Published : 02 Sep 2018 08:18 PM
Last Updated : 02 Sep 2018 08:18 PM

முடிவு யார் பக்கம்?: வெளியேறினார் விராட்; களத்தில் ரஹானே: இங்கிலாந்து போராட்டம்

 சவுத்தாம்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் பொறுமையான அரை சதம், தூண் ரஹானேயின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 100 ரன்களைக் கடந்து சென்றுள்ளது.

தொடக்கத்தில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கேப்டன் கோலியும், ரஹானேயும் சரிவில் இருந்து மீட்டனர்.

இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி கூடுதலாக 5 ஓவர்கள் மட்டுமே களத்தில் இருந்த நிலையில் மீதம் இருந்த 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 271 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சவுத்தாம்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானம் கடைசி இரு நாட்களுக்குப் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது கடினமாகும் என்று ஆடுகளப் பராமரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் 150 ரன்களுக்கு மேல் இலக்கு இருந்தாலே வெற்றி பெறுவது கடினம் என்ற ரீதியில் இங்கிலாந்து அணி 245 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள், ஷிகர் தவண், ராகுல் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 3 ஓவர்கள் மட்டுமே இருவரும் சமாளித்து ஆடினார்கள். பிராட் வீசிய 4-வது ஓவரை கே.எல்.ராகுல் சந்தித்தார். தாழ்வாகச் சென்ற அந்த முதல் பந்து ராகுலின் ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. இந்தத் தொடரில் இதுவரை ராகுல் ஒரு இன்னிங்ஸில்கூட 40 ரன்களைக் கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து புஜாரா களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இவர் இந்த முறை ஏமாற்றினார். ஆன்டர்ஸன் வீசிய 7-வது ஓவரின் கடைசிப் பந்தில் கால்காப்பில் வாங்கி புஜாரா 5 ரன்களில் வெளியேறினார்.

ஆன்டர்ஸன் வீசிய 9-வது ஓவரில் தவண் விக்கெட்டை இழந்தார். தவணுக்கு இன்கட்டராக வந்த அந்தப் பந்தை தேவையில்லாமல் தொட்டு அது கல்லிபாயிண்டில் நின்றிருந்த ஸ்டோக்ஸ் கைகளில் தஞ்சமடைந்தது. தவண் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரை 8 இன்னிங்ஸ்களிலும் தவணும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன்களை ஸ்கோர் செய்யவில்லை.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி பெரும் நெருக்கடிக்கு ஆளானது. 4-வது விக்கெட்டுக்கு ரஹானே, கேப்டன் விராட் கோலி கூட்டணி சேர்ந்தனர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே மிகவும் நிதானமான ஆட்டத்தைக் கையாண்டனர்.

மோசமான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து அடித்தனர். ஆன்டர்ஸன், ரஷித், மொயின் அலி ஆகியோர் ஒருவர் மாற்றி, ஒருவர் பந்துவீசினார்கள். பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது, சுழன்றது ஆனால், கோலியையும், ரஹானேயும் வெளியேற்ற முடியவில்லை.

இருவரின் பேட்டிங்கிலும் மிகச்சிறந்த அனுபவம் வெளிப்பட்டது, விக்கெட்டுகளையும், இழந்துவிடக்கூடாது, அதேசமயம், ரன்களையும் குவிக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் பந்துகளை எதிர்கொண்டனர்.

ரஹானேவுக்கும், கோலிக்கும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில்தான் இங்கிலாந்து பந்துவீச்சும் இருந்தது. மதிய உணவு இடைவேளைக்குப்பின், கோலிக்கு மட்டும் 3 முறை எல்பிடபிள்யு அப்பீல் செய்யப்பட்டது, ரஹானேவுக்கு இருமுறை செய்யப்பட்டது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சிங்கில் ரன்களாகவும், இரு ரன்களாகவும் எடுத்து ரன்களை இருவரும் சேர்த்தனர். ரஹானே, கோலி கூட்டணி 50 ரன்களைக் கடந்து சென்றது.

நிதானமாகவும், பொறுப்பான கேப்டனாகவும் பேட் செய்த கோலி, 114 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்த அரை சதத்தில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும், ரஹானே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். இருவரின் ஆட்டத்தைப் பார்த்து இங்கிலாந்து வீரர்கள் பொறுமையிழந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சால் நெருக்கடி ஏற்பட்டதேத் தவிர விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, பந்துவீச்சும் எடுபடவில்லை.

மொயின் அலி பந்துவீச்சில், குக்கிடம் கேட்ச் கொடுத்து 58 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி வெளியேறினார். கோலி, ரஹானேவின் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது.

தேநீர் இடைவேளையின் போது, இந்திய அணி 53 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்திருந்தது. ரஹானே 44 ரன்களிலும், ஹர்திக் பாண்டியாவும் களத்தில் உள்ளனர்.இன்னும் வெற்றிக்கு 119 ரன்களே தேவைப்படும் நிலையில் முடிவு யார் பக்கம் செல்லும் என்பது தெரியாமல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக, சவுத்தாம்டனில் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கும், இந்திய அணி 273 ரன்களுக்கும் ஆட்டமிழந்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. சாம்கரன் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 6 ஓவர்கள் மட்டுமே இந்திய வீசிய நிலையில், மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து இழந்தது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x