Published : 10 Sep 2018 03:47 PM
Last Updated : 10 Sep 2018 03:47 PM

தோனி போல் வருமா? கீப்பர்-பேட்ஸ்மென் இடத்தை நிரப்புவது மிகக்கடினம்; ரிஷப் பந்திடம் பொறுமை காட்டுங்கள்: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை

இந்திய அணியில் டெஸ்ட் விக்கெட் கீப்பிங் தோனி ஓய்வு பெற்ற பிறகே பெரிய ஓட்டை விழுந்துள்ளது. விருத்திமான் சஹா ஆஸ்திரேலியா தொடரில் ஆடுவது கூட சந்தேகம் என்ற நிலையில் ரிஷப் பந்த்தின் சந்தேகத்துக்குரிய பார்ம் இப்போது சிக்கலாகியுள்ளதால் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்த்ரேலிய முன்னாள் கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட் தன் கருத்தை வெளியிட்டபோது கூறியதாவது:

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே இந்திய அணி ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனைக் கண்டுபிடிக்கப் போராடி வருகிறது.

ஆனால் அவரது இடத்தில் தேர்வு செய்யும் வீரருக்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும், அணிக்குள் தேர்வு செய்வது பிறகு நீக்குவது போன்ற முடிவுகளில் இந்திய அணிதேர்வாளர்கள் எச்சரிக்கை கடைபிடிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவும் பிராட் ஹேடின் ஓய்வுக்குப் பிறகு கிரகாம் மனு, மேத்யூ வேட், பீட்டர் நெவில், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், பிறகு டிம் பெய்ன் என்று ‘சுழல் கதவு’ முறையைக் கடைபிடித்து வருகிறது. இதே தவறை இந்திய அணி செய்யக் கூடாது.

ரிஷப் பந்த் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காப்பது அவசியம்.

விறுவிறுவென வீரர்களை எடுப்பதும் கவிழ்ப்பதுமாக இருந்தால் அது வீரர்களின் மனத்தளவில் காயங்களையே உருவாக்கும். இது அவர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தும் என்பதே அனுபவ உண்மை. ஆகவே ரிஷப் பந்த்துக்கு தொடர்ச்சியாக கணிசமான வாய்ப்புகளை வழங்கி அவரிடமுள்ள சிறந்தவற்றை வெளியே கொண்டு வரவே முயற்சிக்க வேண்டும்.

ஷேன் வார்ன் ஓய்வு பெற்ற பிறகு ஆஸி.அணியில் பெரிய ஓட்டை விழுந்தது இன்றளவும் அது சரியாகப் பூர்த்தி செய்யப்பட முடியாத இடமாக உள்ளது. அதே போல்தான் இந்தியாவிலும் 4 பெரிய வீரர்களான, சச்சின், திராவிட், லஷ்மண், கங்குலி போன பிறகு இதே தடுமாற்றம்தான் ஏற்பட்டது, இவர்களது இடங்களை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல. அதே போல்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் பிரிவில் தோனி ஒரு மிகப்பெரிய இடம், அவரது இடத்தை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆகவே பந்த்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளா ஆடம் கில்கிறிஸ்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x