Published : 08 Sep 2018 10:26 AM
Last Updated : 08 Sep 2018 10:26 AM

ஒரே ஓவரில் குக், ரூட்டை வீழ்த்திய பும்ரா; இஷாந்த் சர்மா மிகப் பிரமாதம், மொயீன் ‘பீட்டன்’ அலி: இங்கிலாந்து சரிவு

பிரியாவிடை ஓவல் டெஸ்ட் போட்டியில் அலிஸ்டர் குக் 71 ரன்கள் எடுத்த பிறகு பும்ரா ஒரே ஓவரில் இவரையும் ரூட்டையும் வீழ்த்த பிறகு இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

ஆட்ட முடிவில் பட்லர் 11 ரன்கள் எடுத்தும் ஆதில் ரஷீத் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக டாஸ் வென்ற ரூட் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க ஜெனிங்ஸ், குக் கூட்டணி முதல் விக்கெட்டுக்காக 60 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஜடேஜா மிக அருமையாக ஓவர் த விக்கெட்டில் ஒரு பந்தை குட்லெந்தில் வீசி அதே கோணத்தில் செல்லுமாறு வீச பிளிக் ஆட முயன்ற ஜெனிங்ஸ் மட்டையில் பட்டு லெக் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, ஒருவிதத்தில் ஜெனிங்ஸ் விக்கெட்டை கோலி, ஜடேஜா திட்டமிட்டு வீழ்த்தினர் என்றே கூற வேண்டும், அலிஸ்டர் குக் விக்கெட்டை ஜடேஜா இந்த முறையில் வீழ்த்தியதுண்டு. ஜெனிங்ஸ் 75 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 68/1 என்று இருந்தது.

உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை இந்திய அணி அபாரப் பந்து வீச்சை வெளிப்படுத்தியது, ஆனால் விக்கெட்டுகள் மட்டும் விழவில்லை. அலிஸ்டர் குக்கிற்கு இஷாந்த் சர்மாவின் அருமையான பந்தில் வைடு ஸ்லிப்பில் ரஹானே கையில் வந்த கேட்சைத் தவற விட்ட போது குக் 37 ரன்களில்தான் இருந்தார்.

தொடர்ந்து குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வந்த குக் இந்த டெஸ்ட் போட்டியில் சுறுசுறுப்பாக ஆடினார் பும்ராவை ஒரு கட் பிறகு ஒரு மெஜஸ்டிக் புல் ஷாட் அவரது இன்னிங்ஸின் மறக்க முடியாத ஷாட்களாகும்.

இதன் பிறகு உடனேயே பும்ரா பந்தில் விராட் கோலி, மொயின் அலிக்கு சற்றே கடினமான வாய்ப்பை தரையில் விட்டார்.

மொயீன் ‘பீட்டன்’ அலி:

இந்த 2 மணி நேரத்தில் மொயின் அலி குறைந்தது 30-35 பந்துகளாவது பீட்டன் ஆகியிருப்பார், பயங்கரமானத் தடவல் இன்னிங்ஸ். ஆனால் ஆட்டமிழக்கவில்லை, அலிஸ்டர் குக்கின் ரன் எடுக்கும் வேகமும் குறைந்தது.

உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேலை வரை 55 ரன்களையே எடுத்தனர், ஆனால் விக்கெட் விழவில்லை, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா இந்த 2 மணிநேரத்தில் இங்கிலாந்துக்கு வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று காட்டினர். குறிப்பாக மொகமது ஷமி ஏகப்பட்ட முறை மொயின் அலியை பீட் செய்தார். 22 ஓவர்கள் வீசிய மொகமது ஷமியை கடைசி வரை சரியாகவே மொயின் அலியினால் ஆட முடியவில்லை. ஷமி பந்தில் மட்டும் சுமார் 20 முறை பீட்டன் ஆனார், சில சமயங்களில் எட்ஜ்களும் ஆனது. இஷாந்த் சர்மா உண்மையில் வீசிய லெந்த், வேகம் பந்துகளின் எழுச்சி இங்கிலாந்துக்கு ஒரு கிளென்மெக்ராவைக் கண்ணில் காட்டியிருக்கும்.

139 பந்துகளில் போராடி அரைசதம் கண்டார் அலிஸ்டர் குக். பிறகு 71 ரன்கள் எடுத்து இறுதி டெஸ்ட்டில் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா வீசிய அபாரமான பந்து ஒன்று உள்ளே வர சற்றே எதிர்பார்க்காத அலிஸ்டர் குக் மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

இதே ஓவரில் பும்ரா வைடு ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை உள்ளே செலுத்த ஜோ ரூட் கால்காப்பில் வாங்கினார், கொஞ்சம் பெரிய இன்ஸ்விங்கர்தான் பிளம்ப் எல்.பி. வழக்கம் போல் ரிவியூ விரயமாக ரூட் நடையைக் கட்டினார்.

பேர்ஸ்டோவுக்கு நன்றாக வீசிய இஷாந்த் சர்மா அவர் ரன் எண்ணிக்கையைத் தொடங்கும் முன்பே அருமையான ஒரு பந்தில் அவரது எட்ஜைப் பிடித்தார், பந்த் சரியாகப் பிடிக்க இங்கிலாந்து 1 ரன்னுகு 3 விக்கெட்டுகளை இழந்தது.

கடுமையாக தடவித் தடவி ஆடிய மொயின் அலி 164 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன் பிறகு 6 பந்துகளில் அவருக்கு ரன் வரவில்லை. 4 பவுண்டரிகள், 30-40 பீட்டன்கள், எட்ஜ்கள். 50 ரன்னில் அத்தனை நேரமாக எட்ஜை ஏமாற்றி வந்த பந்து ஒன்று எட்ஜ் ஆக பந்த் கேட்ச் எடுத்தார், இஷாந்த்தின் கடின உழைப்புக்கு மொயின் அலியின் விக்கெட் பரிசாகக் கிடைத்தது. இதே ஓவரில் இந்தியாவின் அச்சுறுத்தல் வீரர் சாம் கரன் இஷாந்த்தின் ’டீசிங்-டீச்சிங்’ லெந்த் பந்தை ஆடலாமா வேண்டாமா என்று இருதலைக்கொள்ளியாகி மட்டையை விலக்க நினைப்பதற்குள் எட்ஜ் ஆகி பந்த்திடம் கேட்ச் ஆனது டக் அவுட் ஆனார் சாம் கரன்.

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் துல்லியமாக, சிக்கனமாக சிக்கலில்லாத பவுலிங் செய்த ஜடேஜாவிடம் எல்.பி.ஆனார். ஒரு பந்து சரேலென ஷூட்டர் போல் வேகமாக வர காலை முன்னால் போடாத பென் ஸ்டோக்ஸ் பிளம்ப் எல்.பி.ஆனார்.

பட்லர் 11 ரன்களுடனும் ரஷீத் 4 ரன்களுடனும் களத்தில் இருக்க இங்கிலாந்து 198/7. இஷாந்த் சர்மா 22 ஓவர்கள் 10 மெய்டன் 28 ரன்கள் 3 விக்கெட். பும்ரா 21 ஓவர்கள் 9 மெய்டன் 41 ரன்கள் 2 விக்கெட். ஜடேஜா 57 ரன்களுக்கு 2 விக்கெட். ஷமிக்கு அதிர்ஷ்டம் இல்லை. மொயின் அலி விக்கெட்டை இவர்தான் வீழ்த்தியிருக்க வேண்டும்.

225 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்ட வேண்டும் 300 ரன்னெல்லாம் அடிக்கவிட்டால் இந்திய அணிக்குக் கஷ்டம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x