Published : 02 Sep 2018 05:22 PM
Last Updated : 02 Sep 2018 05:22 PM

இந்திய அணி திணறல்: அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு

 சவுத்தாம்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்கத் தடுமாறி வருகிறது.

இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி கூடுதலாக 5 ஓவர்கள் மட்டுமே களத்தில் இருந்த நிலையில் மீதம் இருந்த 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 271 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சவுத்தாம்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானம் கடைசி இரு நாட்களுக்குப் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது கடினமாகும் என்று ஆடுகளப் பராமரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் 150 ரன்களுக்கு மேல் இலக்கு இருந்தாலே வெற்றி பெறுவது கடினம் என்ற ரீதியில் இங்கிலாந்து அணி 245 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்தது. ரோஸ்பவுல் போன்ற பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகும் ஆடுகளத்தில் இலக்கை எட்டுவது எளிதான காரியம் இல்லை.

அதை இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் உணர்ந்துவிட்டனர். ஷிகர் தவண், ராகுல் ஆடத் தொடங்கினார்கள். 3 ஓவர்கள் மட்டுமே இருவரும் சமாளித்து ஆடினார்கள். பிராட் வீசிய 4-வது ஓவரை கே.எல்.ராகுல் சந்தித்தார். தாழ்வாகச் சென்ற அந்த முதல் பந்து ராகுலின் ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. ராகுல் டக்அவுட்டில் வெளியேறினார். இந்தத் தொடரில் இதுவரை ராகுல் ஒரு இன்னிங்ஸில்கூட 40 ரன்களைக் கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து புஜாரா களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததால், இவரைக் களத்தில் நிலைக்கவிடக்கூடாது என்று இங்கிலாந்து வீரர்கள் திட்டமிட்டனர்.

ஆன்டர்ஸன் வீசிய 7-வது ஓவரின் கடைசிப் பந்து நல்ல இன்கட்டராக வந்தது. புஜாராவும் காலை முன்னே தூக்கி ஆட முற்பட்ட நேரத்தில் அது கால்காப்பில் பட்டது. கள நடுவர் அவுட் அளித்தபோதிலும், புஜாரா அப்பீல் செய்தார். ஆனால், அப்லீலில் புஜாரா தனது கால்பகுதியை உள்ளே இழுத்து ஸ்டெம்பை மறைத்துப் பந்தை தடுத்தது தெரிந்ததால், ஆவுட் அளிக்கப்பட்டது. இதையடுத்து, புஜாரா 5 ரன்களில் வெளியேறினார்.

ஆன்டர்ஸன் வீசிய 9-வது ஓவரில் தவண் விக்கெட்டை இழந்தார். தவணுக்கு இன்கட்டராக வந்த அந்தப் பந்தை தடுக்க முற்பட்டபோது, பந்து பேட்டில் பட்டு கல்லிபாயிண்டில் நின்றிருந்த ஸ்டோக்ஸ் கைகளில் தஞ்சமடைந்தது. தவண் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரை 8 இன்னிங்ஸ்களிலும் தவணும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன்களை ஸ்கோர் செய்யவில்லை.

அடுத்துத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. ரஹானே 4 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் பேட் செய்து வருகின்றனர்.19 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் இந்திய அணி சேர்த்துள்ளது.

முன்னதாக, சவுத்தாம்டனில் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கும், இந்திய அணி 273 ரன்களுக்கும் ஆட்டமிழந்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. சாம்கரன் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 3-வது நாளான நேற்று 91.5 ஓவரை ஷமி வீசும் போது ஆட்டம் நிறுத்தப்பட்டதால், மீதிருந்த ஒரு பந்தை வீச ஷமி ஆயத்தமானார். சாம் கரன், பிராட் களமிறங்கினார்.

முகமது ஷமி வீசிய அந்தப் பந்தை பிராட் எதிர்கொண்டார்.

காலைக் குளிர், ஈரப்பதம், புதிய பந்து காரணமாகப் பந்து பிராடின் பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட்கீப்பரின் கைகளில் சென்றது. இதனால் பிராட் டக்அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஆன்டர்சன், கரனுடன் இணைந்தார். அஸ்வின், ஷமி பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை சாம் கரன் அடித்தார். அஸ்வின் வீசிய 97-வது ஓவரின் முதல் பந்தை சாம் கரன் அடித்துவிட்டு ஓட முயன்றார். ஆனால், இசாந்த் சர்மா தடுத்து வீக்கெட் கீப்பரிடம் எறியவே ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், சாம் கரன் 46 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x