Last Updated : 02 Sep, 2018 12:50 PM

 

Published : 02 Sep 2018 12:50 PM
Last Updated : 02 Sep 2018 12:50 PM

‘வெற்றி எங்களுக்கே, எங்கள் கைதான் ஓங்கி இருக்கிறது’: ஜோஸ் பட்லர் நம்பிக்கை

 இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். எங்களின் கைதான் ஓங்கி இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சவுத்தாம்டனில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வென்று 2-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில், சவுத்தாம்டனில் நடந்துவரும் 4-வது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கும், இந்திய அணி 273 ரன்களும் சேர்த்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. சாம்கரன் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்ஸில் 21 ரன்கள் சேர்த்த ஜோஸ் பட்லர், 2-வது இன்னிங்ஸில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரின் பங்களிப்பு இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணிக்கு வலு சேர்த்தது. 4-வது நாளில் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதாலும், 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால், அதை எட்டுவது கடினம் என்றும் கூறப்படுகிறது.

அதுகுறித்து ஜோஸ்பட்லர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''ரோஸ்பவுலில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றுவோம். நீங்களே பார்க்கிறீர்கள், எங்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது. 4-வது நாளில் இருந்து இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் பேட் செய்வது எளிதான காரியமல்ல.

அதிலும் முதல் இன்னிங்ஸில் இருந்து பார்த் துவருகிறீர்கள் இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு எப்படி ஒத்துழைக்கிறது. கடைசி இரு நாட்களில் கேட்கவே வேண்டாம். சுழற்பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கும் சொர்க்கபுரியாக இருக்கும்.

குறிப்பாக மொயின் அலி, அதில் ராஷித், மிதவேகப் பந்துவீச்சாளர்கள் அடுத்த இரு நாட்களும் ஆதிக்கம் செலுத்துவார்கள். 3-வது நாள் ஆட்டத்தில் ஸ்டோக்ஸும், நானும் நன்கு கூட்டு சேர்ந்து ரன்களைச் சேர்த்தோம். இதற்கு இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருவரும் இதுபோல் நிலைத்து விளையாடி இருக்கிறோம். இருவருக்கும் இடையிலான நட்பு, புரிந்துணர்வுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பட வைக்கும்.

அதிலும் வலதுகை பேட்ஸ்மேன், இடதுகை பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது, பந்து வீசும் எதிரணி வீரர்களுக்குத்தான் அது பெரும் சிக்கலாக இருக்கும். அவர்கள் எங்களைப் புரிந்து கொண்டு பந்துவீசுவதற்குள் நாங்கள் களத்தில் எங்களை நிலைப்படுத்திவிடுவோம்.

மொயின் அலியை வரிசை மாற்றி பேட் செய்ய களமிறக்கியதில் எந்தவிதமான நோக்கமும் இல்லை. கவுண்டி போட்டியில் 3-வது வீரராகக் களமிறங்கி மொயின் அலி சிறப்பாக விளையாடி வருகிறார். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். அதனால் கேப்டன்  ஜோய் ரூட், அவரை 3-வது வீரராகக் களமிறக்கினார். என்னைப் பொறுத்தவரை இதுவும் நல்ல முடிவுதான்.

அஸ்வின் பந்துவீச்சு அச்சுறுத்தல் தரும் வகையில் கடந்த போட்டியில் இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர்தான் என்பதை மறுக்கவில்லை, அவர் தன்னை நிரூபிக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன''.

இவ்வாறு ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x