Published : 01 Sep 2018 09:34 PM
Last Updated : 01 Sep 2018 09:34 PM

சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் முறைதவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடந்த டென்னிஸ் போட்டிகளிலும் சானியா மிர்ஸா சிறப்பாகச் செயல்பட்டு பட்டங்களை வென்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.

கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து சானியா மிர்சா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி வங்கதேச வீரர் ஒருவர் நடந்ததாகக் கூறி அவரின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை கிரிக்கெட் கமிட்டி ஆப் தாகா மெட்ரோபோலிஸ்(சிசிடிஎம்) அமைப்பின் தலைவரிடம் சோயிப் மாலிக் வழங்கியுள்ளார் என்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவிடம் வம்பு செய்த வங்கதேச வீரர் குறித்து இத்தனை நாட்களாக எந்த விவரமும் வெளிவராத நிலையில் இப்போது வந்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியில் சபிர் ரஹ்மான் மிகவும் சர்ச்சைக் குரிய வீரர் எனப் பெயரெடுத்தவர். 26 வயதான சபிர் ரஹ்மான் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்துக்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் சில வாரங்கள் சஸ்பெண்ட் செய்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

அதன்பின் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதால், சபீர் ரஹ்மான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், இதையடுத்து இவர் மீது 6 மாதங்கள் வரை தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியின் போது ஹோட்டலுக்கு அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி பெண் ஒருவரை அழைத்துவந்த புகாரில் சபிர் ரஹ்மானுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தமும் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றதாக அவரின் கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ள நிலையில், குற்றம் உண்மையானதாக இருந்தால், சபீர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சபிர் ரஹ்மான் இதுவரை 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,054 ரன்களும், 41 டி20 போட்டிகளிலும் விளையாடி 906 ரன்களும் சேர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x