Last Updated : 17 Aug, 2018 02:04 PM

 

Published : 17 Aug 2018 02:04 PM
Last Updated : 17 Aug 2018 02:04 PM

“அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டு ஒலிம்பிக்கில் பதக்கம் எப்படி வெல்ல முடியும்”: பிடி உஷா ஆதங்கம்

அரிசி கஞ்சியும், மாங்காய் ஊறுகாயும் சாப்பிட்டதால் என்னால், கடந்த 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை. இந்திய வீரர்களுக்கு போதுமான அளவில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படவில்லை என்று நட்சத்திர தடகள வீராங்கனை பிடி உஷா ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் நடந்தது. அப்போது, இந்தியாவின் சார்பில் பங்கேற்ற, கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிடி உஷா பங்கேற்றார்.

400 மீட்டர் தடகள ஓட்டத்தில் பங்கேற்ற பிடி உஷாவால் வெண்கலப்பதக்கத்தையே கைப்பற்ற முடிந்தது. இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரோமானிய நாட்டு வீராங்கனை கிறிஸ்டியானா கோஜோகோரோவும் ஒரே நேரத்தில் எல்லைக் கோட்டை தாண்டினார்கள். ஆனால், இருவருக்கும் இடையே நொடிப்பொழுதில் மைக்ரோ வினாடிகளில் மாற்றம் இருந்ததால், தங்கப்பதக்கத்தை பிடி உஷாவால் வெல்ல முடியவில்லை.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, வசதிகள் குறித்து பிடி உஷா சமீபத்தில் ஈக்வடார் லைன் இதழுக்கு உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய தடகள வீரர் வீராங்கனைகளுக்கு போதுமான வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. அதிலும் குறிப்பாக ஊட்டச்சத்து மிக்க உணவுகள் இல்லை.

அமெரிக்க மக்கள் சாப்பிடும் உணவுகள்தான் அங்கு கிடைத்தன. எனக்கு முறையான ஊட்டச்சத்து மிக்க உணவு இல்லாத காரணத்தால், நான் அரிசி கஞ்சியும், கேரளாவில் மாங்காய் மூலம் செய்யப்படும், கடுமாங்கா சார் எனச் சொல்லப்படும் ஊறுகாயை வைத்து சாப்பிட்டு போட்டியில் பங்கேற்றேன்.

அரிசி கஞ்சியையும்,மாங்காய் ஊறுகாயையும் சாப்பிட்டு ஒரு வீராங்கனை ஒலிம்பிக் போட்டியில் எப்படி பதக்கம் வெல்ல முடியும். என்னால் முடிந்தவரை வெண்கலப்பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால், என்னுடைய ஓடும் திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது.

மற்ற நாட்டு வீரர்கள், வீராங்கனை சாப்பிடும்போது, அவர்களின் உணவுகளையும், அனுபவிக்கும் வசதிகளையும் நாங்கள் பொறாமையுடன் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டோம். எங்களுக்கும் அதுபோன்ற வசதிகள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டோம்.

அமெரிக்காவில் கிடைக்கும் வேகவைத்த உருளைக் கிழங்கு, அரை வேக்காடு கோழிக்கறி, சோயா சாஸ் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள்தான் அங்கு கிடைக்கும் என்று கூறியிருந்தால், மாற்று ஏற்பாடு செய்திருப்போம். ஆனால் ஒருவர் கூட அமெரிக்க உணவுகள் மட்டுமே கிடைக்கும் என்ற தகவலைக் கூறவில்லை. இதனால், வேறு வழியின்றி அரிசி கஞ்சியையும், ஊறுகாயும் வைத்து சாப்பிட்டேன்.

நான் தடகளப் போட்டியின் மிகச்சரியான தொடக்கத்தை அளித்து, முதல் 6.2 வினாடிகளில் 45 மீ்ட்டரைக்க டந்துவிட்டேன். ஆனால், தொடர்ந்து அதேவேகத்துக்கு எனது உடலையும், வேகத்தையும் எடுத்துச் செல்ல போதுமான சத்து, திறன் என் உடலில் இல்லை. கடைசி 35 மீட்டருக்குள் செல்லும் போது என்னையும் அறியாமல் என் உடல்திறன் குறைந்ததை உணர முடிந்தது.

இப்போது எனது கவனம்முழுமையும் நான் நடத்தும் தடகள பயிற்சிப் பள்ளியில்தான் இருக்கிறது. இங்கிருந்து பயிற்சி பெற்று செல்லும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டுக்கு பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். 18 வீராங்கனை பயிற்சி பெற்று வருகிறார்கள் இவ்வாறு பிடி உஷா தெரிவித்தார்.

இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பிடி உஷா இதுவரை 18-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பல்வேறு போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x