Published : 18 Aug 2018 09:40 AM
Last Updated : 18 Aug 2018 09:40 AM

ஆசிய விளையாட்டு இன்று தொடக்கம்- பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்கள்

ஆசிய கண்டத்தின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில்  45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள்  கலந்து கொள்கின்றனர்.  மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 572 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மயல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இம்முறை 36 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. 2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தையே பிடித்திருந்தது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வழக்கம் போன்று இம்முறையும் சீனாவே அதிக பதக்கங்களை வேட்டையாடும் என கருதப்படுகிறது. அந்த நாட்டுக்கு தென் கொரியா கடும் சவால் அளிக்கக்கூடும்.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடக்க விழா கோலாகலமாக ஜகார்த்தாவில் உள்ள ஜெலரோ பங் கர்னோ மைதானத்தில் நடைபெறுகிறது. 7.45 மணிக்கு வீரர்கள் அணிவகுப்பு நடைபெறும். இதில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்தியா சார்பில் தேசிய கொடியை  ஏந்திச் செல்கிறார்.

பாட்மிண்டன்

பி.வி.சிந்து: பெரிய அளவிலான தொடர்களில் 4 முறை தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பி.வி.சிந்து தவறவிட்டுள்ளார். இதனால் பட்டம் வெல்லும் அதிர்ஷ்டம் இல்லாத வீராங்கனை என்ற முத்திரை சிந்து மீது படியத்தொடங்கி உள்ளது. இந்த அவப்பெயரை சிந்து, ஆசிய விளையாட்டுப் போட்டியின் வாயிலாக உடைக்க முயற்சிக்கக் கூடும்.

சாய்னா நெவால்: இந்திய பாட்மிண்டனில் மகளிர் பிரிவில் புரட்சி செய்த சாய்னாவிடம் தொடர்ச்சியாக சீரான திறனை வெளிப்படுத்தாதது பெரிய குறையாக உள்ளது. அவரது செயல் திறன் ஏற்ற, இறக்கங்களாகவே இருந்து வருகிறது. எனினும் திறமை, அனுபவம் ஆகியவற்றால் பதக்கம் வெல்வதற்கான ரேஸில் பயணிக்கவே செய்கிறார் சாய்னா நெவால்.

கிடாம்பி ஸ்ரீகாந்த்: கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் பிரிவில் பதக்கம் வெல்லக்கூடிய முக்கியமான வீரராக கருதப்படுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தை தொட்டிருந்த ஸ்ரீகாந்துக்கு சீனா, இந்தோனேஷியா, ஜப்பான் வீரர்களிடம் இருந்து கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

மல்யுத்தம்

பஜ்ரங் பூனியா: ஹரியாணாவைச் சேர்ந்த 24 வயதான பஜ்ரங் பூனியா கடந்த 2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்த ஆண்டில் 65 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் கோல்டு கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி மற்றும் ஜார்ஜியா, இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று சிறந்த பார்மில் உள்ளார்.

சுசில் குமார்: வெற்றிகரமான ஒலிம்பியன்களில் சுசில் குமாரும் ஒருவர். எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் தோல்வியை தழுவினார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் அடைந்த முதல் தோல்வியாக இது அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வீரர்கள் தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து சுசில் குமாருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்திய தோல்வி அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள சுசில், தன் மீதான அழுத்தங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கக்கூடும்.

வினேஷ் போகத்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் இருந்த வினேஷ் போகத் காயம் அடைந்து வெளியேறியது அனைவரது இதயங்களையும் நொறுங்கச் செய்தது. காயத்தில் இருந்து மீண்டெழுந்த பின்னர் மிகுந்த வீரியத்துடன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கோல்டு கோஸ்ட் காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அவர், ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் தொடரிலும் அசத்தினார். இம்முறை 50 கிலோ எடைப் பிரிவில் அசத்த காத்திருக்கிறார்.

துப்பாக்கி சுடுதல்

மனு பாகர்: பள்ளி செல்லும் 16 வயதான ஹரியாணாவைச் சேர்ந்த மனு பாகர் துப்பாக்கிச் சுடுதலில் நிச்சயம் பதக்கம் வெல்லும் வீராங்கனையாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர், வீராங்கனைகளை விட இவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலகக் கோப்பை மற்றும் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள மனு பாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மீண்டும் அசத்த ஆயத்தமாக உள்ளார்.

டேபிள் டென்னிஸ்

மனிகா பத்ரா: கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டில் மனிகா பத்ரா தங்கப் பதக்கம் வென்றது ஒட்டுமொத்த இந்திய டேபிள் டென்னிஸூக்கே ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாலும், டெல்லியை சேர்ந்த மனிகா பத்ரா, தன்னை எதிர்த்து விளையாடும் வீராங்கனைகளுக்கு ஒரு வலுவான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னையை சேர்ந்த சத்யன், சரத் கமல் ஆகியோரும் பதக்கம் வெல்லும் போட்டியாளர்களாக உள்ளனர்.

