Published : 24 Aug 2018 10:34 AM
Last Updated : 24 Aug 2018 10:34 AM

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ஷர்துல் விஹான் - ஆடவர் கபடி அரை இறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவு இறுதி சுற்றில் 15 வயதான இந்திய வீரர் ஷர்துல் விஹான் 73 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 34 வயதான கொரியாவின் ஷின் ஹைன்வோ 74 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், கத்தாரின் அல் மாரி ஹமாத் அலி 53 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான டபுள் ட்ராப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரேயாஷி சிங் 6-வது இடமும், வர்ஷா வர்மான் 7-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

அங்கிதாவுக்கு வெண்கலம்டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 4-6, 6-7 என்ற செட் கணக்கில் சுமார் 2 மணி நேரம் 11 நிமிடங்கள் போராடி சீனாவின் முன்னணி வீராங்கனையான சாங் ஷுயிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கத்தை பெறுவது உறுதியாகி உள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த ஜோடி அரை இறுதியில்  4-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கெய்டோ, ஷோ ஷிமாபுகுரோ ஜோடியை வீழ்த்தியது.ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 6-7, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி கொரியாவின் சூன்வோ வானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அங்கிதா ரெய்னா ஜோடி 4-6, 6-1, 6-10 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் பெஞ்சமின் ரன்கட், அல்டிலா சட்ஜிடி ஜோடியிடம் தோல்வியடைந்தது.

பாட்மிண்டன்

பாட்மிண்டன் தனிநபர் பிரிவில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 12-21, 23-21 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி 52-ம் நிலை வீராங்கனையான வியட்நாமின் திடிராங் வுவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.  மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால்  21-7, 21-9 என்ற நேர் செட்டில் ஈரானின் சொரயா அகாஹீஹாஜாகாவை வீழ்த்தினார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-16, 21-15 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் யங் டிங், விங் யுங் ஜோடியை தோற்கடித்தது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-12, 21-14 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் சன் ஹீ தம், யோனி சுங் ஜோடியை வென்றது.

நீச்சல் போட்டி

ஆடவருக்கான நீச்சலில் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் இந்தியாவின் ஹரி நடராஜ் இறுதி சுற்றில் பந்தய தூரத்தை  2:02.83 நிமிடங்களில் கடந்து 6-வது இடம்

பிடித்தார். ஆடவருக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் விர்தவால் காடே இறுதி சுற்றில் கடைசி இடத்தையே பிடித்தார். பந்தய தூரத்தை அவர் 24.48 விநாடிகளில் கடந்தார்.

கபடியில் அதிர்ச்சி

மகளிருக்கான கபடி அரை இறுதியில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரை இறுதியில் இந்திய அணி 27-14  என்ற கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் கால் பதிப்பது இது 3-வது முறையாகும்.

கடந்த இரு தொடர்களிலும் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி 3-வது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் உள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை சந்திக்கிறது. ஈரான் அணி அரை இறுதியில் 23-16 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

ஆடவருக்கான கபடி அரை இறுதியில் இந்திய அணி 17-27  என்ற கணக்கில் ஈரானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. 7 முறை சாம்பியனான இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது. முதல் பகுதி ஆட்டம் 9-9 என சமநிலையில் இருந்த நிலையில் 2-வது பாதியில்

ஈரான் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடியதால் இந்திய அணி வெளியேற்றப்பட்டது. ஆசிய விளையாட்டில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட 1990-ம் ஆண்டில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி தற்போது முதன்முறையாக மகுடம் சூடும் வாய்ப்பை இழந்துள்ளது.

பெரிய அளவிலான தொடர்களில் இந்திய அணி முக்கியமான கட்டத்தில் தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை. அதேவேளையில் நாக் அவுட் சுற்றில் ஈரான் அணி, இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதும் இதுவே முதன்முறையாகும். மேலும் கடந்த இரு ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு ஈரான் அணி பதிலடி கொடுக்கும் விதமாகவும் அமைந்தது.

வில்வித்தை

வில்வித்தையில் ஆடவருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் அட்டானு தாஸ் 3-7 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் ரியா ஈகாவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு வீரரான இந்தியாவின் விஷ்வாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 1-7 என்ற கணக்கில் கஜகஸ்தானின் இபாத் அப்துலினிடம் வீழ்ந்தார்.

இதேபோல் மகளிருக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தீபிகா குமாரி  கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 3-7 என்ற கணக்கில் சீன தைபேவின் சியன்-யிங் லீயிடம் தோல்வியடைந்தார்.

பளுதூக்குதல்

ஆடவருக்கான பளு தூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அஜெய் சிங், சதீஷ்குமார் சிவலிங்கம் ஏமாற்றம் அளித்தனர். இறுதிப் போட்டியில் அஜெய் சிங் 327 கிலோ

எடையை தூக்கி 5-வது இடத்தையும், சதீஷ்குமார் சிவலிங்கம் 314 கிலோ எடையைத் தூக்கி 10-வது இடத்தையும் பிடித்தனர்.

இதில் சதீஷ்குமார் தொடை பகுதியில் காயம் அடைந்ததால் சிறந்த திறனை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது வடகொரியா வீரர் ஜான் வை சோ 348 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கமும், கொரியாவின் வோ ஜே கிம் (347) வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்தின் சாட்பும் சின்னவோங் (341) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஜிம்னாஸ்டிக்ஸ்

ஜிம்னாஸ்டிக்ஸில் மகளிருக்கான வால்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அருணா புத்தா ரெட்டி 7-வது இடத்தையும், பிரணதி நாயக் 8-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

ஸ்குவாஷ்

ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானின் அஸ்லம் டையபை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் மற்றொரு இந்திய வீரரான ஹரிந்தர் பால் சிங் சாந்து 3-1 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸின் ராபர்ட் கார்சியாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 3-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸின் ஜெமிகா அரிபடோவும், தீபிகா பல்லிகல் 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் யென் ரோமாஹையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினர்.

பின்னடைவு

ஆசிய விளையாட்டின் 5-வது நாளின் முடிவில் பதக்கபட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்திருந்தது. 4 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கத்துடன் 7-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சீனா 55 தங்கம், 40 வெள்ளி, 21 வெண்லகத்துடன் 116 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x