Published : 21 Aug 2018 09:16 AM
Last Updated : 21 Aug 2018 09:16 AM

ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கம் வென்று வினேஷ் போகத் சாதனை:  துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரு வெள்ளி பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார், லக்சய் ஷியோரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இறுதி சுற்றில் தீபக் குமார் 247.7 புள்ளிகள் சேர்த்து 2-வது இடம் பிடித்தார். சீனாவின் ஹாரோன் யங் 249.1 புள்ளிகள் குவித்து ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். சீன தைபேவின் ஷாவ்சுவான் லூ 226.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான ரவி குமார் 205.2 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்தார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா இறுதி சுற்றில் 186 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆடவருக்கான ட்ராப் பிரிவில் இந்தியாவின் லக்சய்  39 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். சீன தைபேவின் குன்பி யங் 48 புள்ளிகள் குவித்து சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். கொரியாவின் டெயேமிங் அஹ்ன் 30 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரரான மனவ்ஜிங் சிங் சாந்து 26 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்தார்.

பாட்மிண்டனில் தோல்வி

பாட்மிண்டனில் மகளிருக்கான அணிகள் பிரிவில் இந்தியா கால் இறுதியில் ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-18, 21-19 என்ற நேர் செட்டில் முதல் நிலை வீராங்கனையான அகானே யகுச்சியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 41 நிமிடங்களில் முடிவடைந்தது. இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவில் ஷிக்கி ரெட்டி, ஆர்த்தி சுனில் ஜோடி 15-21, 6-21 என்ற நேர் செட்டில் யுகி புகுஷிமா, சயாகா ஹிரோடா ஜோடியிடம் வீழ்ந்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

இதன் பின்னர் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் 11-21, 25-23, 16-21  என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் போராடி நோஸோமி ஒகுஹராவிடம் தோல்வியடைந்தார். இதனால் இந்திய அணி 1-2 என பின்தங்கிய நிலையில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரட்டையர் பிரிவில் சிந்து, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 13-21, 12-21 என்ற நேர் செட்டில் மிசாகி மட்சுடோமோ, அயாகா தகாஹஸி ஜோடியிடம் வீழ்ந்தது.

முடிவில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தென் கொரியாவின் இன்ஜியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய நிலையில் இம்முறை கால் இறுதியுடன் வெளியேறியுள்ளது.

ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி கால் இறுதியில் இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-23, 22-20, 10-21 என்ற செட் கணக்கில் அந்தோனி சினிசுகாவிடம் தோல்வியடைந்தார்.

இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி 21-19, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடி கெவின் சஞ்ஜெயா, மார்கஸ் கிடியோன் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது. 0-2 என பின்தங்கிய நிலையில் ஒற்றையர் ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரணாயி 21-15, 21-19 என்ற நேர் செட்டில் ஜோனாதன் கிறிஸ்டியை தோற்கடிக்க சிறிது நம்பிக்கை பிறந்தது. ஆனால் இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி  14-21, 18-21 என்ற நேர் செட்டில் பஹார் அல்பியான், முகமது ஜோடியிடம்

வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

கபடி

மகளிர் கபடியில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 33-23 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 43-12 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியிருந்தது. இந்திய அணி தனது ஆட்டங்களில் இன்று இலங்கை மற்றும் இந்தோனேஷியாவுடன் மோதுகிறது.

ஆடவர் பிரிவு கபடியில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 7 முறை சாம்பியனான இந்திய அணி 23-24 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆசிய விளையாட்டில் 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி தற்போதுதான் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நேற்றுமுன்தினம் 50-21 என்ற கணக்கில் வங்கதேசத்தையும், 44-28 என்ற கணக்கில் இலங்கையையும் வீழ்த்தியது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது.

மல்யுத்தம்

மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில், ஜப்பானின் ஐரி யுகியை எதிர்த்து விளையாடினார். இதில் வினேஷ் போகத் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா தண்டா அரை இறுதியில் 0-10 என்ற கணக்கில் இருமுறை உலக சாம்பியனான வட கொரியாவின் ஜோங் மயோங்கிடம் தோல்வியடைந்தார். இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பூஜா வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் கட்சுகி சககாமியை எதிர்கொண்டார். இதில் பூஜா 1-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதேபோல் 62 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சாக் ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டையன்பெகோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் சாக் ஷி மாலிக் தொடக்கத்தில் 4-0 என முன்னிலை வகித்தார். ஆனால் கடும் சவால் கொடுத்து டையன் பெகோவா 6-4 என்ற முன்னிலையை பெற்றார். கடைசி கட்டத்தில் சாக் ஷி மாலிக் தற்காப்பில் கவனம் செலுத்தியதால் நெருக்கமான கட்டத்தில் 7-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த

சாக் ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், கொரியாவின் ரிங் ஜோங் சிம்னுடன் மோதினார். இதில் சாக் ஷி மாலிக் 2-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

53 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைல் கால் இறுதியில் இந்தியாவின் பிங்கி 0-10 என்ற கணக்கில் மங்கோலியாவின் சுமியாவிடம் தோல்வியடைந்தார். ஆடவருக்கான 125 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சுமித் மாலிக் 0-10 என்ற கணக்கில் ஈரானின் பர்விஸ் ஹபிபஸ்மான்ஜிடம் தோல்வியடைந்தார். எனினும் பர்விஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியதால் ரப்பேஜ் முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றார் சுமித் மாலிக்.

இதில் சுமித் மாலிக் முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஒலெக் போல்டினை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சுமித் மாலிக் 0-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டேவிட் மோட்ஸ்மான்ஸ்விலியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

வாலிபால்

ஆடவருக்கான வாலிபாலில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங் காங் அணியை வீழ்த்தியது. ஆடவருக்கான ஹேண்ட்பாலில் இந்தியா 45-19 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-0, 7-6 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் ஹாங் கிட் வாங்கை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 6-2, 6-0 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் ரபிக் பிட்ரியாடியை தோற்கடித்தார். இதேபோல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் நேபாளத்தின் பஜ்ராஜ்சாரியா, அபிஷேக் பஸ்டோலா ஜோடியை வீழ்த்தியது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் குமுல்யா பீட்ரைஸை எளிதாக வென்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கர்மான் கவுர் தாண்டி 6-1, 6-0 என்ற நேர் செட்டில் மங்கோலியாவின் ஜர்கல் அல்டன்சர்னியை தோற்கடித்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி 6-0, 6-0 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் சாரா மெஹ்பூப் கான், உஷ்னா சுகைல் ஜோடியை வீழ்த்தியது.

ஹாக்கியில் அபாரம்

ஆடவர் பிரிவு ஹாக்கியில் இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 17-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், சிம்ரன்ஜித் சிங், தில்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 கோல்களும், ரூபிந்தர் பால் சிங் 2 கோல்களும், அமித் ரோஹிதாஸ், விவேக் சாகர் பிரசாத், எஸ்.வி.சுனில், லலித் குமார் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங், ஹர்மான்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

8-வது இடம்

செபக் டக்ராவில் ஆடவருக்கான ரெகு அணிகள் பிரிவில் இந்திய அணி 21-16, 19-21, 21-17 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணி இந்தப் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.  2-வது நாளின் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் 8-வது இடம் வகித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலத்துடன் மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x