Published : 31 Aug 2018 05:39 PM
Last Updated : 31 Aug 2018 05:39 PM

ஆண்டர்சன் பந்தை பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்னொரு மைல்கல்

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார்.

2ம் நாளான இன்று ஸ்டூவர்ட் பிராடிடம் இந்திய அணி ராகுல், தவணை இழந்த பிறகு கோலி, புஜாரா இணைந்து ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டர்சன் வீசிய இன்னிங்சின் 22வது ஓவரின் 5வது பந்தை கோலி பவுண்டரிக்கு அனுப்பி 6,000 ரன்களைக் கடந்தார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்புகளுக்கு வைடாக பவுண்டரிக்குச் சென்றது.

தனது 70வது டெஸ்ட், 119வது இன்னிங்ஸில் விராட் கோலி 6,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

உலக அளவில் அதிவிரைவாக 6,000 ரன்களை எட்டியோர் பட்டியலில் டான் பிராட்மேன் 45 டெஸ்ட் போட்டிகளில் 68 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி முதலிடம் வகிக்கிறார்.

ஸ்டீவ் ஸ்மித் 61 போட்டிகளில் 111 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களைக் கடந்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் சுனில் கவாஸ்கர் 65 டெஸ்ட் போட்டிகளில் 117 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களைக் கடந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 76 டெஸ்ட் 120 இன்னிங்ஸ்களிலும் சேவாக் 72 டெஸ்ட் 123 இன்னிங்ஸ்களிலும் ராகுல் திராவிட் 73 டெஸ்ட் 125 இன்னிங்ஸ்களிலும் 6,000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விராட் கோலி 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களுடனும் புஜாரா 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களுடனும் ஆடி அரைசதக் கூட்டணி அமைத்துள்ளனர். இந்திய அணி 100/2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x