Last Updated : 31 Aug, 2018 08:05 PM

 

Published : 31 Aug 2018 08:05 PM
Last Updated : 31 Aug 2018 08:05 PM

விராட் கோலிக்கு ஓய்வா?: 5 வீரர்களிடையே கடும் போட்டி; ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி நாளை அணி தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நாளைத் தேர்வு செய்யப்பட உள்ளது.

தொடர்ச்சியான விளையாட்டு, அதிக வேலைப்பளு, அடுத்து வரும் தொடர்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் இந்திய அணியின் நடுவரிசையை பலப்படுத்தும் நோக்கில் புதிய வீரர்கள் சேர்க்கையும் இருக்கும். இதற்காக 5 வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பரமவைரியான பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருப்பதால், அதற்கேற்றவாறு வலுவான அணியைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் முன்னுரிமை அளிப்பார்கள்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும் அணி என 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் நாளை மும்பையில் கூடுகின்றனர்.

கடந்த இரண்டரை மாதங்களாக இந்திய அணியினர் இங்கிலாந்தில் பயணம் செய்து விளையாடி வருகின்றனர். இதில் விளையாடும் மூத்த வீரர்களில் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற அனைவரும் ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

கேப்டன் விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறார். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக திடீரென முதுகு வலியால் விராட் கோலி அவதிப்பட்டு, சிகிச்சைக்குப் பின் அணிக்குத் திரும்பினார். இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கு அடுத்ததாக மேற்கிந்திய்த்தீவுகள் இந்தியாவுக்கு வந்து 2 டெஸ்ட் போட்டிகளும், அடுத்தார்போல், இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

விராட் கோலிக்கு இந்த நேரத்தில் ஓய்வு அளிக்காவிட்டால், அடுத்தடுத்து ஓய்வு அளிப்பது கடும் சிரமம் என்பதால், ஆசியக் கோப்பையில் விராட் கோலியின் வேலைப்பளுவைக் குறைக்கும் வகையில், ஓய்வு அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அடுத்த ஆண்டு நடக்கும் உலகக்கோப்பையும் கருத்தில் கொண்டு அதிக பளு இல்லாத வகையில் விராட் கோலி குறித்து முடிவு எடுக்கப்படும். அதேசமயம் அணியின் சூழலுக்கு ஏற்ப முடிவுகள் மாறலாம்.

அவ்வாறு விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பது என தேர்வுக்குழுவினர் முடிவு செய்துவிட்டால், அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவண் இயல்பாகவே அணிக்குள் வந்துவிடுவார்கள் எனும் நிலையில், மற்றொரு தொடக்க வீரருக்காக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படலாம்.

இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் நடுவரிசைதான் மிகவும் சிக்கல் மிகுந்ததாக, சில நேரங்களில் பேட்டிங்கில் ஸ்திரத்தன்மை இல்லாததாக இருந்து வருகிறது. அதில் இந்த முறை கூடுதல் அக்கறை காட்டப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நடுவரிசையில் இடம் பிடிப்பதற்காக 5 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ஜாதவ், குர்னல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தீவிரமாக பரிசீலிக்கப்படுவார்கள். பந்துவீச்சில் தீபக் சாஹருக்கு வாய்ப்பிருக்கும்.

இதில் மணிஷ் பாண்ட இந்திய பி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். 4 போட்டிகளஇல் 300 ரன்களுக்கு மேல் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் அதிரடி பேட்டிங்கில் அனைவரையும் மிரளவைத்த அம்பதி ராயுடு, யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்ததன் காரணமாக இங்கிலாந்து தொடரில் தேர்வாகவில்லை. தற்போது யோயோ டெஸ்டில் தேர்வாகிவிட்டதால், அவரின் பெயர் பரிசீலிக்கப்படும்.

ஐபிஎல் போட்டி, இந்திய ஏ அணியில் இடம் பெற்ற மயங்க் அகர்வால் கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனிலும் ஆயிரம் ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராகவும், நடுவரிசையில் களமிறங்கவும் சரியான வீரர். ஒரேவேளை மயங்க் அகர்வால் சேர்க்கப்படாவிட்டால், மேற்கிந்தியத்தீவுகள் எதிரான டெஸ்டில் இடம் அளிக்கப்படலாம்.

பந்துவீச்சில் புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஷர்துல் தாக்கூர், சித்தார்த் கவுல் பெயர் ஆலோசிக்கப்படலாம்.

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக முன்னாள் கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், மாற்று கீப்பராக ரிஷாப் பந்த்துக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடு இங்கிலாந்தில் மோசமாக இருப்பதால், ஆசியக் கோப்பையில் அவரின் பெயர் சேர்க்கப்படுவது உறுதியில்லாத நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x