Last Updated : 03 Sep, 2018 03:37 PM

 

Published : 03 Sep 2018 03:37 PM
Last Updated : 03 Sep 2018 03:37 PM

எத்தனை நாளைக்குத்தான் நன்றாக ஆடுகிறோம், சவால் அளிக்கிறோம் என்று கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்: : விராட் கோலி ஏமாற்றம்

அயல்நாடுகளில் சவால் அளிக்கிறோம், போட்டிபோட்டு ஆடுகிறோம் என்று எத்தனை நாளைக்குக் கூறி கொண்டிருக்கப் போகிறோம் எப்போது இதனைக் கடந்து தொடரை வெல்லப் போகிறோம் என்று சதாம்ட்ப்டன் தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய வீரர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

4வது டெஸ்ட் போட்டியில் 245 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 184 ரன்களில் மடிந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு இங்கிலாந்தை தொடரைக் கைப்பற்ற அனுமதித்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியிருப்பதாவது:

நாம் ஸ்கோர்போர்டைப் பார்த்து விட்டு 30 ரன்கள் அல்லது 50 ரன்கள் குறைவாக இருக்கிறோம் என்று கூறலாம், ஆனால் அத்தகைய சூழ்நிலையை முன்னமேயே கண்டுணர வேண்டுமே தவிர ஆட்டம் முடிந்தவுடன் அல்ல. நாம் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுகிறோம் என்பது நமக்குத் தெரியும் ஆனால் நாம் நமக்கு நாமே திரும்பத் திரும்ப இதையே கூறி கொண்டிருக்க முடியாது, அயல்நாடுகளில் போட்டிப் போட்டு ஆடுகிறோம், சவாலாக திகழ்கிறோம் என்று எத்தனை நாளைக்குக் கூறிக் கொண்டிருக்கப் போகிறோம்

இலக்குக்கு, வெற்றிக்கு நெருக்கமாக வந்த பிறகே அந்தக் கோட்டைக் கடக்க வேண்டும், அதனை நாம் கற்க வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது நாம் எப்படி எதிர்வினையாற்ருகிறோம் என்பது குறித்து நாம் இன்னும் கொஞ்சம் செயல்பட வேண்டியுள்ளது.

ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையை விட்டு விடாமல் தொடர்ந்து நாம் அதனை நமக்குச் சாதகமாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம், எதிரணியினரை போட்டிக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்று பேசியிருக்கிறோம். அவர்கள் போராடிப் போராடி உள்ளுக்குள் வருகிறார்கள், அவர்களின் இந்தப் புத்தகத்திலிருந்து நாம் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆதிக்கம் செலுத்தினோம் டாப்பில் இருந்தோம். தொடரையே அப்படி ஆரம்பிப்பது குறித்து நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஒரு அணியாக நாம் தொடரின் ஆரம்பத்திலேயே நம்மை கொஞ்சம் வெளிப்படுத்திக் கொள்வது அவசியம், தைரியமாக பயமற்ற முறையில் நாம் ஆடியிருக்க வேண்டும்.

குறிப்பாக நீண்ட தொடரில் நாம் மீண்டெழுந்தாக வேண்டும், அதுவும் மீட்டெழுச்சி தைரியமான கிரிக்கெட் மூலம் வந்ததாக இருக்க வேண்டும். நாம் எதிரணியினரை அதிகம் எட்டிப் பிடிக்க வேண்டியதாக இருக்கக் கூடாது.

டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முக்கியக் கணம் எது என்பதை அறிவது கடினம். ஆனால் நான் ஆட்டமிழந்த பிறகு நான் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் களத்தில் நின்றிருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அன்றைய தினம் முன்னிலை பெரிய அளவில் இருந்திருக்கும்.

ஆனால் அதன் பிறகும் கூட இன்னும் 2 கூடுதல் கூட்டணியில் பெரிய முன்னிலை பெற்றிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக புஜாரா ஒரு அசாதாரண இன்னிங்ஸை ஆடி ஓரளவுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

இது தவிர ஒரு கேப்டனாக எனக்கு ஒன்றும் பெரிய எதிர்மறை அம்சங்கள் தெரியவில்லை, எங்களால் முடிந்த அளவு முயன்றோம்.

உள்நாட்டில் நாங்கள் ஆடும்போது பல அணிகள் நமக்கு நெருக்கமாகக் கூட வந்ததில்லை, ஆனால் இங்கு வந்து அவர்கள் நாட்டில் அவர்கள் தங்கள் வெற்றியை கடினமாக உழைத்துப் பெறச் செய்கிறோமே இது நமக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.

அஸ்வின் அவரால் இயன்றதை முயன்றார். நல்ல இடங்களில்தான் பந்தை பிட்ச் செய்தார். ஆனால் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. நன்றாகத்தான் ஆடுகிறோம் ஆனால் எங்கோ சறுக்குகிறது.

மட்டை பிட்சில் பேட்ஸ்மென்களை அவுட் ஆக்க முடியும், அஸ்வின் அதனால் இந்த பிட்சில் தனக்கு அதிகம் கிடைக்கும் என்று உணர்ந்திருபார். ஆனால் பேட்ஸ்மென் நன்றாக ஆடினார். நிறைய காரணிகள் உள்ளன.

ஆனால் மொயின் நன்றாக வீசினார், அவர் நல்ல பகுதியிலும் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் மிகச்சரியாக வீசினார். அதனால் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்ற தகுதியானவரே, அதனால்தான் அவருக்கு விக்கெட் கிடைத்தது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x