Published : 23 Aug 2018 07:27 PM
Last Updated : 23 Aug 2018 07:27 PM

இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள ஹனுமா விஹாரியை அறிவோம்: முதல்தர கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக சராசரி; சுவையான தகவல்கள்

இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி கடந்த 19 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள முதல் ஆந்திரா அணியைச் சேர்ந்த வீரராவார்.

இதற்கு முன்னர் ஆந்திராவிலிருந்து கடைசியாக இந்திய அணிக்குத் தேர்வானவர் தற்போதைய அணித்தேர்வுக்குழு தலைவரும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.கே.பிரசாத் ஆவார்.

ஹனுமா விஹாரியின் முதல்தர கிரிகெட் சராசரி 59.45, இவருக்கு அடுத்தபடியாக சிறந்த சராசரி வைத்திருப்பவர் ஆஸி.யின் ஸ்டீவ் ஸ்மித் 57.27.

இந்திய ஏ அணியின் இங்கிலாந்து பயணத்தின் போது ஒருநாள் அணி, 4 நாள் டெஸ்ட் அணியிலும் இவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் 3 இன்னிங்ஸ்களில் 253 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்தார். இதில் மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டி ஒன்றில் 147 ரன்கள் விளாசினார்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல்தர கிரிக்கெட்டில் 148 ரன்களை எடுத்தது அணியின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தது.

இவரைப் பற்றி ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளராக இருந்த சனத் குமார் ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும்போது, “இரு பக்கங்களிலும் ஸ்கொயர் திசைகளில் இவர் வலுவான வீரர், அதாவது அவர் ஒரு சிறந்த பேக்ஃபுட் பிளேயர், பந்தின் லெந்த்தை விரைவில் கணிப்பது இவரது சிறப்பம்சம்” என்றார்.

2017-18 ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் 752 ரன்களை 94 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் ஒடிஷா அணிக்கு எதிராக முச்சதம் கண்டு 302 நாட் அவுட் என்று அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எட்டினார்.

ரஞ்சி சாம்பியன் விதர்பாவுக்கு எதிரான இரானி கோப்பைப் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ஆடிய ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ், பெரிய இன்ஸ்விங் பவுலர் ரஜ்னீஷ் குர்பானி (இவர் இந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்) ஆகியோருக்கு எதிராக ஒரு அபாரமான 183 ரன்களை எடுத்தார். பின் வரிசை வீரரான ஜெயந்த் யாதவை வைத்துக் கொண்டு 7வது விக்கெட்டுக்காக 216 ரன்களைச் சேர்த்தது சாதனையானது.

தகவல்கள்: ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x