Published : 10 Sep 2018 08:24 PM
Last Updated : 10 Sep 2018 08:24 PM

‘கோல்டன் ஆர்ம்’-சதநாயகர்கள் குக், ரூட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்ற ஹனுமா விஹாரி

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்தியப் பந்து வீச்சை வறுத்தெடுத்த அலிஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் அறிமுக வீரர் ஹனுமா விஹாரி.

தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் என்று 404 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட்டிலேயே கடும் நெருக்கடித் தருணத்தில் இறங்கி அரைசதம் அடித்து தன் தேர்வு குறித்து இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த ஹனுமா விஹாரியை முதல் இன்னிங்சில் கோலி சரியாகப் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் 3வது விக்கெட்டுக்காக இணைந்து 259 ரன்களைச் சேர்த்து இந்தியப் பந்து வீச்சை வறுத்து எடுத்த ஜோ ரூட், அலிஸ்டர் குக் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் ஹனுமா விஹாரி.

12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 125 ரன்களில் ஆடிவந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ரன் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு ஹனுமா விஹாரி வீசிய அவரது 8வது ஓவரின் முதல் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் ஆனால் பந்து பிட்சில் உள்ள ரஃபில் பட்டு நின்று வர சரியாக மட்டையில் சிக்காமல் டீப் மிட்விக்கெட்டில் பதிலி வீரர் பாண்டியாவிடம் கேட்ச் ஆனது.

இந்த ஷாட்டின் போது பேட்டிங் முனைக்கு வந்த சதநாயகன் அலிஸ்டர் குக், 147 ரன்களில் இருந்த போது அடுத்த பந்திலேயே ஹனுமா விஹாரியை கட் ஆட முயன்று எட்ஜ் செய்ய ரிஷப் பந்த் கையில் கேட்ச் ஆனது.

அலிஸ்டர் குக் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட்டில் ஆடும் அறிமுக வீரர் ஹனுமா விஹாரியிடம் ஆட்டமிழந்தது ஒரு நல்ல நகைமுரண். இந்திய வீரர்கள் அனைவரும் குழுமி நின்று கரகோஷம் செய்தனர், அனைவரும் அலிஸ்டர் குக்கிற்கு கைகொடுத்து வழியனுப்பினர். ஹனுமா விஹாரியின் பொற்கரம் ஹாட்ரிக் வாய்ப்பைக் கொடுத்தது, ஆனால் ஹாட்ரிக் தடுக்கப்பட்டது.

அதன் பிறகு பேர்ஸ்டோவை ஷமி வெளியேற்ற பட்லரை ஜடேஜா டக்கில் வெளியேற்ற தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் என்று 404 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x