Published : 04 Sep 2018 08:46 PM
Last Updated : 04 Sep 2018 08:46 PM

14 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத தோல்வி: தரவரிசை 55-ல் உள்ள வீரரிடம் முதல் முறை தோல்வி; ரோஜர் பெடரர் அதிர்ச்சி

யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு 4வது சுற்றில் உலகத்தரவரிசை 2ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர், இந்தத் தொடரில் தரவரிசை வழங்கப்படாத ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனிடம் 3-6, 7-5, 7-6, 7-6 என்ற செட்களில் தோற்று அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார்.

யு.எஸ். ஓபன் டென்னிஸில் ஜான் மில்மேனுக்கு தரவரிசை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ‘அன்சீடட்’ வீரரிடம் பெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

14 ஆண்டுகால யு.எஸ்.ஓபன் டென்னிஸில் இல்லாத அளவுக்கு ரோஜர் பெடரர் முதல் முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

முதல் செட்டிலேயே பெடரரை அச்சுறுத்தினார் மில்மேன், பெடரர் சர்வை முறியடிக்கும் நிலைக்கு வந்தார். ஆனால் பெடரர் எப்படியோ முறியடித்து முதல் செட்டை 6-3 என்று கைப்பற்றினார்.

2வது செட்டில் மில்மன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பெடரர்தான் 5-4 என்று முன்னிலை வகித்தார், அதிலும் சர்வில் 40-15 என்று முன்னிலையும் வகித்தார். ஆனால் மில்மன் திடீரென பேயாட்டம் ஆடி 3 கேம்களை தொடர்ச்சியாக வென்று 7-5 என்று 2வது செட்டைக் கைப்பற்றி அதிர்ச்சியளித்தார்.

இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவ இரு செட்களும் டை பிரேக்கர்களுக்குச் சென்றது. இதில் பெடரரைக் காட்டிலும் மில்மேன் அதிகக் கட்டுப்பாட்டுடன் ஆடினார். தொடர்ச்சியாக சர்வ்களில் வெற்றி பெற்று போட்டியையும் வென்று பெடரரை வெளியேற்றினார்.

பெடரர் தன் டென்னிஸ் வாழ்க்கையில் இரட்டை இலக்கத்தில் 4வது முறையாக இந்தப் போட்டியில் டபுள் ஃபால்ட் செய்தார். அதாவது 10 டபுள் பால்ட்களைச் செய்தார் பெடரர். அதே போல் வாழ்க்கையில் முதல் முறையாக டாப் 50-ஐயும் கடந்த வீரரிடம் பெடரர் தோல்வியடைகிறார்.

1999-ல் பாட் ராஃப்டருக்குப் பிறகு பெடரரை வீழ்த்திய 2வது ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் என்ற புகழையும் மில்மேன் பெற்றார்.

ரோஜர் பெடரர் சர்வ்கள் அவரது பின்னடைவுக்குக் காரணமானது. ஷாட்களும் சரியாக அமையவில்லை அன் ஃபோர்ஸ்டு எரர்களையும் முக்கியக் கட்டத்தில் செய்தார். கடைசியில் வெளியேற்றப்பட்டார்.

காலிறுதியில் ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் மோதுவார்கள் என்று எதிர்பார்த்த யு.எஸ். ஓபன் டென்னிஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது பெடரரின் வெளியேற்றம்.

இப்போது 55-ம் தரவரிசை மில்மேனும் 6ம் தரவரிசை ஜோகோவிச்சும் காலிறுதியில் மோதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x