Published : 02 Sep 2018 01:17 AM
Last Updated : 02 Sep 2018 01:17 AM

18-வது ஆசிய விளையாட்டு போட்டி: பிரிட்ஜ், குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 2 தங்கம்; பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது ஆடவர் ஹாக்கி அணி

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. குத்துச்சண்டை, பிரிட்ஜ் போட்டிகளில் தலா ஒரு தங்கத்தை இந்திய வீரர்கள் வென்றனர். ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் நடைபெற்று வருகிறது. 14-வது நாளான நேற்று பிரிட்ஜ் ஆடவர் இரட்டையர் பிரிவு (சீட்டுக்கட்டு) போட்டியில் இந்திய வீரர்கள் சிப்நாத் சர்க்கார், பிரணாப் பர்தான் ஜோடி தங்கம் வென்றது.

இறுதிச் சுற்றின் முடிவில் இந்திய ஜோடி மொத்தம் 384 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

இதே போட்டியில் சீனாவின் லிக்ஸின் யாங்-காங் சென் ஜோடி 378 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்தோனேஷியாவின் ஹென்கி லசுத்-பிரெட்டி எட்டி மனோப்போ ஜோடி 374 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது.

குத்துச்சண்டை

49 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கல், ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவுடன் (உஸ்பெகிஸ்தான்) மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

ஸ்குவாஷில் வெள்ளி

ஸ்குவாஷ் மகளிர் அணி பிரிவு போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணியினர், ஹாங்காங் அணியின ருடன் மோதினர். இதில் ஹாங்காங் அணியினர் அபாரமாக விளையாடி இந்திய அணியினரை வீழ்த்தினர். இதனால் 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் சுனன்யா குருவில்லா, ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல், கன்னா தன்வி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஜூடோ

ஜூடோ போட்டியின் கலப்பு அணி பிரிவில் இந்திய அணியினர் தோல்வி கண்டனர். கால் இறுதியில் கஜகிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் விஜய்குமார் யாதவ், ஹர்ஷ்தீப் சிங் பிரார், கல்பனா தேவி தவுடம், கரிமா சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஹாக்கியில் அபாரம்

ஆடவர் பிரிவு ஹாக்கியில் வெண்கலத்துக்கான போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலத்தைக் கைப் பற்றியது.

இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகம்மது ஆதிக் ஒரு கோலடித்தார். வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பதக்கப் பட்டியல்

14-ம் நாள் முடிவில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது. சீனா 131 தங்கம், 90 வெள்ளி, 65 வெண்கலங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x