Published : 20 Aug 2018 09:39 AM
Last Updated : 20 Aug 2018 09:39 AM

‘கபில் ஆக விரும்பவில்லை, பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன்’

கிரேட் ஆல்ரவுண்டர் கபில்தேவுடன் ஒப்பிட வேண்டாம், நான் பாண்டியாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்று ஹர்திக் பாண்டியா கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று 29 பந்துகளில் இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் முதுகெலும்பை உடைத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா. இது மேட்ச் வின்னிங் ஸ்பெல்லாக வேண்டும் என்றால் 2வது இன்னிங்ஸிலும் இதே போன்று வீச வேண்டும்.

தன் அறிமுக டெஸ்ட்டில் 50 ரன்களையும் 3வது டெஸ்ட் போட்டியில் சதமும் எடுத்தார். இதனையடுத்து அடுத்த கபில் என்று ஊடகங்கள் தூபம் போடத் தொடங்கின. ஆனால் அவர் சொதப்பவும் அனைவரும் மீண்டும் கபில்தேவுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூப்பாடு போட்டனர். இப்போது அவர் 5 விக்கெட் வீழ்த்தியதையடுத்து மீண்டும் கபில் என்று கூறிவிடுவார்களோ பிறகு திட்டுவார்களோ என்று அஞ்சி அவரே நான் கபில் அல்ல, பாண்டியாதான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியா கூறியதாவது:

இதில் என்ன பிரச்சினை என்றால் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள், அடுத்த கபில் என்கிறீர்கள் பிரச்சினையில்லை ஆனால் உடனே தவறு நிகழ்ந்து விட்டால் கபில்தேவா, இவரா? என்று கூறுகிறீர்கள். நான் ஒரு போதும் கபில் ஆகவிரும்பவில்லை, ஹர்திக் பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன்.

நான் ஹர்திக் பாண்டியாவாகவே 40 ஒருநாள் போட்டிகள் 10 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளேன், கபில்தேவாக அல்ல. கபில் அவரது காலக்கட்டத்தில் ஒரு கிரேட். நான் ஹர்திக் பாண்டியாவாகவே இருக்கிறேன், கபிலுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ஒப்பிடாத போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.

இதே போன்று பந்து வீசவே விரும்புகிறேன். நான் வைடாகச் சென்று வீசும்போது பேட்ஸ்மென்கள் பந்து உள்ளே வருகிறது என்று கருதுகின்றனர் ஆனால் பந்து லேட் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆனது.

இஷாந்த் சர்மாவும் என்னிடம் கூறும்போது விக்கெட்டுகளின் பின்னால் ஓடாதே, சரியான இடத்தில் பந்தைப் பிட்ச் செய்தால் உன்னிடம் அவர்களை வீழ்த்தும் திறமை இருக்கிறது என்றார். டைட்டாக வீசுவோம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்பதுதான் நாங்கள் பேசியது. அவர்கள் பொறுமையைச் சோதித்தோம் தற்போது அதன் முடிவு எங்களுக்குச் சாதகமானது.

என்னுடைய 2வது 5 விக்கெட் ஸ்பெல் இது, ஆனால் முதல் 5 விக்கெட்டை விட இது முக்கியமான இடத்தில் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. எனக்கு சதம் அடிப்பதை விட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்தான் மகிழ்ச்சி.

இவ்வாறு கூறினார் பாண்டியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x