Published : 18 Aug 2018 06:21 PM
Last Updated : 18 Aug 2018 06:21 PM

நல்ல தொடக்கத்துக்குப் பிறகு 3விக். வீழ்த்தி கோலியின் முகத்தில் வேதனையை வரவழைத்த கிறிஸ் வோக்ஸ்

டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி தவண், ராகுல் கொடுத்த நல்ல தொடக்கத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அரைசதக் கூட்டணி அமைத்த தொடக்க வீரர்களாகத் திகழ்ந்தனர் ராகுலும் தவனும், இருவரும் சேர்ந்து 60 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

ஷிகர் தவண் ஷார்ட் பிட்ச் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துகளை தைரியமாக கட் ஷாட்கள் ஆடி 3 பவுண்டரிகள் அடித்து ஆடினார், ஜேம்ஸ் ஆண்டர்சனை இருமுறை பிளிக் செய்து அடித்த பவுண்டரிகளுடன் 7 பவுண்டரிகள் அடித்து 35 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் ஒரு பந்தை குட்லெந்தில் பிட்ச் செய்து குறுக்காகப் பந்தை வெளியே எடுத்தார், தவண் ஸ்கொயர் ஆனார். விளைவு எட்ஜ் ஆகி பட்லரிடம் தஞ்சமடைந்தது.

ராகுல் இவரும் கொஞ்சம் தைரியமாக ஆடினார், இவரும் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக் கொண்டிருந்த கிறிஸ் வோக்ஸ் ஒரு பந்தை உள்ளே கொண்டுவந்தார், கடுமையாக ஸ்விங் ஆன பந்தை ராகுல் கால்காப்பில் வாங்கினார், எராஸ்மஸ் அவுட் என்றார், பேசாமல் போவதை விட்டு புஜாரா தூண்ட ரிவியூ செய்து அதையும் விரயம் செய்தார்.

மிகவும் சாதாரண உத்திதான் வெளியே 7-8 பந்துகளை ஸ்விங் செய்து விட்டு உள்ளே ஒரு பந்தை கொண்டு வந்தால் அவுட். ஒன்று முன்னங்காலை நீட்டி ஆடியிருக்க வேண்டும், அது அவுட் ஸ்விங்காகிவிடுமோ என்ற பயம், கிரீஸிற்குள்ளேயே நிற்கிறார், இல்லையெனில் ஸ்டீவ் ஸ்மித் போல் பின்னங்காலை ஆஃப் ஸ்டம்புக்கு நகர்த்தி பந்தை கடைசி நிமிடம் வரை ஸ்விங் ஆகவிட்டு தடுத்தாடலாம், ஸ்மித் இதனை ஃபைன் லெக் பவுண்டரிக்கே அடித்தாலும் அடிப்பார்.

புஜாரா மீண்டும் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து கடினமாக உழைத்தார், அவருக்கு பிராட், ஸ்டோக்ஸ், வோக்ஸ் அனைவருமே இன்ஸ்விங்கர்களை வீசி படுத்தி எடுத்தனர். ஆனால் வோக்ஸ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதைச் சரியாகவே ஹூக் செய்யும் முடிவை எடுத்தார், ஆனால் ஷாட் சரியாகச் சிக்காமல் டீப் ஸ்கொயர்லெக்கில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்தார். இந்தப் பந்துக்கு விக்கெட்டா என்று வோக்ஸ் முகத்தில் ஒரே ஆச்சரியம். அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்காமல் விட்டுவிடுவது, இல்லையெனில் வெகு விரைவிலேயே இப்படிப்பட்ட ஹூக் ஷாட்களை அதற்கான தீவிர பயிற்சி இல்லாமல் ஆடுவது, இதுதான் இவரது அசட்டுத்தனம். புஜாரா ஆட்டமிழந்தவுடன் கோலி முகத்தில் வேதனையின் கீற்று தெரியத் தொடங்கியது.

விராட் கோலியை இன்ஸ்விங்கரில் படுத்தி எடுத்து வருகின்றனர், பிராட் பந்து ஒன்று கால்காப்பைத் தாக்க களநடுவர் நாட் அவுட் என்றார், பிராட் ரிவியூ செய்தார், ஆனால் நாட் அவுட் தீர்ப்பு தக்கவைக்கப்பட்டது, கோலி 4 ரன்களில் உள்ளார்.

கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x