Published : 21 Aug 2018 03:43 PM
Last Updated : 21 Aug 2018 03:43 PM

சேவாக்கைத் தொட்டு அசாரூதீன் சாதனையை முறியடித்த கோலி: டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் சேவாக்கின் சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, கேப்டனாக இருந்து இங்கிலாந்து அதிக ரன்கள் அடித்த முகமது அசாரூதீனின் சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை இழந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 521 ரன்கள் இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில், விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டி அரங்கில் 23-வது சதத்தை 118-வது இன்னிங்ஸில் எட்டி சேவாக்கின் டெஸ்ட் சதத்தை சமன் செய்தார். சேவாக் டெஸ்ட் போட்டியில் 23 சதங்கள் அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கேப்டனாக இருந்து இங்கிலாந்தில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இதுவரை முன்னாள் கேப்டன் அசாருதீன் முதலிடத்தில் இருந்தார். அவர் இங்கிலாந்தில் 426 ரன்கள் சேர்த்திருந்தார். அந்த சாதனையை விராட் கோலி முறியடித்து, 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 490 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலிலும் 1,827 ரன்கள் சேர்த்து கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி சராசரியாக 60 ரன்கள் சேர்த்தார். 2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1,693 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 40 ரன்களாகும்.

கேப்டனாக கோலி பொறுப்பேற்ற பின் விராட் கோலி அடிக்கும் 16-வது சதம் இதுவாகும். இதன் மூலம் கேப்டனாக இருந்து அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை கோலி பிடித்துள்ளார்.

முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 19 சதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார். விராட் கோலி 16-வது சதத்துடன் 3-வது இடத்தில் உள்ளார்.

மேலும், ஒரு அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு அதிகமாக ஸ்கோர் செய்த கேப்டன்களிலும் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை கோலி இங்கிலாந்துக்கு எதிராக 5 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.

2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி 4 முறையும், மறைந்த கேப்டன் பட்டோ 3 முறையும் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். மேலும், இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் விளையாடியதில் கோலி 700 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x