Published : 30 Aug 2018 08:19 PM
Last Updated : 30 Aug 2018 08:19 PM

ஐபிஎல் போட்டி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் வெட்டோரி திடீர் நீக்கம்: புதிய பயிற்சியாளர் நியமனம்

ஐபிஎல் போட்டியில் முக்கியஅணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான டேனியல் வெட்டோரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

வெட்டோரிக்கு பதிலாக, இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்குத் துணை புரிந்த முன்னாள் இந்திய பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு பயிற்சியாளாக வெட்டோரி இருந்துவந்த நிலையில், திடீரென மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த ஆண்டு ஐபிஎல்போட்டிக்கு பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் கொண்டு வரப்பட்டு, இப்போது, அடுத்து ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பெங்களூருஅணி ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. 3 முறை மட்டுமே இறுதி ஆட்டம் வரை வந்துள்ளது. அதிலும் இந்த ஆண்டும், கடந்த ஆண்டும் 6-வது 8-வது இடத்தையே பிடித்தது. மேலும் அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களான மெக்கலம், மனன் வோரா, விராட் கோலி,  டிவில்லியர்ஸ், கறிஸ் வோக்ஸ், பவன் நெகி, வாஷிங்டன் சுந்தர், குயின்டன் டீ காக் உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதையடுத்து அதிரடியாக பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேரி கிறிஸ்டன் கூறுகையில், ‘‘தலைமைப் பயிற்சியாளர் வெட்டோரி தலைமையில் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கும் வாய்ப்புப் பெற்றேன். மிகவும் ரசித்து அந்த பணியைச் செய்தேன். பெங்களூரு அணியோடு தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் சிறப்பாக செய்யக்கூடிய பணியை அணிக்கு வழங்குவேன்.

என்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உயர்த்திய அணி நிர்வாகத்துக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன், அடுத்து வரும் ஆண்டுகள் அணிக்கு வெற்றிகரமாக அமையும்’’ எனத் தெரிவித்தார்.

ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில், ‘‘கடந்த 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணியுடன் நான் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்குச் சிறப்பானது. பெருமைப்படுகிறேன். ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் ஆர்சிபி அணியில் இருந்திருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x