Published : 02 Sep 2018 12:16 PM
Last Updated : 02 Sep 2018 12:16 PM

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை: ‘4-வது நாளில் பேட் செய்வது எளிதானது அல்ல’

சவுத்தாம்டன் ரோஸ்பவுல் மைதானத்தில் 4-வது நாளில் பேட் செய்துவது எளிதான காரியம் கிடையாது, இந்திய பேட்ஸ்மேன்கள், மிகுந்த கவனத்துடன் பேட் செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை செய்துள்ளார்.

சவுத்தாம்டனில் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கும், இந்திய அணி 273 ரன்களுக்கும் ஆட்டமிழந்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. சாம்கரன் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இரு இன்னிங்ஸிலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், 4-வது நாளில் இருந்து ரோஸ்பவுல் மைதானத்தில் பேட்செய்வது கடினமாகிவிடும் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் இந்திய வீரர்களை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கவாஸ்கர் ஒரு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது:

''சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசுகிறார்கள். மீண்டும் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் திறனும், போட்டியில் வெற்றி பெறும் சூழலும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் வென்றால், டெஸ்ட் தொடர் 2-2 என்று சமநிலைக்கு வரும்.

பும்ரா தான் வீசியக்கூடிய ஒவ்வொரு பந்திலும், எதிரணிக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார், இசாந்த் சர்மாவும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே கட்டுக்கோப்பாக பந்து வீசுகிறார்.

முகமது ஷமி தேவைக்கு ஏற்றார்போல் ஆக்ரோஷமாகவும், அதேசமயம், லைன் அன்ட் லென்த்தில் பந்து வீசுகிறார். ஆனால், அவரால் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. போட்டியின் முதல்நாளில் இருந்து இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது, இந்தத் தொடரை சமன் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், ரோஸ்பவுல் மைதானத்தில் முதல் 3 நாட்களில் பேட் செய்வது போன்று 4-வது நாளில் எளிதாக பேட் செய்ய முடியாது. 150 ரன்களுக்கு அதிகமாக இங்கிலாந்து சேர்த்துவிட்டு இலக்கு நிர்ணயித்தால் அதை அடைந்து வெற்றி பெறுவது என்பது கடினமாகும். ஏனென்றால், 4-வது நாளில் பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளம் முற்றிலும் ஒத்துழைக்காது.

முதல் 2 நாட்களில் 20 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. பந்துவீச்சாளர்களுக்குத்தான் இந்த ஆடுகளம் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. 4-வது நாளில் இருந்து பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும். சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக நகர்ந்து கொடுக்கும்.

இந்திய பேட்ஸ்மேன்களோ தொடக்கத்தில் இருந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துவதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 4-வது, 5-வது நாளில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் பேட் செய்ய வேண்டும், குறிப்பாக மொயின் அலியின் பந்துவீச்சை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இல்லாவிட்டால், வெற்றிக்கு கைக்கு எட்டியும், அதைத் தக்கவைக்க முடியாமல் போகும்''.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x