Published : 08 Sep 2018 03:49 PM
Last Updated : 08 Sep 2018 03:49 PM

அஸ்வினின் உடல்நிலையுடன் ‘விளையாடியதா’ அணி நிர்வாகம்?: விராட் கோலி, ரவி சாஸ்திரி முரண்பட்ட பேச்சால் குழப்பம்

சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உடற்தகுதியில்லாமல் இருந்தநிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடச் செய்ததால் அவரின் காயம் மேலும் மோசமானது என்று கேப்டன் விராட் கோலி ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால், அதை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மறுத்துள்ளதால் குழப்பமான நிலை உருவாகியுள்ளது

இந்திய அணி, இங்கிலாந்து பயணத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்துவிட்டது. கடைசி மற்றும் 5-வது போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியின் போதே சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு முதுகுப்பிடிப்பு இருந்ததால், அவரால் பயிற்சியின் போது பந்துவீசாமல் இருந்தார். ஆனால், கடைசி இரு நாட்கள் மட்டும் பந்துவீசிய நிலையில் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், கடந்த 3 போட்டிகளில் துடிப்புடன் பந்துவீசிய அஸ்வின் 4-வது போட்டியில் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசவில்லை.

சுழற்பந்துவீச்சில் அனுபவமில்லாத மொயின் அலி 9 விக்கெட்டுகளை சவுத்தாம்டன் மைதானத்தில் வீழ்த்திய நிலையில், அஸ்வின் விக்கெட் வீழ்த்தாதது பெரும் விமர்சனமானது. ஆனால், அதை சரியாகக் கண்டுபிடித்த இங்கிலாந்து வர்ணனையாளர்கள், முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி, “அஸ்வின் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று நினைக்கிறோம். அவரின் முழுத்திறமையை இந்த பந்துவீச்சில் நாங்கள் பார்க்கவில்லை. அஸ்வினுக்கு அதிகமான ஓவர்கள் கொடுப்பதற்குப் பதிலாக மற்ற வீரர்களுக்கு விராட் கோலி அளிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓவலில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேட்டபோது, அஸ்வினுக்கு 3-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுப்பிடிப்பு ஏற்பட்டு இருந்தது. அதனால் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தார்.

ஆனால், 4-வது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யவேண்டாம் என நினைத்திருந்த நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அறிவுறுத்தலின் பெயரில் அஸ்வின் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் அணியில் அஸ்வின் இடம் பெற்றார்.

இப்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமாகி இருக்கிறது. ஆதலால் ஓவல் டெஸ்ட் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது அவருக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

ஆனால், அஸ்வினுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை அவர் உடற்தகுதியுடனே இருந்தார் என்று துணைக் கேப்டன் ரஹானேவும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் தெரிவித்துள்ளது முரணாக இருக்கிறது.

கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் உடல்காயத்தை பொறுத்துக்கொண்டுதான் விளையாடியுள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர்கள் மறுக்கின்றனர்.

அஸ்வின் முழுஉடல்தகுதியுடன் இருந்த காரணத்தில்தான் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட அழைத்தோம், உடற்தகுதியில்லாத ஒருவீரரை விளையாட அழைக்கமாட்டோம் என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அஸ்வின் உடல்நிலை குறித்து கேப்டன் விராட் கோலியும், துணைக் கேப்டன் ரஹானே, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒருவகையாகப் பேசுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீரரின் உடல்நிலையை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் அணிநிர்வாகம் பொறுப்பற்று செயல்பட்டுள்ளது இந்தச் சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

ஏற்கெனவே இதுபோன்று விக்கெட் கீப்பர் விர்திமான் சாஹாவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தை மறைத்துத் தொடர்ந்து அவரை டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தனர்.

சாஹவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி ஐபிஎல் தொடரில் நீக்கப்பட்டார். ஆனால் அதன்பின்பு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில்தான் தோள்பட்டை காயம் எனத் தெரியவந்தது. தற்போது பிசிசிஐ சார்பில் லண்டனில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விர்திமான் சாஹா வரிசையில் இப்போது ரவிச்சந்திர அஸ்வினையும் சேர்த்துவிட்டார்களா என்பது குழப்பமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x