டென்னிஸ்

சீனியர் வீரரான லியான்டர் பயஸ் கடைசி நேரத்தில் விலகியிருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி பதக்கம் வெல்லக்கூடியவர்களாக கருதப்படுகின்றனர். ரோகன் போபண்ணா தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்கிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக உள்ளார். நியூபோர்ட் நகரில் நடை பெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டி வரை ராம்குமார் கால்பதித்திருந்ததால் பெரிய அளவிலான தொடரில் வெற்றி பெறுவதற்கான திறன் அவரிடம் இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு 6-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை வீழ்த்திய ராம்குமார் ராமநாதன் கூடுதல் தன்னம்பிக்கையுடன் விளையாடும் பட்சத்தில் பதக்கத்துடன் தாயகம் திரும்ப வாய்ப்புள்ளது.

தடகளம்

ஹிமா தாஸ்: அசாம் மாநிலத்தில் கந்துலிமரி என்ற கிராமத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீராங்கனையான ஹிமா தாஸ் கடந்த ஜூலை மாதம் பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச தடகள உலக சாம்பியன் ஷிப்பில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 51.46 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் தடகளத்தில் டிராக் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் அனைத்து வகையிலான வயது பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தினார். கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 6-வது இடத்தையே பிடித்திருந்த ஹிமா தாஸ், பின்லாந்து போட்டியின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் மீது குவியச் செய்தார். முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஹிமா தாஸ் நிச்சயம் பதக்க மேடை ஏறக்கூடும் என கருதப்படுகிறது.

நீரஜ் சோப்ரா: ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற யு-20 தடகள சாம்பியன் ஷிப்பில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் சீரான முன்னேற்றம் கண்டார். கோல்டு கோஸ்ட் காமன் வெல்த் போட்டியில் 86.47 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும் தோகா வில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் 87.43 மீட்டர் தூரம் எறிந்து வியக்க வைத்தார். கடைசியாக பங்கேற்ற 4 தொடர்களில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ள நீரஜ் சோப்ரா தான் அறிமுகமாகும் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே பதக்கத்தை வேட்டையாட தயாராக உள்ளார்.

டூட்டி சந்த்: ஹார்மோன் பிரச்சினையால் பாதிக்கப் பட்ட ஓட்ட பந்தய வீராங்கனையான டூட்டிசந்த், நீதிமன்ற போராட்டத்துக்கு பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதியை பெற்றுள் ளார். ஒடிசாவை சேர்ந்த 22 வயதான டூட்டி சந்த், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடை யிலான தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தின் அரை இறுதி சுற்றில் பந்தய இலக்கை 11.29 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்திருந்தார். இந்தத் தொடரில் இறுதி சுற்றில் இலக்கை 11.32 விநாடிகளில் கடந்து தங்கம் வென்ற அவர், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்க காத்திருக்கிறார்.

சீமா பூனியா : தடகள வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தில் இருக்கும் 35 வயதான சீமா பூனியா, கடந்த முறை வட்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இம்முறை பதக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யக்கூடும். அவருக்கு சீன வீராங்கனைகள் கடும் சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

ஜிம்னாஸ்டிக்ஸ்

தீபா கர்மகார்: முழங்கால் காயம் காரணமாக கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காத தீபா கர்மகார், துருக்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலக சேலஞ்ச் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து 4-வது இடத்தை பிடித்த தீபா கர்மகார் இம்முறை ஆசிய விளையாட்டில் நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடும்.

குத்துச்சண்டை

சோனியா லேதர்: உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சோனியா லேதர், 57 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார். முன்னணி வீராங்கனையான மேரிகோம் இந்தத் தொடரில் பங்கேற்காத நிலையில் சோனியா லேதர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ஷிவா தாபா: இரு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஷிவா தாபா, கடந்த 2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் கால் இறுதி வரை முன்னேறி யிருந்தார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ள ஷிவா தாபா இம்முறை மிகுந்த நம்பிக்கையுடன் ஆசிய விளையாட்டுப் போட்டியை சந்திக்கிறார்.

விகாஷ் கிருஷ்ணன்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருமுறை பதக்கம் வென்றுள்ள விகாஷ் கிருஷ்ணன் இம்முறையும் பதக்கம் வெல்லக்கூடிய போட்டியாளராகவே உள்ளார். கோல்டு கோஸ்ட் காமன் வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்திய விகாஷ் கிருஷ்ணன், ஆசிய விளை யாட்டில் 3-வது முறையாக பதக்கம் வேட்டையாட ஆயத்தமாக உள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x