Last Updated : 01 Sep, 2018 02:12 PM

 

Published : 01 Sep 2018 02:12 PM
Last Updated : 01 Sep 2018 02:12 PM

உதவாத ‘ஷாட்’ - இன்னும் பொறுப்பாக பேட்டிங் செய்திருக்கலாம்: அஸ்வின், பாண்டியாவை வறுத்தெடுத்த பங்கர்

சூழ்நிலைக்கு உதவாத ஷாட் அடித்த அஸ்வினும், ஹர்திக் பாண்டியாவும் இன்னும் பொறுப்புணர்வுடன் பேட் செய்திருக்கலாம் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டன் நகரில் நடந்துவருகிறது. 2-ம் நாளான நேற்று இந்திய அணிதொடக்க சரிவுக்குப் பின் மீண்டு வந்தது. 181 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரிஷாப் பந்த் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, அடுத்த 14 ரன்களைச் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்த சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

புஜாராக ஒருபுறம் நிலைத்து பேட் செய்து வரும் நிலையில் முக்கிய பேட்ஸ்மேன்களான ரிஷாப் பந்த், அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தது. இவர்கள் இன்னும் சிறஇது நேரம் களத்தில் நின்று தலா 30 ரன்கள் சேர்த்திருந்தால், இந்திய அணி 150 ரன்கள் முன்னிலை பெற்றிருந்திருக்கும்.

அதிலும் தேவையற்ற வகையில் அஸ்வின் ஸ்வீப் ஷாட் ஆடி மொயின் அலி பந்துவீச்சில் போல்டாகினார். ஹர்திக் பாண்டியா 4 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரின் பொறுப்பற்ற ஆட்டத்தை பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘‘இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நல்ல நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. அப்போது களமிறங்கும் அஸ்வினும், ஹர்திக் பாண்டியாவும் பொறுப்பாக பேட் செய்திருக்கலாம். இன்னும் தாங்கள் அடிக்கும் ஷாட்களிலும், பந்துகளைத் தேர்வு செய்வது அடிப்பதிலும் அக்கறை காட்டியிருக்கலாம்.

இருவரும் தங்களின் விக்கெட்டை மிகவும் கவனக்குறைவாக, எதிரணியினருக்கு கஷ்டம் கொடுக்காத வகையில் இழந்திருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா அடித்த ஷாட் தேவையில்லாதது. அந்தப் பந்தை தவிர்த்து ஆடி இருக்கலாம்.

அதேசமயம், களத்துக்குத் தன்னை அஸ்வின் நிலைப்படுத்திக்கொள்ளவே இல்லை, அப்படி இருக்கும் போது, மொயின் அலி பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆட வேண்டிய அவசியம் என்ன?. ஒரு இன்னிங்ஸில் நாம் களமிறங்கி நம்மை நிலைப்படுத்திக்கொள்ளும் முன் இதுபோன்ற ஷாட்களை ஆடுவதைத் தவிர்த்திருக்கலாம்.

இருவரின் பொறுப்பற்ற விக்கெட் இழப்பால், இந்திய அணி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அந்த நேரத்தில் புஜாரா நல்ல ஃபார்மில் இருந்தால், அஸ்வினும், பாண்டியாவும் புஜாராவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், ஆட்டம் வேறுமாதிரியாகத் திரும்பி இருக்கும்.

தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடும் நம்மைப்போன்ற வீரர்கள், எதிரணியின் பந்துவீச்சை எந்த நேரத்தில் எப்படிச் சந்திக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி எடுத்திருக்கிறோம். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில்தான் பயிற்சி எடுத்தோம்.

வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் மட்டும் எதிர்கொள்ளப் பயிற்சி எடுக்கவில்லை. சூழலையும் எதிர்கொள்ளப் பயிற்சி செய்திருக்கிறோம். இதை இருவரும் பயன்படுத்தி இருக்கலாம்.

புஜாராவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. லார்ட்ஸ் மைதானம், நாட்டிங்ஹாம் ஆகியவற்றைக்காட்டிலும் சவுத்தாம்டனில் இவரின் பேட்டிங் மெருகேறி இருந்தது. ஷாட்களில் நேர்த்தி, ஒழுக்கமான ஷாட்கள், மோசமான பந்துகளை தேர்வு செய்து அடித்த ஷாட் என மிகுந்த எச்சரிக்கையுடனும், அதேசமயம், ஆவேசத்துடனும் புஜாரா விளையாடினார்.

கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு அணியை நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு புஜாரா எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது.

பர்மிங்ஹாமில் டெஸ்ட் போட்டியில் புஜாராவை தேர்வு செய்யாதது குறித்து இப்போது பேசத் தேவையில்லை. தொடக்தத்தில் புஜாரா குறிப்பிட்ட சில விஷயங்களில் தடுமாறினார். ஆனால், அதன்பின், தீவிர பயிற்சியால் அதைச் சரி செய்து, நடுநிலையுடன் விளையாடி வருகிறார். அடுத்து வரும் போட்டியிலும் புஜாரா நல்ல ஃபார்மில் தொடர்வார் என நம்புகிறேன்.

தேநீர் இடைவேளைக்கு பின் 15 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை திடீரென இழந்ததுதான் இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணமாகும்’’ என சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x