Published : 06 Sep 2018 05:58 PM
Last Updated : 06 Sep 2018 05:58 PM

‘விராட் கோலி இல்லையா?: இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவேன்’: பாக் வீரர் ஹசன் அலி பேராசை

ஆசியக் கோப்பையில் விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் நான் வீழ்த்துவேன் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வாஹா-அடாரி எல்லைக்குச் சென்ற ஹசன் அலி, கொடி இறக்கும் நிகழ்ச்சியின் போது, இந்திய ராணுவ வீரர்களைப் பார்த்து கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டார். அது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத சூழலில் கூட, எல்லையில் இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கு ராணுவம் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்திய இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி தொடர்நாயகன் விருதை ஹசன் அலி வென்றார். முதல் லீக் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான். அப்போது, ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் கொடுத்தார் ஹசன் அலி.ஆனால் 2017, ஜூன் 18-ம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த ஆட்டத்தில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான்.

இந்நிலையில், லாகூரில் நிருபர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களைப் பொறுத்தவரை வரும் 19-ம் தேதி நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, ஒட்டுமொத்த ஆசியப் போட்டித் தொடரிலும் கவனம் செலுத்துவோம். எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, எங்களுக்கு புதிய உத்வேகம், வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிடுகிறது.

இதே நம்பிக்கை, உத்வேகத்துடன் இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்கொள்வோம். இந்த அழுத்தம் என் மீது இருக்கும் போதுதான் நான் களத்தில் சிறப்பாகப் பந்துவீசி எனது அணியை வெற்றி பெற வைக்க முடியும்.

இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடும் போது என்னுடைய விக்கெட் வீழ்த்தும் திறமையை 10 மடங்கு உயர்த்திக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம். ஒவ்வொரு பந்துவீச்சாளரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்குத்தான் அதிகமாக விரும்புவார்கள், ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயல்வேன். எங்கள் அணிக்கு வெற்றி தேடித் தருவேன்.

ஆசியக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விராட் கோலி இல்லாமல் வருவது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாகும். இதனால், இந்திய அணிதான் மிகுந்த நெருக்கடியில் சிக்கப்போகிறார்கள். விராட் கோலி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொரு இளம் பந்துவீச்சாளரும் அவரின் விக்கெட்டை வீழ்த்தினால் அது சாதனையாகக் கருதுவார்கள். இந்த முறை அவரை நான் சந்திக்காவிட்டால் அடுத்த முறை அவரைச் சந்தித்து அவரின் விக்கெட்டை வீழ்த்துவேன்.

இவ்வாறு ஹசன் அலி தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி பொதுவாக மிடில் ஓவர்களில் பந்துவீசுவதற்குத்தான் அழைக்கப்படுவார். கட்டுக்கோப்பாகவும், துல்லியமாகவும் வீசக்கூடியவர் ஹசன் அலி என்றபோதிலும், தொடக்கத்திலேயே இந்திய விக்கெட்டுகள் சரிந்துவிட்டால் அவரால் எப்படி 10 விக்கெட்டுகள் வீழ்த்த முடியும். இல்லாவிட்டால், 20 ஓவர்களுக்கு மேல் பந்துவீசும் ஹசன் அலியால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது சாத்தியமா எனத் தெரியவில்லை. ஒருநாள் தொடரிலேயே இதுவரை அதிகபட்சமாக ஒரு பந்துவீச்சாளர் 8 விக்கெட்டுகளை (சமிந்தா வாஸ்) வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x