்டிய இந்தத் தொடர் மோசமாக மீண்டும் 4-1 என்று முடிய வேண்டுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நேற்று இஷாந்த் சர்மா இடது முழங்கால் காயத்தினால் ஒரு ஓவர் போட்டு வெளியேறினர், இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றவர்கள் பந்து வீச்சில் கட்டுக்கோப்பு இல்லை. இங்கிலாந்து டிக்ளேர் செய்வது எப்போது என்று ஆடியது போல் தெரிந்தது. ரூட்டுக்கு 2 கேட்ச்கள் விடப்பட்டன. பிளாட் பிட்சில் பும்ராவின் ஷார்ட் பிட்ச் உத்தியை ரூட் எளிதில் கடந்தார், பிட்ச் மெதுவாகி விட்டது. ஜடேஜாவுக்கு பீல்டிங் வியூகம் நன்றாக வைக்கப்படவில்லை. லெக் திசையில் நிறைய இடைவெளிகள் இருந்ததால் குக், ரூட் அதைப் பயன்படுத்தி வறுத்து எடுத்தனர். ஜடேஜா பிளைட் செய்யாமல் ஷார்ட்டாகவும் நேர்நேர் தேமாவாகவும் வீசினார். சுத்த வேஸ்ட்.

ஹனுமா விஹாரியின் பந்துகள் ஓரளவுக்குத் திரும்பிய நிலையில் ஜடேஜா விரயமாக வீசினார். விஹாரி லைன் மற்றும் லெந்த்தினால் கடைசியில் சதநாயகர்களான ரூட், குக் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார். விஹாரி, ஜடேஜாவை வைத்தே போட்டிருக்க வேண்டும், ஆனால் கோலி தப்பும் தவறுமாக அப்போது போய் புதிய பந்தை எடுத்தார், இதனால் ஸ்டோக்ஸ், கரன் இடையே அனாவசியமாக 41 ரன்கள் விரைவுகதி கூட்டணி ஏற்பட்டது. கடைசியில் கையும் காலும் களைப்படைந்த இந்திய பவுலர்கள் இளைப்பாறுமார் ரூட் டிக்ளேர் செய்தார். இந்திய அணிக்கு இலக்கு 464.

மொயின் அலி அச்சுறுத்தல்:

இன்று இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மொயீன் அலியின் பந்து வீச்சுதான். கோலி அச்சுறுத்தலை ஸ்டூவர்ட் பிராட் முடித்து வைத்தார், இந்த டக் கோலியின் நினைவிலிருந்து அகல நீண்ட காலம் ஆகும். ஒரே ஆறுதல் இந்தத் தொடரில் ஆண்டர்சனிடம் விக்கெட்டைக் கொடுக்கவில்லை கோலி. அதனால் எந்தப் பயனும் இல்லை. எழுத்தாளர் அசோக மித்திரன் ‘பாவம் டல்பதடு’ என்ற தன் படைப்பில், “இருட்டில் தடுக்கி விழுந்தால் ஒரேயொரு பயன் தான் யாரும் பார்க்க மாட்டார்கள், ஆனால் அதனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்று எழுதியிருப்பார் அதுதான் கோலியின் நிலைமையும், ஆண்டர்சனிடம் விக்கெட் கொடுக்கவில்லையே ஆனால் அதனால் என்ன பயன்? என்பதே அந்த இருண்ட நகைச்சுவை.

தொடரை நம்பர் 1 என்று தொடங்கி அதற்கு எந்தவித குந்தகமும் ஏற்படவில்லை, ஆனால் இன்னமும் இந்திய அணியை நம்பர் 1 என்று கூறினால் அது நகைப்புக்குரியதுதான்.

வித்தியாசமான அணியாகத் தொடங்கி கடைசியில் ரவிசாஸ்திரி ஆடிய கால இந்திய அணிபோல் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி ஆடியது.

இங்கிலாந்தில் இந்திய அணியின் மறக்க வேண்டிய தொடர்களில் இந்தத் தொடரும் இணைந்து விட்டது.

இனி என்ன? அடுத்து மே.இ.தீவுகள் வருகிறது, அவர்களைப் போட்டு சாத்து சாத்தென்று சாத்தி ‘அப்யூஸ்’ தான். ஆசியக் கோப்பை வருகிறது. அதில் பாகிஸ்தான் என்ற அச்சுறுத்தல் உள்ளது. ஐசிசியின் எஃப்.டி.பியை தங்களுக்குச் சாதகமாக்கி தொடர்ந்து இந்தியாவிலேயே ஆடி, தொடர்ந்து இலங்கையுடனேயே ஆடி இல்லாத வெற்றுச் சாதனைகளை ஊடகங்களை வைத்துப் பேச வைத்து இப்போது உண்மையான திறமை அம்பலப்பட்டு நிற்பதைத்தான் பிசிசிஐ சாதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x