Published : 07 Sep 2018 11:30 AM
Last Updated : 07 Sep 2018 11:30 AM

கெவின் பீட்டர்சனை அணியிலிருந்து நீக்கிய தீராப்பழிக்கு காலம்தான் மருந்து: அலிஸ்டர் குக் வேதனை

ஓவல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் இங்கிலாந்தின் மிகச்சிறந்த சாதனை பேட்ஸ்மென் அலிஸ்டர் குக், தான் கேப்டனாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கெவின் பீட்டர்சன் சர்ச்சை குறித்து பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

2014 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸியில் நடந்த ஆஷஸ் தொடரில் குக் தலைமையில் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கியது, அதில் இங்கிலாந்தில் ஓரளவுக்கு அதிக ரன்களை எடுத்தவர் கெவின் பீட்டர்சன் தான். ஆனால் இங்கிலாந்து அணியிலுள்ள மேட்டுக்குடி லாபி கெவின் பீட்டர்சனை வெளியேற்ற தோல்விகளை ஒரு காரணமாகப் பயன்படுத்தியது, ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராடின் சூழ்ச்சியில் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து ஓய்வறைக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று ஒருமனதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

இங்கிலாந்துக்காக தென் ஆப்பிரிக்காவை விட்டு வந்து ஆடி அந்த அணிக்கு பல வெற்றிகளை ஈட்டித்தந்து தன் சொந்த நாட்டையே தியாகம் செய்த ஒரு வீரரை இங்கிலாந்து இழிவு படுத்தி அனுப்பியது. இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக கேப்டன் குக்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அப்போது கேப்டனாக இருந்த குக் கூறியதாவது:

என் கிரிக்கெட் வாழ்வில் அது மிகவும் கடினமான காலக்கட்டம். அந்தச் சர்ச்சை என் பேட்டிங்கையே பாதித்தது.

ஒருநாள் ஸ்ட்ராஸ் வந்து கெவின் பீட்டர்சன் இனி இங்கிலாந்துக்கு ஆடப்போவதில்லை என்று கூறியவுடன் என் தோள்களிலிருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது.

முதலில் கெவின் பீட்டர்சனை அனுப்பிவிடுவது என்ற முடிவில் நானும் பங்கு பெற்றேன், ஆனால் இப்போதைக்கு வேண்டாம், ஓராண்டு கழித்து மீண்டும் அவரை அழைக்கலாம் என்றுதான் நான் கூறினேன்.

ஆனால் பல் டவுண்டன் தெளிவு வேண்டும் என்று வலியுறுத்தினார். பீட்டர்சன் விவகாரம் படுமோசம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதனை மோசமாகக் கையாண்டதாகவே கருதுகிறேன். அதே போல் சமூக வலைத்தளங்கள் அப்போது சமூக வலைத்தளங்கள் எப்படிச் செயல்பட்டன என்பதையும் இங்கிலாந்து வாரியம் அறிந்திருக்கவில்லை.

ஆம், சமூகவலைத்தளங்களில் பீட்டர்சன் விவகாரத்தில் என்னைப் போட்டு வறுத்து எடுத்தார்கள். அதுதான் கேப்டனாக இருப்பது என்றால் ஏற்படுவது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

டேவிட் கோவரை அணியிலிருந்து நீக்கியதற்கு கிரகாம் கூச்தான் காரணம் என்று அவர் மீது ஒரு தீராப்பழி இருந்தது. அதே போல் பீட்டர்சன் அனுப்பப் பட்டதற்கு நான் காரணம் என்று என் மீது தீராப்பழி உள்ளது. காலம்தான் மருந்து எங்கள் விரிசலுற்ற நட்பிற்கும் காலம்தான் மருந்து.

இதனால் நானும் பீட்டர்சனும் அதற்குப் பிறகு 4 ஆண்டுகளாக பேசிக்கொள்ளக்கூட இல்லை. ஆனால் எங்களிடையே நிறைய நினைவுகள் உள்ளன. நல்ல நினைவுகள் உள்ளன. கிரிக்கெட் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் எங்கள் உறவுகளில் பாதிப்பில்லை என்றுதான் கூறுவேன், ஆனால் பீட்டர்சன் வேறு கருத்தை நிச்சயம் வைத்திருப்பார்.

இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x