Published : 22 Aug 2018 04:59 PM
Last Updated : 22 Aug 2018 04:59 PM

லெக் பிரேக்கில் அஸ்வின் வெற்றி விக்கெட்; வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணித்த ஆட்டநாயகன் கோலி, தொடரை வெல்வொம் என உறுதி

 நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்று 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி கண்டு தொடரில் 2-1 என்று தன் வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.

இன்று 17வது பந்தில் அஸ்வின் கடைசி விக்கெட்டான ஆண்டர்சனை லெக்ஸ்பின்னில் வீழ்த்தினார். ஆப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட் ஆக பிட்ச் ஆகி ஆண்டர்சனை நோக்கி பெரிய அளவில் திரும்பியது. அவர் கட் செய்ய முயன்றார், பந்து கிளவ்வில் பட்டு ஸ்லிப்புக்கு மேல் செல்ல ரஹானே பின்னால் சென்று எளிதான கேட்சை எடுக்க இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தன் 7வது டெஸ்ட் வெற்றியைச் சாதித்தது. ஆதில் ரஷீத் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் எட்ஜ்பாஸ்டனுக்குப் பிறகு 200 ரன்களையும் அற்புதமான கேட்சையும் ஆணித்தரமான, ஆக்ரோஷ கேப்டன்சியும் செய்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி கூறியதாவது:

அனைத்திற்கும் முதலாக, நாங்கள் ஓர் அணியாக இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அந்த மக்கள் பெரிய துயரத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், எங்களால் முடிந்தது வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிப்பதே.

அனைத்துத் துறைகளிலும் மகிழ்வுக்குரிய ஆட்டம். இது எங்களுக்கு ஒரு முழுமையான டெஸ்ட் போட்டியாகும். தென் ஆப்பிரிக்காவில் 3டெஸ்ட் இங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே முற்றிலும் எங்களை வீழ்த்த முடிந்துள்ளது என்பதை நான் எப்போதும் கூறிவருகிறேன். அந்த முழுத் தோல்வி லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஏற்பட்டது.

பேட்ஸ்மெனாக மேம்படுத்துவது பற்றி பேசினோம், அதைத்தான் செய்தோம். பவுலர்களுக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்தோம். பவுலர்கள் 20 விக்கெட்டுகளை மறுபடியும் வீழ்த்த ஆர்வமாக இருந்தார்கள், எனவே பேட்ஸ்மெனாக அதற்குத் தகுந்த களத்தை அமைத்துக் கொடுத்தோம். ஸ்லிப் கேட்சிங்குடன் திறமைகள் சேரும்போது டெஸ்ட் போட்டிகளில் வெல்கிறோம்.

ரஹானே முக்கியம்...

ரஹானேவின் இன்னிங்ஸ் மிக முக்கியமாக அமைந்தது. உணவு இடைவேளைக்கு முன்பு புஜாராவை இழந்த பிறகு ரஹானே பாசிட்டிவாக ஆடினார். இதற்காகத்தான் அவரை நாங்கள் விரும்புகிறோம். அவர் ஆட்டத்தின் போக்கையும், தன்மையையும் மாற்றக்கூடியவர். அதைத்தான் அவர் செய்தார்.

இங்கிலாந்து பவுலர்கள் தரமான பவுலர்கள் எனவே அவர்களுக்கு எதிராக ரன்களை எடுக்க தைரியம் தேவை. இதைத்தான் முதல் இன்னிங்ஸில் ரஹானேவும், 2வது இன்னிங்சில் புஜாராவும் செய்தனர்.

மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிப்பு!

என்னுடைய இன்னிங்சை நான் மனைவி அனுஷ்காவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்தான் என்னை ஊக்குவித்துக் கொண்டேயிர்ந்தார், அவர்தான் நான் பாசிட்டிவாக களத்தில் செயல்படக் காரணமாக இருந்தவர். இந்தத் தொடரில் நல்ல வேகமாக வீசிய 4 பந்து வீச்சாளர்களும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எங்கள் உடற்தகுதி, மனநிலை என்று அனைத்திலும் கவனம் செலுத்தினோம். தளர்வான பந்துகளைக் குறைத்தோம். இன்னும் டெஸ்ட் போட்டிகளை ஆட ஆட அவர்கள் இன்னும் மேம்படுவார்கள். அவர்கள் ஓடி வந்து வீசுவதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.

தொடரை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நாங்கள் நம்பவில்லை என்றால் இப்போது 2-1 என்று தொடர் ஆகியிருக்காது. எப்போதுமே முன்னேறிச்செல்லவும் வெற்றி பெறவும்தான் நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x