Published : 03 Sep 2018 06:21 PM
Last Updated : 03 Sep 2018 06:21 PM

அலட்டல் இல்லாத அமைதியான சாதனையாளர் அலிஸ்டர் குக் ஓய்வு அறிவித்தார்

இந்தியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியே தன் இறுதி டெஸ்ட் போட்டி என்று இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மெனான உருவெடுத்த அலிஸ்டர் குக் அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 6வது வீரர் அலிஸ்டர் குக். அவருக்கு வயது 33தான் ஆகிறது. ஆனால் பேட்டிங் பார்ம் சீரடையவில்லை, இந்த ஆண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 18.62 தான்.

ஆகவே இதுவே ஓய்வு பெற சரியான தருணம் என்று அவர் முடிவெடுத்து விட்டார்.

இங்கிலாந்திலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை குக் படைத்தவர். இதுவரை 160 போட்டிகளில் 12,254 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44.88. சராசரி 45க்குக் கீழ் இப்போதுதான் இறங்கியுள்ளது. 32 சதங்கள் 52 அரைச்தங்கள், 11 டக்குகள். அதிகபட்ச ஸ்கோர் 294.

2006-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அறிமுக டெஸ்ட்டிலேயே 21 வயது வீரராக சதம் அடித்தார். 2010-11-ல் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற தொடரில் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், அந்தத் தொடரில் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பிய குக் பிறகு பெரிய அளவில் மீண்டெழுந்து ஆஸ்திரேலிய பவுலர்களை வறுத்தெடுத்தார்.

32 சதங்களை இவர் எடுத்த வேகம் சச்சின் டெண்டுல்கர் சாதனையும் முறியடிப்பார் என்று இங்கிலாந்து ஊடகங்களை ஹேஷ்யம் கூற வைத்தன.

ஆனால் இவரது கிரிக்கெட் வாழ்வில் இருண்ட தருணங்களும் உண்டு 2014-ல் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்புமின்றி திடீரென நீக்கப்பட்டார். குக்கின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் 2013-14-ல் ஒயிட் வாஷ் வாங்கிய போது கெவின் பீட்டர்சன் வெளியேற்றப்பட்டதில் முக்கிய பங்காற்றியதாக இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இங்கிலாந்து கேப்டன்களிலேயே உண்மையில் ஒரு ஜெண்டில் மேன் இவர், அனாவசியமான கள சர்ச்சைகளில் சிக்கியதில்லை. சாதுவான சாதனையாளர். களத்தில் இந்த ஸ்லெட்ஜிங் போன்றவற்றை ஊக்குவிப்பவர் அல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

உத்தி ரீதியாக எப்போதும் கொஞ்சம் அதீத கவனம் மேற்கொள்பவர் என்பதால் இவரது ஆட்டத்தை அது வெகுவாகப் பாதித்தது, சேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, லாரா போன்றவர்களுக்கு எதிர்நிலையான மனநிலை, அவர்கள் பொதுவாக உத்திபற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். இவர் கொஞ்சம் கவாஸ்கர் ரகம். லெக் திசைதான் இவரது வலுவான பிரதேசம்.

இங்கிலாந்து அணி நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியதில் இவரும் ஆண்ட்ரூ ஸ்ட்ராசும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நாட்கள் மிக முக்கியமானது. 2012 தொடரில் இந்தியாவில் வந்து இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது அலிஸ்டர் குக் இந்திய ஸ்பின்னர்களை இந்தப் பிட்சில் ஆடியது பலருக்கும் கண் திறப்பாக அமைந்ததையும் மறுக்க முடியாது. மேத்யூ ஹெய்டனுக்குப் பிறகு இந்திய ஸ்பின்னர்களை இந்தியாவில் சிறப்பாக ஆடியவர் என்றால் அது அலிஸ்டர் குக் தான்.

ஆனால் ஸ்ட்ராஸ் ஓய்வு பெற்ற பிறகு குக்குடன் களமிறங்க ஏகப்பட்ட வீரர்களை இங்கிலாந்து சோதித்தது ஆனால் இன்னமும் கூட அவருக்கு துணையானவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஓவலில் குக் களமிறங்கும் போது 159 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாகக் களமிறங்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

இந்நிலையில் இவரது ஓய்வு இங்கிலாந்து அணியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்துவது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x