Published : 08 Sep 2018 03:04 PM
Last Updated : 08 Sep 2018 03:04 PM

விராட் கோலி நீக்கம்?- ஆர்சிபி அணிக்கு டி வில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்க திட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு, 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டீ வில்லியர்ஸை கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய தகுதி படைத்த அணிகளாகக் கருதப்பட்டது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. ஆனால், 3 முறை இறுதிப்போட்டி வரை சென்றும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. பல நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தும் அந்த அணியால் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்திக்கும் சூழல் இருந்தது.

இதையடுத்து பெங்களூரு அணியில் புதிய மாற்றங்களை உண்டாக்கும் நோக்கிலும், அடுத்த ஆண்டு சீசனில் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கிலும் பல அதிரடி மாற்றங்களை அணி நிர்வாகம் சமீபத்தில் செய்தது.

அதன்படி சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரியை நீக்கிவிட்டு, இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்குக் காரணமாக இருந்து பயிற்சியளித்த கேரி கிரிஸ்டனை பயிற்சியாளராக நியமித்தது. மேலும், பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், பயிற்சி அதிகாரியாகவும் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட்டார்.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். ஆனால் கோலி தலைமையில் 2016-ம் ஆண்டு மட்டுமே பெங்களூரு அணி இறுதிப்போட்டி வரை சென்றது. மற்றபடி 4 தொடர்களிலும் லீக் சுற்றுகளில் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

 இதனால், அடுத்த சீசனுக்கு கேப்டனை மாற்றிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்கும் மிகப்பெரிய முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக பெங்களூரில் வெளிவரும் நாளேடும், ஆங்கில செய்திச் சேனல் ஒன்றிலும் செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி அடுத்த சீசனுக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும் ஊடகங்களில் வெளியான செய்தியை இதுவரை பெங்களூரு அணி நிர்வாகம் மறுக்கவில்லை.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கிலும் விளையாட, டி வில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் பிஎஸ்எல் லீக் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளதாக டி வில்லியர்ஸ் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x